Monday, November 17, 2014

பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!

பாவலராவது என்பது
பிறக்கும் போதே வந்ததல்ல
எமது முயற்சியின் விளைவாய் மலர்ந்ததே!
அன்று பத்திரிகை, மூ.மேத்தாவின் நூல்கள்
இன்று வலைப்பூக்கள் என்றெல்லாம் படித்தே
எவராச்சும் எழுதிய பா/ கவிதை போல
பாப்புனைய முயற்சி செய்கிறேன் - எனக்கும்
பாவலராக விருப்பம் (ஆசை) இருப்பதால் தான்!
பிறப்பிலேயே பாவலர்/ கவிஞர் உருவானாரா
பிறந்த பின் வாழும் வேளை
பாவலர்/ கவிஞர் உருவாக்கப்பட்டாரா
என்றெல்லாம் அரங்குகள் தோறும்
பட்டிமன்றங்கள் நிகழ்ந்தாலும்
பாவலர்/ கவிஞர் பிறக்கவில்லை
சூழலால் உருவாக்கப்படுகின்றார் என்றே
என் உள்ளத்தில் மலர்ந்த முடிவு!

பாப்புனைய விரும்பும் உறவுகளே
எனது எண்ணங்களைப் பார்த்து
பாப்புனையும் திறனைப் பெருக்கியிருந்தாலும்
தீபாவளி (2014) நாளை முன்னிட்டு நடாத்திய
பாப்புனையும் திறன்காண் போட்டியில்
பங்கெடுத்த எல்லோருக்கும் வாழ்த்துகள்!
எண்ணங்களை வெளிப்படுத்தும் பா/ கவிதை
கண்ணால் படம் பார்த்ததும் - உங்கள்
உள்ளத்தில் தோன்றிய பா/ கவிதை என
இரண்டு பா/ கவிதை புனைந்த - உங்களுக்கு
பாப்புனைதலில் பட்டறிவு கிட்டியிருக்குமே!
போட்டிகளில் வெற்றி பெறமுன்
போட்டிகளில் பங்கெடுத்த முயற்சியே
பாவலராகக் கிடைத்த வெற்றி என்பேன்!

போட்டிகளில் பங்கெடுத்தவருக்குக் கொண்டாட்டம்
வெற்றியாளரைத் தெரிவு செய்வதில்
நடுவர்களுக்குத் தான் திண்டாட்டம் என்பேன்!
நண்பர் ரூபன் சுட்டிக் காட்டியது போல
ஐம்பத்திநான்கு பாப்புனையும் ஆற்றலாளர்களிடையே
பத்துப் பாப்புனையும் திறனாளர்களை
பாப்புனையும் நுட்பங்களை வைத்தே
நடுவர்களும் தெரிவு செய்திருப்பர் என்பேன்!
ஏனெனில்
போட்டியில் பங்கெடுத்த எல்லோருமே
பாப்புனைதலில் வென்றவர்களே என்பேன்!!
எப்படியிருப்பினும்
பாப்புனைந்து போட்டியில் வென்ற
பத்துப் பேரையும் வாழ்த்துங்கள் - அந்த
பத்துப் பேரினது பாக்கள் - நாம்
கற்றுக்கொள்ள வழிகாட்டும் என்பேன்!
பத்துப் பேரினது இருபது பாக்களைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்,,,
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html
பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!


Monday, November 10, 2014

யாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்!

அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின்
ஊமைக்கனவுகள் தளம் பார்த்தீர்களா?
யாப்புச் சூக்குமம் முதற் பகுதியில்
அசை, சீர் பற்றிய விரிப்புத் தான்...
அழகாய் ஐந்து குறளைத் தந்தார்
அசை, சீர் பிரித்து அலகிட்டால்
அடுத்த பதிவில் - உங்களை
வெண்பா எழுத வைத்துவிடுவேன் என்றாரே!
நானும் படி, படியென்று படித்த பின்
அடுத்த பதிவிற்குள் தலையை ஓட்டினேன்...
விதி கூறிச் சொற்களைக் கூறிடுதல்,
எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்,
அடி வரையறை தொட்டு அப்பால்
வெண்பா, இலக்கண நுட்பங்கள் கூறியே
புலவர் வெண்பா புனைய வைத்துவிடுகிறாரே!
வெண்பா புனைய வைத்த புலவர்
உண்மையில் தானெழுதிய தேர்வாக - எம்
கற்றலில் முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்தவே
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' என்றொரு
பதிவைப் பாரென ஈற்றில் பகிர்ந்தாரே!

பாபுனைய விரும்பும் உள்ளங்களே!
யாப்பறிந்து வெண்பாப் புனைய
ஊமைக்கனவுகள் பக்கம் வாருங்கள்...
யாப்புச் சூக்குமம் - 01 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
புகைவண்டியில் செல்லும் யாப்பிலக்கணம் படித்தேன்
அதுவென் உள்ளத்தில் ஊருதே என்றிருக்க
யாப்புச் சூக்குமம் - 02 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html
புகைவண்டியால இறங்கியதும் தொடங்கினாரே
வெண்பா இலக்கணம் இதுவென உரைத்தாரே!
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post_13.html
"தளை தவறினால் யாரும் - உங்கள்
தலையை எடுத்துவிடப் போவதில்லை.
தவறை இனம் காணப் பழகுங்கள்." என்ற
வழிகாட்டலைப் பட்டறிவோடு கலந்து
வெண்பாப் புனைகையில் கற்றுத்தேறென
முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்துகிறாரே!
யாப்புச் சூக்குமம்-III இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/12/iii.html
விருத்தத்தின் எலும்புக்கூடு என
விருத்தத்தின் கட்டமைப்பு
எப்படி இருக்குமெனப் பாருங்களென
ஆசிரியப்பாவை விளக்குகிறாரே!
யாப்புச் சூக்குமம் IV இல்
http://oomaikkanavugal.blogspot.com/2015/01/iv.html
விருத்தத் தூண்டில் என்ற தலைப்பின் கீழ்
"மரபுக் கவிதைகளில்
ஒரு பாடலின் சந்தம்
உங்களைக் கவருகிறது என்றால்
அதனை
இப்படிப் பிரித்துப் பார்த்துவிட்டீர்கள் என்றால்
அதன் வடிவம் உங்களுக்குப் புலப்பட்டுவிடும்.
பின்பு அந்த வடிவத்திற்கு
நீங்கள் உயிர் கொடுக்கலாம்." என வழிகாட்டி
யாப்புச் சூக்குமம் தொடரை முடித்து வைக்கின்றாரே!

அங்கே போய் - நன்றே
வெண்பா புனையக் கற்றபின்
பண்ணோடு பாபுனைந்து - நீங்களும்
செந்தமிழைப் புகழ்ந்து பாடுங்களேன்!

Wednesday, November 5, 2014

அசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்!

அண்மையில் (04/11/2014)
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
"மரபு கவிதை எழுதுவதில்
மொழி ஆளுமை நிறைய வேண்டும்.
இலக்கணத்துக்காக வார்த்தைகளைத் தேடி எழுதுவதில்
தேவை இல்லாத வார்த்தைகள் இடம் பிடித்து
கவிதையின் அழகு கெடுவதைப் பார்க்கிறேன்." என்று
தன் எண்ணத்தைப் பகிர்ந்த
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
கருத்தைப் (Comments) படித்த வேளை - அவரது
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவின் இணைப்பு - அதில்
இருக்கக்கண்டு சொடுக்கிப் படித்தேன் - அதில்
பாப்புனைய விரும்புவோருக்குப் பயன்தரும்
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி இருப்பதாக
எண்ணியதன் விளைவு தான் - அவரது
பதிவைப் பகிர விரும்ப வைத்ததே!

யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரில்
(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12)
நான் பா நடையில் பதிவு செய்த
எழுத்து, அசை, சீர் பற்றிப் படித்தவர்களுக்கு - அதனை
நினைவூட்டிக்கொள்ள உதவுமென நம்பியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படி
அசை, சீர், தளைக்கான சுருக்குவழிகளை அறி என்று
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! - நான்
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரின்
எஞ்சிய பகுதிகளை விரைவில் தர
முயற்சி செய்துகொண்டு தானிருக்கிறேன்!

"எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" " என்று
எனது முன்னைய பதிவில் எழுதியதை
கொஞ்சம் மீட்டுப் பாருங்களேன்...
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" என்றால்
பாப்புனையும் ஆற்றல் இருந்தால் தான்
பாவும் உள்ளத்தில் கருவுறும் என்பேன்!

எடுப்பாக, மிடுக்காகச் செல்ல
ஆணென்றால் பட்டுவேட்டி
பெண்ணென்றால் பட்டுச்சேலை
மணிக்கணக்காக இருந்து உடுத்தினாலும்
உடுக்க ஓர் ஒழுங்கு இருப்பது போல
உள்ளத்தில் உரசிய உண்மையைக் கூட
வெளிப்படுத்த உதவும் ஓர் ஒழுங்கு தான்
பாப்புனையும் ஆற்றல் என்பேன்! - அந்த
ஆற்றலை வளர்த்துக் கொள்ள
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்!

யாப்பறிந்து பாப்புனையும் வேளை
நேரசை, நிரையசை அறிந்து சீராக்கி
சீராக்கும் வேளை அசைபிரித்து அடியாக்கி
அடியாக்கும் வேளை தளையறிந்து தொடையாக்கி
தொடையறிந்து பாவாக்கிச் செல்லும் வேளை
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி உதவுமே! - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படியுங்களேன்!

http://gmbat1649.blogspot.in/2011/08/blog-post_29.html

Tuesday, November 4, 2014

பாவலர் நா.முத்துநிலவன் வழிகாட்டுகின்றார்!


எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!"

பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன்
வெண்பாப் புனைவதில் வல்லவரெனத் தொடங்கி
எடுத்துக்காட்டாக
எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும் என்று தொட்டு
யாப்பிலக்கண வழு சுட்டியும் விளக்கியும்
"நமது மரபுப் பாவகைகள்
எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து,
அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்று
சொல்ல மாட்டேன்." என்ற பின்
"கொட்டிக் கிடக்கும் குவியலான
பாவகைத் தங்க வைரக் கட்டிகளை எடுத்து, அதில்
வகைவகையான புதுக்கவிதை ஆபரணங்களைச் செய்து
தமிழ்த்தாய்க்குச் சூட்டுங்கள் என்றுதான்
உரிமையோடு வேண்டுகிறேன்." என்றுரைக்கும்
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டல்
பாப்புனைய விரும்புவோருக்குக் கோடி பெறுமதி!

முதலில் அகத்தியர் தான்
தமிழ் இலக்கணம் வகுத்தார் என்பது
என் கருத்து என்றாலும் - உங்கள்
எண்ணப்படி முதலாம் இலக்கண நூலாம்
தொல்காப்பியத்தில் கூட பல இடங்களில்
தனக்கு முன்னோர் கூறியதில் இருந்தே
தான் படித்துத் தெளிந்ததை வைத்தே
எழுதியதாகத் தொல்காப்பியரும் சொன்னாரெனின்
நாமும் முன்னோர் நூல்களைப் படித்தே
பாக்களைப் புனைவோம் வாருங்கள்!

அதற்காகவே பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
படிக்க வேண்டிய தொகுப்புகள் பலவுள என்று
எடுத்துக்காட்டாகத் தொடுத்துமுள்ளார்...
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
படித்துப் பயன்பெற்றுப் பெரிய பாவலராக
வாழ்த்தி நிற்பது - உங்கள்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன்!

Friday, October 31, 2014

சுவையான பாக்களை படித்தால்...


"பசுபதிவுகள்" என்ற
வலைப்பூ (Blog) ஆசிரியரும்
"கவிதை இயற்றிக் கலக்கு!" என்ற
நூலின் ஆசிரியரும்
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
தலைப்பில் ஓர் இனிய பா தந்து
எப்படிப் பா புனைகிறார் என
எமக்கு விரித்து உரைக்கிறார்
படித்துப் பாருங்களேன்!

"வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
 மண்டை முழுதும் தேடிடுவேன்;" என்றும்
"புனைவும் உணர்வும் இசைபாடும்;
 புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்றும்
பாவலர் பசுபதி கூறும் வழிகாட்டலை
பாப்புனைய விரும்புவோர் என்றும்
பாப்புனைகையிலே எண்ணிக்கொள்ளும்!

பாப்புனைய விரும்புவோர் - பலரது
சுவையான பாக்களை படித்தால்
பாப்புனைந்தவரின் கைவண்ணம் - அவர்
கையாளும் பாவண்ணம் எல்லாம்
உள்ளத்தில் இருத்திக் கொள்ளலாமே!
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
பாவலர் பசுபதியின் கவிதையை
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
படித்துச் சுவைக்கலாம் வாருங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/10/blog-post.html

Saturday, September 27, 2014

பாடல் எழுதலாம் வாங்க


பாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க
மெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க
                                                                               (பாட்டுக்)
சொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க
மெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க
                           (                                                   (சொல்லைப்)
                                                                               (பாட்டுக்)
அடிமோனை சீர்மோனை வந்திச்சா
அடியெதுகை சீரெதுகை வந்திச்சா
அடிதொடை அழகாய் வந்திச்சா
நெடில்குறில் நினைப்பில் வந்திச்சா
கோலமகள் பொருளாக வந்திச்சா
பாலநிறம் உவமையாக வந்திச்சா
அசைகூட்டிச் சீரமைக்க வந்திச்சா
இசைகூட்டிப் பாவெழுத வந்திச்சா
                                                                                (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
வேலவனே உனைப்பாட வந்தேன்
காலையிலே உனைநாடி வந்தேன்
வேளைக்குப் பதவியுயரப் போறேன்
நாளைக்குத் தேர்வெழுதப் போறேன்
இலகுவாய்த் தேர்வெழுத வரட்டும்
இலகுதாள் எனக்காய் வரட்டும்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
வேலாவா எனவெழுத வந்திச்சா
                                                                        (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
கண்டேன் அவளைக் கண்டேன்
கண்டேன் அவனைக் கண்டேன்
கண்டேன் அவர்களோடக் கண்டேன்
கண்டேன் காதலெனக் கண்டேன்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
கண்டேன் எனவெழுத வந்திச்சா
                                                                                 (பாட்டுக்)
                                                                         (சொல்லைப்)
என்னை மறந்து போவேன்
உன்னை மறந்து போவேனா?
உன்னை மறந்து போவேன்
உண்ண மறந்து போவேனா?
கண்னை மறந்து போவேன்
உறங்க மறந்து போவேனா?
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
மறந்து எனவெழுத வந்திச்சா
                                                                           (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
சின்ன இடை அழகைக் கண்டேனே
அன்ன நடை அழகைக் கண்டேனே
மெல்ல நடை நடந்து வந்தேனே
மெல்ல விலகக் கண்டு நொந்தேனே
செல்லமே உந்தன் இழுவை என்பேனே
எல்லாம் எந்தன் அகவை என்பேனே
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
காதல் வந்ததென எழுத வந்திச்சா
                                                                              (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
எழுத எண்ணினால் எழுத வருமே
அழுத கண்ணீரையும் எழுத வருமே
எழுத முயன்றால் எழுத வருமே
முழுதாய் வாழ்வையும் எழுத வருமே
இசையோடு எழுத வந்தால் வருமே
இசையோடு இசைத்துப் பாட வருமே
                                                                            (பாட்டுக்)
                                                                           (சொல்லைப்)


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

Thursday, September 18, 2014

தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்


பாபுனையும் போது
இசை (ஓசைநயம்) கருதி
சொல் எடுத்தாள முனைவோம்...
என்னமோ
வாசிக்கையிலே
"பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!" என்று
அமைந்திருந்தால்
அழகான பா/கவிதை என்பீர்!
இசை (ஓசைநயம்) அமைய
பாபுனையும் போது - நம்
முயற்சி எப்படியோ
அப்படித்தானே
பா/கவிதை அமையும் என்பதை
நாமறிவோம் - அதை
பாவலர் ரமணி அவர்கள் - தங்கள்
பாவண்ணத்தில் அளந்து விட்டதை
பாபுனைய விரும்பும்
உங்கள் எண்ணத்தில் வெளிப்படுத்த
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
கொஞ்சம் படித்துத் தேறுங்களேன்!

" சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
http://yaathoramani.blogspot.com/2014/09/blog-post_16.html "

பாபுனைய விரும்பும் வேளை
நாம் தேடித் தேறிய
சொல்களின் கூட்டழகு
அடிகளின் நடையழகு
படிக்கையில் உணரும் இசையழகு
எல்லாம் தானே துணைக்கு வருவதால்
தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்
நல்ல பாவலனாக்கப் பணி செய்யுமே!

Tuesday, September 2, 2014

உன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா? கவிதையா?

நேர்காணல் (பேட்டி) காணும் ஊடகவியலாளர்
"உங்களால் பாட முடியுமா?" என்று கேட்க
"கழிவறையில் முணுமுணுப்பேன் - ஆனால்
பாட்டா பாடவே வராது" எனப் பதில் தரும்
நம்ம திரைப்பட நடிகைகள்
கழிவறையில் படிப்பது
பாட்டா? கவிதையா?
பாட்டும் கவிதை தானே
ஓசை அழகு கவிதைக்கு அழகென்றால்
இசையோடு இசையும் பாவரிகளே
பாட்டிற்கு அழகு என்பேன்!
"என்னடி மீனாச்சி சொன்னது என்னாச்சு" என்ற
பாவரிகளில் எதுகை முட்டுவதே இசை!
"என்னத்தான் உன்னைத்தான்" என்றும்
"மயக்கமா கலக்கமா" என்றும்
பாடும் போது பாரும்
ஈற்றில் வரும் "தான்" உம் "மா" உம் தானே
இசையோடு இசைய வைக்கிறதே!
எழுதுதாளை எடுத்து
எழுத்துகோலைப் பிடித்ததும்
கவிதை வந்து விடுமா?
கவிதை வரும் வரை
எத்தனையோ எண்ணுவோம்
ஈற்றில் ஏதாவது கிறுக்குவோம்
ஓசை அழகோடு அமைந்தால்
கவிதை என்கிறோம் - அந்த
முயற்சி தானே பாடல் எழுதவும்
வழிகாட்டி நிற்கிறதே!
"பள்ளிக்குப் போகும் தோழியின்
துள்ளிப் பறக்கும் தோள் துண்டை (சோலை)
அள்ளிக் கொண்டு போனது காற்று!" என
பள்ளி, துள்ளி, அள்ளி என அமைத்து
பா/கவிதை புனைவது போலத் தான்
"என்னை நீ பார்த்த போதும்
உன்னை நான் பார்த்த போதும்
கண்கள் தானே இணைந்த போதும்
எண்ணம் தானே இணையாத போதும்
காதல் தானே துணையாக வருமா?" என
போதும், போதும், போதும், போதும் என
இசையோடு இசையும் வரிகளால்
பாடல் புனைவது இலகு அல்ல!
வழிநெடுகப் படித்தாலும் சரி
கழிவறையில் முணுமுணுத்தாலும் சரி
பாடிப் பாடிப் பழகினால் வரும்
பாடல் புனையும் ஆற்றல் என்பேன்!
"எண்ண எண்ணப் பெண்களடா
 வண்ண வண்ணக் கண்களடா" என
எடுப்பு (பல்லவி) எழுதிப் பின்
"மின்ன மின்ன நடப்பாளவை
கன்னம் நோகவே அடிப்பாளவை" என
தொடுப்பு (அனுபல்லவி) எழுதிப் பின்
"காதல் வந்து அவளைத் தொடர
மோதல் வந்து அவள் அடிக்க
கன்னம் சிவக்க அடி வேண்ட
கனவும் கலைய நானும் விழித்தேனே!" என
கண்ணி (சரணம்) அமைத்து கவிதை எழுதி
கழிவறையில் முணுமுணுத்தாலும் பாடலாகுமா?
கவிதை எழுதிப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் பரவாயில்லை
பாடல் போலப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் எழுதுங்களேன்...
ஈற்றில் என்னை மறந்தாலும்
எங்கள் தாய்த் தமிழை மறவாது
பாடலாக எழுதியே வெளிப்படுத்தவே
பாப்புனையத் தானே விரும்புங்களேன்!


யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்-012 வரை எழுதிய, நான் புதுக்கவிதை விரும்பிகளையும் இணைத்துச் செல்லவே இடைவெளி விட்டேன். ஆயினும், விரைவில் இதனைத் தொடரவுள்ளேன்.

Saturday, August 23, 2014

பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்

தீபாவளி(2014) நாளன்று
வலைப்பதிவர் ரூபன் குழுவினர்
உலகளாவிய பதிவர்களிடையே
முதலாவதாக - தாங்கள்
சுட்டும் ஒளிப்படத்தை வைத்தும்
இரண்டாவதாக - உங்கள்
உள்ளத்திலெழும் எண்ணங்களை வைத்தும்
பாப்புனையப் போர்க்களம் அமைத்துள்ளனரே!
(விரிப்பறிய : http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html)
பாப்புனைதலுக்கான போரக்களத்தில்
குதிக்கப் பின்வாங்கும் பதிவர்களே...
பந்திக்கு பின்வாங்காத நீங்கள்
பாப்புனைய முன்னேற வேண்டாமா?
எண்ணிய எல்லாம் எழுதலாம்...
பண்ணிய கூத்துக்களையும் எழுதலாம்...
பாப்புனைதலுக்கான போர்க்களத்தில்
குதிக்கலாம் வாருங்கள் பதிவர்களே!
ஒழுங்கான பா/கவிதை என்றமைந்தால்
பாட்டு (யாப்பு) இலக்கணம் ஒத்துழைக்குமே...
ஒழுங்கான பா/கவிதை அமைந்திட
எண்ணிய எண்ணங்களை எல்லாம்
விரும்பிய வண்ணங்களாய் எழுதியே
மழுங்கிய வாசகர் உள்ளங்களில்
கூர்மையான எண்ணங்கள் தோன்ற
நறுக்காக நொறுக்கிய சொற்களால்
மிடுக்கான கருத்துக்கூறி எழுதினால்
எழுதியதை வாசித்தால்
வாசிப்பவர் உள்ளம் இனிப்படைத்தாலும்
சட்டென்று சொல்ல வந்த செய்தி
உள்ளத்தைத் தைத்தால் தானே
நீங்களும் பாவலர்/கவிஞர் என்பேன்!
உள்ளத்திலெழும் எண்ணங்களை வைத்து
பாப்புனையத் தானே தெரிந்தாலும் கூட
சுட்டும் ஒளிப்படத்தை வைத்தும் கூட
பாப்புனைய வேண்டுமாமே என்றால்
பாப்புனைதலுக்குப் பின்வாங்க எண்ணலாமோ?
ஒளிப்படத்தைப் பார்த்ததும் தோன்றிய
எண்ணங்களை எழுதிக் குவித்தாலும் கூட
ஒளிப்படம் சுட்டிய செய்தியைத் தானே
பாவாக/கவிதையாக புனைந்தால் தானே வெற்றி!
"கண்டேன் தெருப்பெண்ணின் ஆடையை
ஆடையை வைத்தே எண்ணினேன்
எண்ணிய எண்ணம் சொல்கிறதே
சொல்லாத அவளது ஏழ்மையை!" என்றும்
"ஒளிப்படத்தில் மின்னும் மங்கை தானே
கங்கைக் கரையிலே பூப்பறித்து
பறித்த பூவைக் கைத்தட்டில் வைத்தே
வைத்த கண் வாங்காமலே - ஆங்கே
எங்கேயோ எவரையோ மேய்கிறாளே!" என்றும்
எடுத்துக்காட்டாகச் சில வரிகள் சிந்தித்தேன்!
எண்ணங்களின் தொகுப்போ
ஒளிப்படத்தின் செய்தியோ
பாவாக/கவிதையாக அமையலாம்
எண்ணிப் பாருங்கள்... எழுதிப் பாருங்கள்...
பாப்புனைதலுக்கான போர்க்களத்தில்
பாப்புனைவோருடன் மோதிக்கொள்ள
உலகெங்கும் இருந்தே படையெடுத்தே
போட்டியில் குதிக்கலாம் வாருங்களேன்!

உங்கள் நண்பர்கள் எல்லோரையும் இப்போட்டியில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

Friday, August 8, 2014

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!


பாபுனையும் ஆற்றல்
எல்லோருக்கும் இருக்கத் தான் செய்கிறது...
பாபுனையும் ஆற்றலை
வெளிக்கொணர முயற்சி எடுத்தவர்களே
பாவலராக/ கவிஞராக மின்னுகின்றனர்!
நீங்களும்
பாவலராக/ கவிஞராக மின்ன
பாபுனையை விரும்புங்கள்...
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
பாபுனைதலும்
எழுதி எழுதிப் பழகலாம் என்றே
பாபுனையை விரும்புங்கள்!
பாபுனையை விரும்பினால் போதும்
பாபுனையும் ஆற்றலே வந்துவிடும்...
பாபுனையும் ஆற்றல் இருப்பின்
இன்றைக்கே போட்டிக்கு வந்துவிடும்...
நாளைக்கே வெற்றி பெறலாம்
நாளையன்று
பாவலராக/ கவிஞராக மின்னலாம்!
நிற்க
கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கிய பின்
நன்றே படித்த பின் இறங்கலாமே!!
அறிமுகப் பதிவுகள்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
2014 தீபாவளிக் கவிதைப் போட்டி பற்றியறிய
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html


Monday, July 21, 2014

உன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா? கவிதையா?


வாழ்க்கையில்
முதன் முதலாகச் சந்திக்கும்
காதலர் இருவரும்
மணமுடித்து முதலிரவில் சந்திக்கும்
புதுமண இணையரும்
நடிக்கின்ற நாடகமிருக்கே - அதை
கொஞ்சம் படியுங்க இங்கே!
புதிதாய் முளைத்த புதுக் காதல்
ஆளை ஆள் சந்திக்க வைத்த - அன்று
எதை எதைப் பேசுவதெனப் புரியாமல்
ஒருவருக்கு ஒருவர் வாய் திறந்தால்
என்னங்க...
என்னங்க...
எதையாவது சொல்லுங்க...
எதையங்க சொல்லுவனங்க...
இப்படித்தானங்க நாடகம் ஆடுவாங்கோ!
முதற் காதல் முதற் சந்திப்பை
பாப்புனைந்து காட்டு என்றால்
"உன்னைப் பார்த்த கண்ணும்
என்னைப் பார்த்த கண்ணும்
இரண்டும் இரண்டும் நான்கே
நாங்க சந்தித்த நாளன்றே
உன் உள்ளம் எண்ணியதும்
என் உள்ளம் எண்ணியதும்
முன் அறியாத உண்மையை!" என
எழுதி எழுதித் தாள்களை நிரப்புவாங்கோ!
"உன் முதலிரவுப் படுக்கையறையில்
நாடகமா? கவிதையா?" என்று
தலைப்பைப் போட்டு விட்டு
புதுக் காதல் முதற் காதல்
என்றெழுதிச் சொல்ல வந்தது - அந்த
ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக
ஒரேயொரு படுக்கை அறையில்
ஒரேயொரு படுக்கையில் படுக்கவே
ஒரேயொரு முதலிரவு என்றுரைக்கவே!
விடிகாலை மூன்றுக்கு எழுந்தே
படிப்படியாப் பலதும் முடிந்திட
அடிச்சாப் போலவைந்து மணிக்கு
பொண்ணு கழுத்தை நீட்டவே
ஆணுதான் கொம்புத்தாலி கட்டவே
கற்கண்டு கொடுத்து மகிழ்ந்தே
மணமக்களை வாழ்த்தி முடியவே
மணநாள் சாப்பாடு விழுங்கினரே!
பகற்பொழுது முழுவதும் எப்படியோ
அப்படி அப்படிக் கரைந்திட
முன்னிரவு பதினொன்று நெருங்கிட
முதலிரவுப் படுக்கையும் அழகாக்கியே
முதலிரவுக்கு நேரமாச்செனச் சூழவுள்ளோர்
மணமக்களை நுள்ளியும் கிள்ளியும்
ஆகா... முதலிரவா... அம்மம்மா...
என்றெல்லாம் சொல்லி அனுப்பினரே!
முதலிரவுப் படுக்கைக்கு வந்தவங்க
விடிகாலை உடுத்திய உடுப்பை
விடுவிடெனக் கழட்டி வீசியே
ஆளுக்காள் தளர்வான உடையுடுத்தி
படுக்கையில் சரிந்துவிழ முன்னரே
பகற்பொழுதுக் களைப்பை விரட்டிவிட
பால்பழம் பங்கிட்டுப் பருகினரே!
இணையர்கள் படுக்கையில் சரிந்துவிழ
என்னங்க... இந்த இரவில...
அதுங்க... இந்த இரவை...
முதலிரவு என்று சொன்னாங்க...
நான் பிறந்து வளர்ந்துங்க...
நானும் அப்படித் தானங்கோ...
எந்த ஆணுக்கும் பக்கத்தில
நானும் படுக்கவில்லையே...
எந்த பெண்ணுக்கும் பக்கத்தில
நானும் தான் படுக்கவில்லையே...
இன்றைக்குத் தானங்கோ...
உங்களுக்குப் பக்கத்தில கிடக்கிறன்...
நானும் அப்படித் தானங்கோ...
இப்படியே இணையரும் நாடகமாட
இந்த இரவு எனக்கு முதலிரவு
எனக்கும் இது தானங்கோ...
விடிகாலை மூன்றாச்சு என்றாலும்
ஒளிநீக்கி உறங்கலாம் என்றனரே!
என்னங்க என்னை உரசுறீங்க...
இருட்டிலே ஏதேதோ பண்ணுறீங்க...
எப்பன் கொஞ்சம் தள்ளிக் கிடவுங்கோ...
உனக்கும் எனக்கும் - இதுவே
முதலிரவு என்றால் பாருங்கோ
இதெல்லாம் இயல்பு தானங்கோ...
என்றெல்லாம் ஐயம் தீர்த்த பின்னே
இருவர் இடையே இருந்த
இடைவெளி நீங்கிக் கொள்ள
உள்ளம் திறந்து பேசிக்கொண்ட
இருவரும் ஈருடல் ஓருயிராயினரே!
மணமக்கள் இருவரும் தானங்கோ
ஒட்டி உரசிப்பேசத் தொடங்கவும்
வெட்டி எறித்தான் பகலவன்
வீட்டார் தாழ்ப்பாளைத் தட்டி
விடிஞ்சாச்சு மணியேழு ஆச்சென்று
பால்த்தண்ணி பலகாரம் நீட்டியே
விடியவிடியத் தூங்கா மூஞ்சிகளான
இணையர்களின் நாடகத்தைக் கொஞ்சம்
முடித்து வைக்க முயன்றனரே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே...
நானுரைத்ததோ
முதலிரவு நாடகமென்று அறிவீரா?
பாப்புனையப் புறப்பட்டால் பாருங்கோ...
கருப்பொருளை வைத்துக்கொண்டு
கதைச்சூழல் எதுவெனச் சொல்லுவதாக
இருந்துவிடக் கூடாது பாருங்கோ...
கதைச்சூழலை வைத்துக்கொண்டே
கருப்பொருளைப் பா/கவிதை ஆக்குங்களேன்!
"இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!" என
பாப்புனைய முயன்று பாருங்களேன்!
"முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
எதுவும் நிகழாத முதலிரவு!" என்றாவது
பாப்புனைய முயன்று பாருங்களேன்!





Thursday, July 17, 2014

மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு

யாப்பறிந்து பாப்புனைந்தால் தான்
மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டென
அறிய வாய்ப்பு இருக்கு என்பேன்!
அப்படியொரு இனிப்பை தான்
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
"சொற்பொருள் பின் வருநிலையணி!" என
சுவைக்கத் தந்திருக்கிறார் பாரும்!
"ஒரு சொல் பலமுறை
ஒரே பொருளில் பயின்று வருவதும்,
முன் வந்த பொருள்
பின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும்
சொற்பொருள் பின் வருநிலையணி" என
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
விளக்கம் தந்து எடுத்துக்காட்டும் தந்து
சுவைக்க ஐந்து குறள்வெண்பா தந்து
படித்துச் சுவைத்தால் இனிக்கும் என்பதை
கீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!
http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_17.html

Tuesday, July 15, 2014

பா புனையத் தோன்றிச்சே!

வயிற்றில் பிள்ளையைச் சுமக்கும்
நிறை மாதப் பெண்
சுமைதாங்கி படும் நோக்களை யாரறிவார்?
குழந்தை நெஞ்சாங்கூட்டை
தலையாள் இடிக்குது என்பாள்...
எப்பன் சரிந்து கிடந்தால்
இடம், வலம் பார்த்து
குழந்தை
காலால் உதைக்குது என்பாள்...
"மேல் வயிற்றில் இடி என்றால்
ஆண் குழந்தையடி
கீழ் வயிற்றில் இடி என்றால்
பெண் குழந்தையடி" என்று
பழம் கிழம் ஒன்று
முணுமுணுத்து ஓயவில்லை
"அம்மோய்..... அம்மோய்.....
அடி வயிறு குத்துது..." என்றாள்
பிள்ளையைச் சுமந்தவள்...
சட்டுப் புட்டென்று
அண்டை அயலுக்குச் சொல்ல
அடுத்த வீட்டு மருத்துவிச்சியும் வந்தாள்...
"தலைப் பிள்ளையை
வீட்டில வைச்சுப் பெற ஏலாது
மருத்துவமனைக்குக் கொண்டு போ!" என்றாள்
வந்த மருத்துவிச்சியும்...
அடுத்த கணப்பொழுதில்
வயிற்றுப் பிள்ளைக்காரியை
மருத்துவமனைக்கு ஏற்றிப் பறித்தார்கள்...
அங்கே அவளும்
என்ன பிள்ளையை இறக்கி வைத்தாளோ
எவருக்குத் தான் தெரியும்!

இங்கே பாருங்கோ
பயணிகள் பேரூந்துக்கு வாயிருந்தால்
எப்படியோ
எத்தனையோ சொல்லியழுமே!
சின்னஞ் சிறு ஊர்திக்குள்ளே
பென்னம் பெரு
மலை போன்ற ஆள்களை
உள்ளே தள்ளி அடையிறாங்க...
ஊதிப் பெருத்த பூசணி போல
ஊர்தியின் நிலைமை...
பக்கக் கண்ணாடிகளை ஒதுக்கியே
ஆள்களின் மூஞ்சிகள்
வெளித்தள்ளும் நிலைமை...
வியர்வையால் குளிப்போரும்
இருக்கக்கூடும்...
"கால் கால் உளக்காதையும்..."
கீச்சுக் குரலில் பெண்ணொருத்தி...
கனவூர்தியில் பொருள் ஏற்றியது போல
இருக்கையில் இருப்போர்
நிற்போரின் பொருள்களைச் சுமப்பரே...
நிற்க இடமில்லாத போதும்
இயந்திரப் பகுதியின் மேலே கூட
கைக் குழந்தைக்காரரையும்
ஏற்றி உள்ளே அடுக்குவாங்கள்
ஓட்டுநரும் நடத்துனரும்...
ஊரிலிருந்து கிளம்பிய பேரூந்து
ஒருவாறு
நகருக்கு வந்து சேர்ந்தது...
பேரூந்து நிறுத்த முயன்ற வேளை
இயந்திரப் பகுதியின் மேலே
நின்றவளின் குழந்தை கைநழுவி
ஓட்டுனரின் கைப்பிடிக்குள் விழ
"ஐயோ என்ர குழந்தை..." என்று
குழந்தைக்காரி ஒருத்தி அழுதாள்...
"என்ர புண் காலில
பல கால்கள் உளக்கி
செந்நீர் ஓடுவதைப் பாரடா..."
என் தோளைத் தாவூம்
என் துணைவி...
யாரோ ஒருத்தி
மயங்கி விழுகிறாளெனக் கையேந்தினேன்...
"இன்றைக்குத் தான்
கடைசிச் சிகிச்சை என
மருத்துவமனைக்கு வருவதற்கிடையில
பேரூந்து நெரிசலில அண்ணே
அடி வயிறு நோகுது அண்ணே
என்னைக் கொஞ்சம் பிடியுங்கோ..." என
எவளோ பெத்த பிள்ளை
என் கைக்குள் வீழ்ந்தாளே...
தரையைத் தொட்டவாறு வந்த
பேரூந்து
ஆள்களை இறக்கிய பின்
குதிக் காலணி போட்ட பெண் போல
தரையை விட்டு மூன்றடி உயர
ஓடி மறைந்தது தெரியவில்லை...
ஆனால்
பிள்ளையைச் சுமந்தவள் படும் நோவைப் போல
பேரூந்துக்கும் நோ பட்டிருக்கும் தான்
அதைவிட
பயணிகள் நாம் அடையும் நோ
அளவிட முடியாதே!

"வயிறு வீங்கிய
பிள்ளையைச் சுமப்பவள் போல
வீங்கிய பேரூந்தில்
பயணிக்கும் நாங்களும்
சுமந்தவள் பெற்ற பின்
வெளிவந்த குழந்தை போல
பேரூந்தாலே இறங்கிய பின் தானே
மூச்சு விடுகிறோம்!" என்று
பா புனையத் தோன்றிச்சே!

Friday, July 11, 2014

எது கவிதை என்று படித்தாலென்ன?

"அவள் அடித்த அடி
இன்னமும் இப்பவும்
வலிக்கிறதே!" என்றும்
"அவனுக்கென்ன
அடுத்தவளோடு தொடருவான்
நானல்லவா அழுகிறேன்!" என்றும்
பாப்புனைந்தால்
பாவலனாகிவிடலாமா?
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, பா எனவும்
பாடுபொருள், உவமை, எதுகை, மோனை எனவும்
எடுத்துச் சொன்னால் - அவை
மரபுக் கவிதைக்காரருக்குத் தான்
புதுக் கவிதைக்காரருக்கு இல்லை என்பீர்...
தொல்லை எதற்கு என்று
அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்
"புதுக்கவிதை-வெற்றிபெற்ற
வரலாற்றுச் சுருக்கம்" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
பாப்புனைய விரும்பும்
எல்லோரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
பாவலர் பலரது எண்ணங்களில் தோன்றியதை
பாவலர் நா.முத்துநிலவன் தரும்
புதுக் கவிதை பற்றிய பாடம் என்று
கற்றுக்கொள்ள முன்வாருங்கள்!

http://valarumkavithai.blogspot.com/2014/07/blog-post_11.html

Monday, July 7, 2014

கவிதை என்று எதைச் சொல்வது? - படியுங்க...


கவிதை என்று எதைச் சொல்வது?
அறிஞர் கும்மாச்சி அவர்கள் கேட்க
நான் படித்துச் சுவைத்துப் பார்க்க
விளங்கச் சொல்வது கவிதையா?
விளங்காத புதிர் செய்வதையா?
புரியாத புதிர் செய்வதா?
எளிய வார்த்தைக் கோர்வைகளா?
புரியும் மண்வாசக் கவிதைகளா?
புதுக் கவிதைகளா? இல்லை
கவிதை என்று எதை சொல்வது?
மென்மேலும் கேள்விகள் தொடர
ஆங்கோர் இடத்தில்
வாசகனின் எண்ண ஓட்டத்தில்
நிலைத்து நிற்கின்றவை தான்
கவிதை என்று அறிய முடிந்ததே!
பாபுனைய விரும்புவோர் அறிய - அவர்
பதிவுக்குக் கருத்துக் கூறிய
அறிஞர் கருத்தையும் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக!

http://www.kummacchionline.com/2010/02/blog-post_11.html

Monday, June 30, 2014

இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்


வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை சிகரம் பாரதி ஏற்பதாகத் தெரிய வந்ததும் அவரது தளத்தைப் பார்க்க முடிந்தது.
"எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல" என்ற ஆய்வுக் கட்டுரையையும் அல்லவா படித்தேன்.
எனது நாட்டைச் சேர்ந்தவர் என்றதும் பாதி மகிழ்ச்சி, சிறந்த படைப்பாளி என்பதில் பாதி மகிழ்ச்சி, மொத்தத்தில் இப்பதிவு தந்த நிறைவில் முழு மகிழ்ச்சி!
பாபுனைய விரும்புவோருக்கு இப்பதிவு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என்பதில் தங்களுடன் இதனைப் பகிர விரும்புகிறேன்.

"புதுக் கவிதையயன்று பார்க்கும்போது அதன் முன்னோடியாகத் தமிழில் மஹாகவி பாரதியையே குறிப்பிடுகிறோம்." என்றும் "கவிதை என்பது மன உணர்வுகளின் ஒரு வெளிப்பாடே. சில புனைவுகளைச் சேர்த்துச் சொல்வதால் அதற்கென ஒரு தனி நடையும் சிறப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புனைவுகளின்றி ஒரு நயமின்றிச் சொல்லப்பட்டால் அது ஒருபோதும் சிறந்த கவிதையாக மாட்டாது." என்றும் அவர் கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

“இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள் மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்.” என
மஹாகவி கூறியிருப்பது பாடுபொருளின் உள்ளடக்க அமைவை வெளிப்படுத்தி நிற்கிறது. இது சிகரம் பாரதி எடுத்துக்காட்டிய பாடுபொருள் பற்றிய சான்று.

பாபுனைய விரும்புவோர் இவரது இப்பதிவைப் படிப்பதால் பாபுனையும் போது கருத்திற்கொள்ள வேண்டிய வழிகாட்டலைப் பெறலாம்.
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.
http://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html#.U7CrWfmSzbN

Thursday, June 26, 2014

புதுக்கவிதை எழுத முன்...

கவிதை என்பது
எண்ணங்களைக் கொட்டிவிட்டால் ஆகாது...
வரிக் (வசன) கவிதைக்கு
பாரதியின் 'குயில் பாட்டு' படியுங்கள்...
புதுக்கவிதைக்கு
மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' படியுங்கள்...
மரபுக் கவிதைக்கு
கண்ணதாசன் பாடல்களைப் படியுங்களென
எடுத்துச் சொல்ல ஏது உண்மை?
பாக்கள் (கவிதைகள்), பாடல்கள் எல்லாம்
இலக்கண உடை உடுத்தால் தான்
உயிர் ஊட்டப்பட்டிருக்குமே!
அரும்புகள் மலரட்டும் தளத்தில்
"புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு" என்ற
பதிவைப் படித்த பின்
பாப்புனைய விரும்புவோருக்கு
நல்ல பாடமாக இருக்குமென்றே எண்ணி
என் உள்ளம் நிறைவோடு
உங்களுடன் பகிர விரும்புகிறேன்!
கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டு
ஆக்குவது புதுக்கவிதை அல்ல...
புதுக்கவிதைக்கும்
படிமங்கள், வடிவங்கள் எனப் பலவுண்டு...
புதுக்கவிதை எழுத முன்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!

http://pandianpandi.blogspot.com/2013/08/blog-post_25.html

Wednesday, June 25, 2014

பாப்புனையப் பயிற்சி தேவை

பாப்புனைய விரும்புவோருக்கு
சிறந்த வழிகாட்டலாக இருக்கும்
இன்றைய கவிதைகள் மீதான
கண்ணோட்டத்தைத் தந்திருக்கும்
அறிஞர் வா.மணிகண்டன் அவர்கள் எழுதிய
"யார் கண்டுகொள்கிறார்கள்?" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
"கலை என்பது பயிற்சி.
எழுத்தும் அதில் அடக்கம்.
தொடர்ந்து பயிற்சி செய்வோம்." என்ற
அறிஞரின் வழிகாட்டலைப் பின்பற்றுங்கள்!
மேலும்
அறிஞரின் கணிப்புப் படி
"எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற
தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன." என்ற
நிலைமை வருவதேன் என்பதை
படிக்க மறந்து விடாதீர்கள்!

இதோ
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
அவரது பதிவைப் படியுங்கள்!
http://www.nisaptham.com/2014/06/blog-post_20.html

புதிய புதிய சொல்கள் ஆள
புதிய புதிய நுட்பங்கள் நுழைய
எழுத எழுத வரும் பட்டறிவு பெருக
சிறந்த பாக்களைப் புனையலாம் என்பதை
அறிஞரின் பதிவு சொல்லாமல் சொல்கிறதே!
பாப்புனைய விரும்புங்கள்
பாப்புனைய முயலுங்கள்
மீள மீளப் படையுங்கள்
ஆழமாக எண்ணுங்கள்
சிறந்த பாக்களை வெளிப்படுத்த
பட்டறிவு துணை நிற்குமே!

Friday, June 20, 2014

உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?


"சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்
விக்கல் வந்தது.
அம்மா
தண்ணீரைக் குடி என்று நீட்டினாள்.
தங்கை
எங்கையண்ணே களவு எடுத்தியள் என்றாள்.
எனக்கு
எதுவும் சொல்லவோ செய்யவோ
முடியாமல் போயிற்று." என
"என் சமையலறையில்..." என்ற தலைப்பில்
எழுதினாலும் பா/கவிதை அல்ல
கட்டுரை என்றே கூறுவர்!
"அப்படியாயின்
எப்படி ஐயா
இந்தச் சமையலறை நிகழ்வை
பா/கவிதை ஆக்குவது?" என்று
என்னை
நீங்களும் கேட்பியளே!
நான், அம்மா, தங்கை என
மூன்றாள்
சாப்பிட்டது,
அம்மாவின் அன்பு,
கள்ள விக்கல் என
மூன்று செய்தி
ஆக மொத்தம் ஆறு தான்
அதையேன்
கட்டுரையாய் எழுத வேணும்?
"வேலைக்குப் போக நேரமாகுதென
வேளைக்குச் சாப்பிட எண்ணி
சாப்பிட்ட வேளை விக்கல் வர
தண்ணீரைக் குடி விக்கல் போகுமென
கண்ணீர் மல்கிய அம்மா நீட்ட
எங்கையணே களவுக்குப் போனியளென
தங்கைதான் உளவறியக் கேட்க
என்பாடு திண்டாட்டம் ஆச்சு!" என்றெழுதி
"சாப்பிடேக்க விக்கினால் கள்ள விக்கலா?" என
தலைப்பைப் போட்டால் பா/கவிதை ஆச்சே!
ஹைக்கூ யப்பானியச் சொல்
தமிழில் துளிப்பா
ஈரடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
மூன்றடிக் கவிதையே!
லிமரிக் ஆங்கிலச் சொல்
தமிழில் குறும்பா
நான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
ஐந்தடிக் கவிதையே!
மரபுக் கவிதைக்கு மட்டுமல்ல
வரிக்(வசன) கவிதை, புதுக் கவிதை போன்ற
எல்லாக் கவிதைக்கும்
இலக்கணம் இருக்கிறதே!
எண்ணியதெல்லாம் எழுதுங்கள்...
எழுதியதெல்லாம்
ஓர் இலக்கணத்திற்கு உட்பட்டே
இருக்குமென்பதை மறவாதீர்கள்!
என்றாலும் வாசிக்கச் சுவையாக
நன்றாக உலகெலாம் தமிழ் பரவ
இன்றே பாபுனைய விரும்பு!

Tuesday, June 10, 2014

பாவலர்களுக்கு ஒளிக்கலாமா?

நிலவைப் பெண்ணாக
உருவகித்தது அந்தக் காலம்
உலவும் பெண்ணை
ஒப்பிடுவது இந்தக் காலம்
பாவலனின் கண்ணில் பட்டதெல்லாம்
உருவகமுமாகலாம் ஒப்பீடுமாகலாம்!

"பாவலர்களின் கண்களில் பட்டுவிடாதே
உன்னை
எப்படியும் ஆக்கி எழுதிவிடுவார்கள்" என்று
சிலர் எச்சரிக்கலாம் - ஆனால்
எண்ணிப் பார்க்க முடியாதளவு
எழுதக்கூடியவர்கள் பாவலர்களே!

எதை, எவனை, எவளை
நாம் எப்படியும் ஒளிக்கலாம்
ஆனால்
அதை, அவனை, அவளை
பாவலன் அப்படியே ஒளிக்காமல்
பாப்புனைந்து வெளிக்காட்ட வல்லான்!

எதையும் உண்டு களிக்காமல்
உண்டு சுவைத்தது போல
பாப்புனைந்து நாவூற வைப்பான்
தன் கண்ணில் படாததையும்
கண்ணில் பட்டதுபோல் எழுதுவான்
தேடலுள்ள பாவலனின் ஆற்றலை
பாப்புனையும் திறனில் பார்ப்பேன்!

தன் கற்பனைப் பார்வையால்
கருங்கல் வேலிக்கப்பால் நடப்பதை
இப்பால் இருந்தே சொல்வான்
எப்பாலும் நடக்கும் என்றாலும்
இக்கணமே எடுத்துச் சொல்வான்
எக்கணமும் அஞ்சாது எழுதும்
பாவலனுக்கு ஒளிப்பதில் பயனேது!

கற்பனை வானில் பறப்பான்
கனிந்த எண்ணங்களைத் தொடுத்து
சொற்சுவை பொருட்சுவை மின்ன
பற்பல பாக்களை ஆக்குவான்
ஆக்கிய பாக்களில் ஒளிந்துள்ள
உண்மையை மெல்லக் கண்டுகளி!


எல்லா வலைப்பூக்களிலும் நானிட்ட புதிய பதிவுகளை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.0hna.com/

Saturday, May 31, 2014

பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில்
09/2011 காலப்பகுதியில்
சரவணன் என்னும் நண்பரின் பதிவில்...
இதோ அவரது பதிவு:

” காதலி “
***************
கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!

சரவணன் என்னும் நண்பருக்கு எதிராக எதனையும் குறிப்பிட்டிருந்தால் என்னைச் சுட்டுக் கொல்லவும்.

இதோ என் தாக்குரையும் திறனாய்வும்:

"கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!" என்னும்
துளிப்பா(ஹைக்கூ) தரும் பொருள்
எல்லோரும் வழமையாகப் பாடும்
பாடுபொருளே!
இத்துளிப்பாவை

” காதலன் “
***************
கல்லாதவளையும்
கவிஞையாக்கும்
ஆசிரியன்!

இப்படியும் எழுதலாமே!

எழுதும் போது
இப்படியும் அமையலாம் என
இரண்டு பக்கத்தையும்
பார்த்து எழுதாவிட்டால்
உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே...
அதேவேளை
உங்களுடைய கவிதை
முழுமையடையாமல் போகிறதே!

கவிதை தரமானது
ஆனால்
காதலன் கூற்றே!
அப்படியாயின்
காதலியின் கூற்றையும் கூறி
பாவலன்(கவிஞன்) கருத்தாக
உங்கள்
முடிவையும் சொல்லி வைக்கலாமே!
எடுத்துக்காட்டாக:

"என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவளே...
என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவனே...
காதலாகியோர் சொல்லும் கதை!" என்று
எழுத்தை ஆள முற்பட்டால்
உங்கள்
தனித்துவம் புலப்படுமே!

காதலிக்கையிலோ
காதலித்துத் தோல்வி உற்றதாலோ
வறுமைப்பட்டதாலோ
துன்பப்பட்டதாலோ
துயரப்பட்டதாலோ
ஏன்
மகிழ்வுற்றதாலோ
கவிதை வரலாம் தானே!
அது தான் பாருங்கோ
தான் உள்வாங்கியதை
தான் உணர்ந்ததை
வெளிப்படுத்த நினைக்கும்
எவருக்கும்
கவிதை தானாகவே ஊற்றெடுக்கும்!

"பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை - அவன்
சூழலால் உருவாக்கப்படுகிறான்!" என்பதை
உள்ளத்தில் இருத்தி
உங்களுக்குள்ளும்
பா(கவிதை) எழுத வருமென
எழுதுகோல் ஏந்துங்கள்!

தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்களின் கருத்து:

"உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே..."
இது யோசிக்க வைக்கிறது.

அதற்கு
என் பதில் இப்படி இருந்தது:

முழுமையான படைப்பே
தரமானதாயின்
இரண்டு பக்கங்களையும்
பொருட்படுத்த வேண்டுமென்றேன்...
அவரவர்
பதிவுகளை ஆக்கும் போது
வந்த கற்பனையை
அப்படியே எழுதினாலும்
எழுதிய பதிவை
வாசிப்பவர் எண்ணங்களில்
என்ன தோன்றும் என்பதை
கருத்திற் கொள்கிறோமே!
பதிவை வாசித்த
மற்றைய படைப்பாளிகள்
ஆணொருவர்
பெண் குறித்துப் பாடியதைப் பார்த்து
பெண்ணொருவர்
ஆண் குறித்துப் பாடியது போல
எழுத வாய்ப்பிருக்கிறது என்பதையே
சுட்டிக் காட்டினேன்!
இதனால் பாருங்கோ
சிறந்த படைப்புகளை
படைப்பாளிகள் எழுதுவார்கள் என
நான் நம்புகின்றேன்!

Wednesday, May 28, 2014

பாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...

1961 இல் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியிட்ட "வாய்மொழி இலக்கியம்" என்ற பொத்தகத்தில் இருந்து "என் செய்வாய் பெண் பனையே" என்ற தலைப்பில் நாட்டார் பாடலொன்றைப் படித்துச் சுவைத்தேன். அதாவது, கள்ளுக் குடித்தவர் வெறியேறியதும் கதைத்துக்கொள்ள ஆளின்றி பெண் பனையோடு பேச்சுத் தொடுப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. அதற்குப் பெண் பனை  பதிலளிப்பதாக பனையின் சிறப்பைப் பகிருவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அதனைப் படிக்கு முன் மேற்காணும் கதைக்கு ஏற்பப் பாப்புனைய முயற்சி செய்வோமா!
வெறியேறிய கள்ளுக் குடித்தவர் இப்படிப் பெண் பனையைக் கேட்பதாக எண்ணிப் பாருங்கள். இவ்வாறு உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

பெண் பனையே! பெண் பனையே!
கள்ளுக் குடித்தேன் நானே...
குடிச்ச புளிச்சல் கள்ளு
உன்னாலே என்னதான் பண்ணுவாய் என்றே
என்னாலே உன்னைக் கேட்க வைக்குதே!

பெண் பனைக்கு வாயிருந்தால் கள்ளுக் குடித்தவரை எப்படியெல்லாம் கேட்டிருக்கும். பனை சார்பாகக் கீழே இருப்பது எனது கைவண்ணம். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்; தோன்றும் உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

சீவல் தொழிலாளி வெட்டி வீழ்த்திய
பச்சையோலைப் பக்கம் தள்ளாடி வந்தால்
கருக்குகள் உன் காலறுக்குமே!
வீசும் காற்றோடு மோத இயலாத
காவடியாடும் காவோலை விழுந்தால்
விழுந்த வீச்சிலே உன் கழுத்தறுக்குமே!
என் அடிப்பகுதில் இருந்து - நீ
என் உச்சிப்பகுதியை அண்ணாந்து பார்த்தால்
வானத்து ஞாயிற்று வெயில் எறிக்க
உன் கண்ணைத் தாக்க - நீயும்
பிடரியில் அடிவிழ வீழ்வாய் என்பேனே!

உங்கள் யாழ்பாவாணன் ஒரு சின்னப் பொடியன் ஆகையால் அவரது எண்ணம் பெரிதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை. பாபுனைய விரும்பும் எல்லோரும் இவ்வாறு முயற்சி எடுக்கலாம் தானே. நீங்கள் முயற்சி எடுத்ததையும் கீழே தரப்படும் நாட்டார் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
வாய்மொழி இலக்கியம்
உண்மையில் நாட்டுப் பாடல்கள் தூய தமிழிலேயே உள்ளன. அதேவேளை இசை, இலக்கணம், எளிமையான சொல்லாட்சி எனப் பல இருப்பதால் தான் அவை இன்றும் வாழ்கின்றன. உங்கள் முயற்சியையும் மேற்காணும் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒவ்வொருவர் எண்ணமும் வேறுபடுவது இயல்பு. எனவே, பலரது படைப்புகளை ஒப்பு நோக்குவதன் மூலம் ஒவ்வொருவரது எண்ணம், எழுத்து, நடை, பாபுனையும் ஆற்றல் ஆகியவற்றை அறிய முடியுமே! மேலே தரப்பட்ட பாடல் உள்ள பொத்தகத்தைப் பதிவிறக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தேடுக.

https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

Sunday, May 11, 2014

அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!

பாப்புனைய இறங்கு முன் அன்னையர் நாள் பற்றி எண்ணிப் பாருங்கள். அம்மா எல்லோருக்கும் பொதுவான உறவு. எல்லோரும் அம்மா  வயிற்றில் கருவாகி, உருப்பெற்று, அம்மாவின் வயிற்றை உதைத்து தள்ளி, தாய் மண்ணில் தவழ்ந்து, தலை நிமிர்ந்து நடை போட வைத்த அந்த அம்மாவை நினைவூட்டும் நாளாக அன்னையர் நாள் விளங்குகிறதே!

அடுத்து, அம்மாவை நினைவூட்டும் பிறர் பாக்களை/கவிதைகளை, திரைப் பாடல்களை நினைவுபடுத்துங்கள். ஆயினும், அம்மாவைப் பிரிந்திருந்த வேளை உங்கள் உள்ளத்தில் எழுந்த அம்மாவின் அருமையை எண்ணிக்கொள்ளுங்கள். இனி அந்த அம்மாவை நினைவூட்டும் அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய முயலுங்கள்.

ஆயினும், தங்கள் பாவில் பிறர் எழுதிய அடிகள் வராதவாறு பேணவும்.  எப்படியோ, ஓரிரு அடிகள் வந்தே ஆகவேண்டும் என இருப்பின் யாருடைய அடிகளைப் பொறுக்கி எழுதுகிறோம் எனச் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லையேல் எம்மை இலக்கியத் திருடர்கள் என்று தான் அழைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடலடியைத் தங்கள் பாவில் இணைக்க விரும்பினால் பின்வருமாறு கையாளலாம்.

அன்னையர் நாளாம் இன்றென அறிய
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற
மன்னன் படப்பாடலை மீட்டுப்பார்க்கிறேன்!

இனி, உங்கள் சொந்த எண்ணங்களில் விளைந்த பாவண்ணத்தைப் பார்ப்போமா... என்னை ஈன்றவளும் அம்மா, அம்மாவை ஈன்றவளும் அம்மா என நீங்கள் அறிந்தால் கீழ்வரும் அடிகளை ஆக்கலாமே!

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

எம்மைப் பெத்து வளர்த்து ஆளாக்கிய அம்மா பட்ட துன்பம், துயரம் ஏராளம் இருக்கும். அவற்றை அம்மாவைப் பிரிந்திருந்த வேளை எண்ணிப் பார்த்திருப்பியளே! அவற்றை எழுதினால் கூட பா/கவிதை வருமே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

எம்மை ஈன்ற போது தாய் பட்ட துயரையும் தான் நொந்தாலும் எம்மை நோகாமல் வளர்த்த தாய் பற்றி எழுதினோம். இனி, அப்பா அடிக்க வந்தாலும் அம்மா அடிக்க விடமாட்டார். அதைப் படிக்கிற காலத்தில அறிந்திருப்பியள். அதுபற்றி அடுத்துப் பார்ப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேலே எப்படி எண்ணமிட்டு எப்படிப் பாப்புனைய முயன்றிருக்கிறேன் என்பதை விரித்திருக்கிறேன். பாப்புனைந்த வேளை சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கு பற்றி அறிய விரும்பி இருப்பியளே!

அன்னையை, என்னையை எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ன்' வரவும் வெந்து, நொந்து எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ந்' வரவும் படிக்காத, அடிக்காது எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'டி' வரவும் எதுகை அமைத்துள்ளேன்.

சீர்கள் / சொல்கள் முதலெழுத்துப் பொருந்தி வர அமைதல் மோனை என்றும் சீர்கள் / சொல்கள் ஈராமெழுத்துப் பொருந்தி வர அமைதல் எதுகை என்றும் அறிவீர்கள். மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவானாலும் எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் தான் இசையோடு படிக்கச் சுகமளிக்கும்.

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேற்படி பாப்புனைந்த பின் என்ன தலைப்பிட்டிருப்பியள்? அன்னையர் நாளில் எண்ணிய எல்லாம் எழுதியமையால் 'அன்னையர் நாளில் எண்ணிய சில...' என்று தலைப்பிட்டுக் கொள்வோமா! ஏனையா, இப்படிப் பாப்புனைய எடுத்துரைத்தேன்? உங்கள் கைவண்ணத்தால் ஆன பாவண்ணத்தால் உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணவே!

Thursday, May 1, 2014

புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?


இனிய உறவுகளே!
நான் புதன், சித்திரை 30, 2014 அன்று "கவிதை" என்பது வடமொழியா? எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே "கவிதை" என்பது வடமொழியா? (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, "புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.

"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
புவியும் அதுவெனப் போ!" என்ற
கவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.

உடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் "குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29)." என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.

http://ta.wiktionary.org/s/gy6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.

என் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.

http://ta.wiktionary.org/s/4jt6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.

இவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே! தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.

எனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா? இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா? அறிஞர்களே! உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Wednesday, April 30, 2014

அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா

எனது அருமை உறவுகளே!

பாபுனைய விரும்புங்கள் என எத்தனை பதிவுகளை நான் எழுதினாலும் அதைவிடப் பயன்தரும் பதிவை உங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படியுங்கள், பாபுனைய விரும்புங்கள்!



அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா

"கவிதை" என்பது வடமொழியா?

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!

சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

இப்பதிவின் தொடர் பதிவைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html

Tuesday, April 1, 2014

முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?

பா(கவிதை) என்றால் எல்லோருமே புனைவோமே! என்றாலும் பா(கவிதை) என்பது பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக இருக்கணுமே! அதாவது, குறைந்த எழுத்துகள், குறைந்த சொல்கள், குறைந்த வரிகள் கொண்ட ஒரு படைப்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:
தாய்மை தான்
உண்மைக்குச் சான்று!

இல்லான், இல்லாள் இணைந்து நாடாத்திய குடும்ப வாழ்விற்கான சான்றாகத் தாய்மையைப் போற்றுகிறோம். அதாவது, தாய்மை இவ்வுண்மையை வெளிப்படுத்துவதால் உண்மைக்குச் சான்று தாய்மை எனலாம். இந்தப் பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக மேற்காணும் ஈரடிப் பாவைக் (கவிதையைக்) கூறலாம்.

"முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?" என்ற கேள்வியைப்  பா(கவிதை) புனைய முனைவோர் விருப்புடன் ஏற்று இறங்குங்கள். பா(கவிதை) புனைய இறங்கு முன் முட்டாள் நாளைப் பற்றிப் படித்தோ அல்லது பார்த்தோ அல்லது பிறரிடம் கேட்டறிந்தோ இருக்க வேண்டும். சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளையே முட்டாள் நாள் என்று கூறுவதை நாம் அறிவோம். அப்படியாயின்,

"சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளே
முட்டாள் நாள்!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான முதலாம் அடியைத் தொடங்குங்கள். அடுத்த அடியைத் தொடங்க முன் முட்டாள் நாளைப் பற்றி  http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் படியுங்கள். அதிலே முட்டாள் நாளை முதலில் பிரெஞ்சு நாட்டவர் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,

"முட்டாள் நாள்
பிரெஞ்சு நாட்டிலே பிறந்தது!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான இரண்டாம் அடியைத் தொடங்குங்கள். மேலும், http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் 1466 ஆம் ஆண்டு தான் 'விகடகவி' என்ற ஒருவரால் மன்னன் பிலிப்பை அரச சபையில் வைத்து முட்டாளாக்கியதாகவும் அந்நாளையே முட்டாள் நாளாகக் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,

"1466 இலே
மன்னன் பிலிப்பை
அரச சபையிலே
'விகடகவி' என்றவர்
முட்டாளாக்கிய நாளே
முட்டாள் நாளாம்!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான மூன்றாம் அடியைத் தொடங்குங்கள். அதேவேளை, எவரும் முட்டாளாகப் பிறந்திருக்க மாட்டார்களென நாமறிவோம். அப்படியாயின்,

"பிறக்கும் போது
எவரும்
முட்டாளாகப் பிறப்பதில்லையே!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான நான்காம் அடியைத் தொடங்குங்கள். ஆயினும், ஒரு பாவலன் (கவிஞன்) நடப்பைக் கூறி நாளையை விளக்கி வழிகாட்டத் தவறக்கூடாது. அப்படியாயின்,

"எமக்கு
இங்கு முட்டாள் நாளா?
நாம் படிப்போம்...
அறிவாளி நாளாக
முட்டாள் நாளையே மாற்றுவோம்! என்று

உங்கள் பா(கவிதை) இற்கான ஈற்று அடியை முடித்து வைக்கலாம். இவ்வாறு நாம் கட்டம் கட்டமாக எண்ணி அடிகளை ஆக்கிய பின், எல்லா அடிகளையும் தொகுத்து ஒரு பா(கவிதை) ஆக்கலாமே! அவ்வாறே நான் ஆக்கிய பாவைக் (கவிதையைக்) கீழே பார்க்கவும்.

இத்தரைக்குச் சித்திரை (ஏப்பிரல்) வர
முதல் நாள் முட்டாள் நாள் என
முதல்ல பிரெஞ்சுக்காரர்
வெளிப்படுத்தினாலும்
1466 ஆம் ஆண்டு
அரச சபையில் வைத்து
பந்தயம் ஒன்றிலே
மன்னன் பிலிப்பை முட்டாளாக்கிய
'விகடகவி' என்ற பாவலரின் வெற்றி நாளா
முட்டாள் நாள்!
(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)
எண்ணிப் பாரும்
மண்ணில் பிறக்கையிலே
எவரும்
முட்டாள்கள் இல்லையென்றால்
முட்டாள் நாள் நமக்கெதற்கு?
சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளை
இத்தரையில் நாம்
அறிவாளி நாளாக மாற்றி
எல்லோரையும்
அறிஞர்களாக ஆக்குவோமே!

மேலே நீங்கள் படித்தது நான் தான் சின்னப் பொடியன் யாழ்பாவாணன் எழுதிய பா(கவிதை) தான். அதென்ன இடையில "(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)" என்று எழுதியிருப்பதாக நீங்கள் கேட்கலாம். குறித்த தளத்தில் தானே குறித்த தகவைலப் பொறுக்கியதாக மேலே குறிப்பிட்டேன். அவ்வாறு எழுதாவிடின் படித்தவர்கள் என்னை "அறிவுப் பொறுக்கி" என்பதற்குப் பதிலாக "இலக்கியத் திருடன்" என்பார்களே!

பா(கவிதை) புனைய விரும்பும் எல்லோரும் பா(கவிதை) புனையலாம். மேலே நான் பா(கவிதை) புனைய எப்படி எண்ணமிட்டேன்; எப்படித் தகவல் பொறுக்கிப் பொறுக்கிய இடத்தையும் சுட்டினேன் என்பதையும் மறக்கவேண்டாம். அதாவது சொந்த எண்ணங்களையே வெளிப்படுத்த வேண்டும்; பிறரது எண்ணங்களைப் பொறுக்கிப் பாவித்திருப்பின் அவரது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுதுவோரையே இலக்கிய நேர்மையுடன் எழுதுவோர் என்று கூறலாம். சரி, இனி நீங்கள் நல்ல நல்ல பா(கவிதை)களை எழுதுங்களேன்.

Wednesday, March 12, 2014

பாபுனைய இலகுவான பாவெது?

"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எழுத்து, அசை, சீர் எனப் பன்னிரு பகுதிகளைப் பதிவு செய்துவிட்டேன். இடையே பிறரது இலக்கண நூல்களைத் தந்தேன். அவற்றைப் படிக்க இடது பக்க நிரலில்
(Left Side Bar) உள்ள இணைப்பைச் சொடுக்கினால் போதும். "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எஞ்சிய பகுதிகளை இனிவரும் பதிவுகளில் தரவுள்ளேன்.

வலைப்பூக்களில் பாபுனைவோரின் தளங்களே அதிகம். ஆயினும் ஏனைய படைப்புகளிலும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. எனவே தான் பிறரது நூல்களை இடையில் அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எனது தளம் பலரது தேடல்களுக்குத் தீர்வு தருமென நம்புகிறேன். இனிவரும் பதிவுகளைப் பயனுள்ள பதிவுகளாகத் தருவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரை எழுத முயலும் முன், நான் படித்த நூல்களில் தேடிப் பொறுக்கிய பாக்களின் தலைப்புகளைத் தொகுத்து ஒரு கருத்துக்கணிப்பைத் தர இப்பதிவில் முயன்றிருக்கிறேன். யாப்புடனும் யாப்பின்றியும் பல பாக்கள் உள. எப்படியும் ஒர் ஒழுங்கிற்கு அமையவே எழுத முடிகிறது. அதிலும் "இலகுவானது எது?" என்பதே எனது கேள்வி!

ஆசிரியப்பா எழுதுவோர் சிலர், வெண்பா எழுதுவோர் சிலர், குறும் பா எழுதுவோர் சிலர் என விருப்புக்கு உரிய அல்லது சிறப்புப் புலமையை வெளிப்படுத்த ஆளுக்காள் கைவண்ணம் வேறுபடலாம். கீழுள்ள பாவண்ணங்களில் உங்கள் கைவண்ணம் எதில் நாட்டமோ அதனைத் தெரிவு செய்யுங்கள்.

கருத்துக் கணிப்புப் படிவத்தை இடது பக்க நிரலில் (Left Side Bar) பார்வையிட்டு வாக்களிக்குக.

இக்கருத்துக்கணிப்புப் பற்றிய தங்கள் மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பா தலைப்புகள் இருப்பினும் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.

Thursday, March 6, 2014

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், கலிப்பா இனம், வஞ்சிப்பா இலக்கணம், வஞ்சிப்பா வகை, மரூட்பா இலக்கணம், மரூட்பா வகை  எனப் பல பகுதிகளை அலசுகிறது. இத்துடன் "விசாகப்பெருமாள் விளக்குகிறார்" என்ற தொடர் நிறைவுபெறுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Sunday, February 23, 2014

எதுகை, மோனை விளையாட்டு


"முந்தி முந்தி முன்னேறிப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"முந்தி முந்தி" என்ற சீர்களில்
முதலெழுத்துப் பொருந்தி வருவதே
மோனையாம் என்றெழுதப் பழகு!
"கத்திக் கத்திப் படித்துப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"கத்திக் கத்திப்" என்ற சீர்களில்
ஈராமெழுத்துப் பொருந்தி வருவதே
எதுகையாம் என்றெழுதப் பழகு!
"பாலைப் போல வெள்ளை" என
"நூலைப் போல சேலை" என
எழுதப் போகையில தெரியுது பார்
வெள்ளைக்குப் பாலையும் ஒப்பிட்டு
சேலைக்கு நூலையும் ஒப்பிட்டு
அழகு பார்ப்பதே உவமையாம்!
எதுகை, மோனை, உவமை எல்லாம்
புதுக் கவிதை எழுதும் எல்லோரும்
கற்றுக்கொண்டால் வெற்றுக் கவிதை
எழுதும் காலம் இனிக் கிட்டாதே!
மோனைக்கு எடுத்துக்காட்டாக
"நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'நா' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
எதுகைக்கு எடுத்துக்காட்டாக
"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'ணி' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
உவமைக்கு எடுத்துக்காட்டாக
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு" என்ற
ஈரடிப் பாவரிகளைப் படித்தால் புரியும்
"மணற்கேணியானது
எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்.
அதே போல மனிதர்
எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ
அவ்வளவுக்கவ்வளவு
அவர்களது அறிவு பெருகும்." என்றொரு
உவமை விளக்கத்தையும் புரிந்திடுவீரென
தளமொன்றில் பொறுக்கித் தந்தேனே!
(சான்று: http://ta.wikipedia.org/s/9or)
உவமை என்று புளிக்கும் கல்வியை
நான் பொறுக்கிச் சொல்வதை விட
"தேசிப் பழத்தழகி
தேங்காய் முலையழகி
பாசிப் பழத்தழகி
பக்கத்தில் நான் வந்திடுவேன்." என்ற
நாடறிந்த நாட்டார் பாவரிகளைப் படி
உவமையறி பாபுனையப் புறப்படு!
உவமையறிந்தால் பாபுனையப் போதுமா?
கொஞ்சம் எதுகை, மோனையோடு விளையாடு
கொஞ்சம் எதுகை, மோனையைப் படிக்க
"ஒரே எழுத்து
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்
ஒரே இன எழுத்துக்கள்
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்" என்பது
அடிப்படை எண்ணக்கரு என்பேன்!
எதுகை, மோனையோடு விளையாடத் தேவை
எழுத்துகள் பற்றிய தெளிவே - அவை
"அ, ஆ, இ, ஔ என்பனவும்
இ, ஈ, எ, ஏ, யா என்பனவும்
உ, ஊ, ஒ, ஓ என்பனவும்
உயிர்களில் இன எழுத்துகளாம்
ஞ், ந் என்பனவும்
ம், வ் என்பனவும்
த், ச் என்பனவும்
மெய்களில் இன எழுத்துகளாம்" என
வலைத் தளமொன்றில் படித்தேன்!
பாபுனைய விரும்புவோர் எல்லோரும்
எழுத்தறிந்து இடமறிந்து சீரமைத்து
எதுகை, மோனை, அடி, தொடையாக்கி
பாபுனையச் சிறு குறிப்பைத் தந்தேன்
தமிழை வாழ்த்திப் பாபுனையுங்களேன்!

Sunday, February 2, 2014

பாவலர்களே! பாடலாசிரியர்களே!


என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.

இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Sunday, January 26, 2014

கவிதை என்றால் என்ன?

நான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவிதை எழுதுவோரே அதிகம் என்பேன். அப்படி இருப்பினும் 'கவிதை என்றால் என்ன?' என்பதைத் தெரிந்துகொண்டு எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். என் அறிவிக்கெட்டியவரை, எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை எனது கிறுக்கல் நடையிலே கீழே தருகின்றேன்.

உண்மையில்
'கவிதை என்றால் என்ன?' என்று
எனக்குள்ளே - நான்
கேட்டுப்பார்த்தேன்...
உணர்வு வரிகளால்
தொடுக்கப்பட்ட மாலை என்றே
எனக்குப்பட்டது!
அசை, சீர், அடி, தொடை,
எழுத்து, அணி, நடை,
பா, பாவினம் எனப் பல
யாப்பிலக்கணம் என
இருந்தாலும் கூட
இன்றைய இளசுகள்
மூ.மேத்தாவின் நடையிலே
(நானும் அப்படியே)
உணர்வுகளால் ஆன
அடிகளை அடுக்கி
படிக்கச் சுகமளிக்கும் படி
ஆக்குவது புதுக்கவிதையாம்!
எழுத்தெண்ணி அசை பிரித்து
சீராக்கித் தொடையமைத்து
அடி அமைத்துப் பாவாக்கல்
மரபுக் கவிதை என்றாலும் கூட
படித்தால் தான்
உள்ளத்தில் மாற்றத்தைத் தான்
தந்தால் போதுமென்று தான்
வாசிக்க எழும் ஓசையிலே
இசை எழுப்பும் அடிகளால்
ஆக்குவதும் கவிதையே!
பாலைப் போல வெள்ளை
நுலைப் போல சேலை
தாயைப் பொல வாலை
என்றெல்லோ ஒப்பிட்டு
'உமாவின் உள்ளம்' என
மோனை அமைய
'பெண்ணின் அழகு
கண்ணில் தெரியுமே' என
எதுகை அமைய
புதுக்கவிதையிலும்
இலக்கணம் இறுக்கியே
நல்ல கவிதை ஆக்கலாமே!

என்னங்க... கவிதை எழுதத் தொடங்குவோமா? அது தானுங்க சற்று இலக்கணம் சேர்த்து இறுக்கமான நல்ல கவிதை ஆக்குவோமே! பாபுனைய விரும்பும் உறவுகளே! இப்பதிவு உங்களுக்குப் பெரிதும் உதவுமென நம்புகிறேன்.

Saturday, January 18, 2014

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 04

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், ஆசிரியப்பா இலக்கணம், ஆசிரியப்பா வகை, கலிப்பா இலக்கணம், கலிப்பா வகை எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Saturday, January 11, 2014

பொங்கல் பாட்டு


இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!
                                                        (இன்றைக்கு)

மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!
                                                        (மழை)
                                                        (இன்றைக்கு)

பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு
பொங்கல் நாளே உழவர் நாளாச்சு
பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு
                                                         (இன்றைக்கு)
                        
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு
ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு
                                                          (இன்றைக்கு)
                        
முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு
கோலம் போடுவது அம்மா ஆச்சு
பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு
ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு
                                                          (இன்றைக்கு)
                        
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு
நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு
உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு
                                                           (இன்றைக்கு)

இசைப் (திரைப்) பாடல் புனைவோமா!

நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாம். இன்றைய திரைப் (சினிமாப்) பாடல்கள் எல்லாம் புதுக்கவிதை அமைப்பிலே இருந்தாலும் அன்று மரபுக்கவிதை அமைப்பிலே இசைப் (திரைப்) பாடல்கள் இருந்தனவாம். கவிதைக்கு இசையூட்டினால் பாடல் ஆகாது; இசைக்குக் கவிதை அமைத்தால் பாடல் ஆகாது; இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் தான் பாடல் ஆகுமே!

இன்றைய திரைப் (சினிமாப்) பாடல், அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தி (இசைப் பாடல்) என்று சொன்னாலும் கூட, நம்மவூரு நாட்டார் பாடல் காலத்தில் இருந்தே தோன்றியிருக்கணும். ஆயினும் பண்ணத்தி (இசைப் பாடல்) என்பது பண் என்றால் இசை; அத்துச் சாரிகை; இ - பெயர் விகுதி என்று ஒரு பொத்தகத்தில் படித்தேன். அதாவது, பண்ணத்தி என்றால் இசையை உடைய பாடல் எனலாம்.

பண்ணத்தி (இசைப் பாடல்) ஆனது எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணிகள் (சரணங்கள்) ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. திரைப் (சினிமாப்) பாடல் புனைவதை ஒரு பூமாலை கட்டுவதற்கு ஒப்பிடலாம். அதாவது எடுப்பை அரும்பு என்றும் தொடுப்பை பூ (மலர்) என்றும் கண்ணிகள் (சரணங்கள்) ஆனது மாலையாக்கியது என்றும் சொல்லலாம்.

இது பற்றிய விரிப்பைப் பிறிதொரு பதிவில் விளக்கமாகத் தரவுள்ளேன். ஆயினும் இச்சிறு குறிப்பைப் பாபுனைய விரும்புவோர் கருத்திற்கொண்டு புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் வாருங்கள்.

அண்ணே! அண்ணே! - என்
கண்ணான கண்ணே!
                                               (அண்ணே!)

எடுப்பை மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முடிவில்; எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள்.

பெண்ணைக் கண்டேன்! - நான்
கண்ணாலே கண்டேன்!
                                                (பெண்ணைக்)
                                                (அண்ணே!)

எடுப்பைப் போன்று தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். பின்னர் எடுப்பையும் தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக அவற்றின் முதற் சீரை அடுத்தடுத்து அடைப்புக்குள் இடுங்கள்.

என் கண்ணாலே கண்ட - அவள்
என் முன்னாலே நின்றாள்!
என் விருப்பைச் சொல்ல - அவள்
உன் காதலி என்றாள்!
                                                   (அண்ணே!)

எளிமையாக இப்படிக் கண்ணி (சரணம்) அமைக்கலாம். கண்ணியைப் படித்த பின் மீண்டும் எடுப்பையும் தொடுப்பையும் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள். ஒரு கண்ணி ஒரு பூ மாலை ஆகாதே! அடுத்தடுத்துப் பல கண்ணிகளை (சரணங்களை) அமைக்கலாம்.

அண்ணே! அவளைக் கண்டேன் - அவள்
கண்ணில் உன்னைக் கண்டேன்!
பெண்ணே! அழகுக்கு அவளே - அவள்
மண்ணில் உனக்கே அண்ணே!
                                                    (அண்ணே!)

இப்படி நான்கைந்து கண்ணிகளை (சரணங்களை) அமைத்தால் பூ மாலை ஆகிடுமே! ஆமாம், இப்படிப் புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் எனச் சொல்ல வந்தேன். முயன்று பாருங்கள்; எதுகை, மோனை எத்துப்பட்டால் இசை அமையுமே! இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் இன்றைய திரைப் (சினிமாப்) பாடலோ, அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தியோ (இசைப் பாடல்) அமையலாம். எல்லாவற்றுக்கும் முதலில பாபுனைய விரும்புங்கள். பாபுனைகையிலே தூயதமிழைப் பேணித் தாய்த் தமிழை வாழ வையுங்கள்.

Sunday, January 5, 2014

பாவலனுக்குத் தேடல் தேவை தான்...


"பாபுனைய எல்லோரும் கிளம்பினால்
பாக்களுக்கு என்னவாகும் - அவை
பாக்களின்றி வெற்றுக் கிறுக்கல் ஆகாதோ!" என
எண்ணிப் பார்த்தேன்.

இலக்கியத்திற்குப் பின் இலக்கணம் தோன்றியது என்பதைக் கூறி, பாபுனைதல் (கவிதை ஆக்கல்) இலக்கியமென இலக்கணம் அறியாமல் எழுதுவதும் அழகல்ல. நானும் புதுப்பா (புதுக்கவிதை) என்ற எண்ணத்தில் கிறுக்கினாலும் யாப்புப் பா (மரபுக் கவிதை) சிறந்தது என்பதையே ஏற்றுக்கொள்பவன். இதுபற்றிய உங்கள் கருத்துக்கணிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி வழங்குக.
நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?
http://paapunaya.blogspot.com/2013/11/blog-post_2149.html

எனது புதுப்பா (புதுக்கவிதை) கிறுக்கலால் "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" எனப் பல பாபுனைய உதவும் குறிப்புகளை எழுதினாலும் என்னைவிடப் பெரிய அறிஞர்களின் கருத்துகளைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த வகையில் புதுப்பா (புதுக்கவிதை), யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுத உதவும் மென்பொருள், ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் என நான் படித்த பதிவுகளை உங்களுடன் பகிருகிறேன்.

"புதுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். புதுக்கவிதை புனைவோர் புதுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031223.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031443.htm

இதேபோன்று பிறிதொரு தளத்தில் "கவிதையின் வடிவங்கள் – ஒரு பார்வை" என்ற பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://segarkavithan.blogspot.com/2013/07/blog-post.html

புதுக்கவிதை மீது விருப்பம் கொள்ள வைத்த "கவிஞர் மு.மேத்தா அவர்களுடன் நேர்காணல்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.tamilauthors.com/10/11.html

"மரபுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். மரபுக்கவிதை புனைவோர் மரபுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031551.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என மேற்காணும் இணைப்புகளை தேடிப் படித்துவிட்டீர்களா? அப்படியாயின் இப்பவே யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுதக் கிளம்பியாச்சா? கொஞ்சம் நில்லுங்கள்! நீங்கள் எழுதிய யாப்புப் பா (மரபுக் கவிதை) சரியா என்று பார்க்க ஓர் இணையத்தளம் இருக்கே! எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.avalokitam.com/

மேற்காணும் தளத்திற்குச் செல்லாமல் அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கையாளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

மேற்காணும் மென்பொருளைக் கையாள்வது எப்படி? "மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் அவலோகிதம் மென்பொருளை எவ்வாறு கையாள்வது என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_05.html

அப்பாடா! இப்ப நீங்கள் பாவலர் (கவிஞர்) ஆகியிருப்பீர்கள். புதுப்பா (புதுக்கவிதை) அல்லது யாப்புப் பா (மரபுக் கவிதை) எதுவானாலும் உங்களால் துணிவோடு எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி என்றால்  blogger, wordpress தளங்களில் உலகெங்கும் தூய தமிழ் பேண நல்லதோர் வலைப்பூவைத் தொடங்குங்கள். பாவலர் (கவிஞர்) ஆனால் போதாது உங்கள் படைப்புகளை அரங்கேற்ற இவ்வலைப்பூக்கள் உதவுமே!

அதற்கும் கூட ஒருங்குகுறி (Unicode) சிக்கல் உங்களுக்கு வரலாம். அதற்காக "தமிழ் எழுதும் வழிகள்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் இணையப்பக்கங்களில் ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் காணப்படுகிறது.
http://meerantj.blogspot.com/2011/08/blog-post_03.html

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என்ற தலைப்பில் பல அறிஞர்களின் பதிவுகளை சும்மா நான் உங்களுக்குத் திரட்டித் தரவில்லை. நீங்கள் சிறந்த படைப்பாளியாகவும் உலகெங்கும் தூய தமிழ் பேண உதவுவீர்கள் என்றும் என நினைத்தால் தவறில்லை.

நான் ஒரு நாள் ஐம்பது கவிதைகளுடன் பொத்தகம் அச்சிட விரும்புகிறேன் என அறிஞர் ஒருவரிடம் முன்னே போய் நின்றேன். அவற்றைப் படித்த பின் "பாவலனுக்குத் தேடல் தேவை" என்றார். அதாவது, பா (கவிதை) வடிவம், பா (கவிதை) எழுத்து நடை, பா (கவிதை) அழகு, பா (கவிதை) இலக்கணம் எனப் படிப்பதோடு அடுத்தவர் கையாண்ட அடிகளைக் கையாளாமல் இருக்கவும் உதவும் என்றார். அவரது வழிகாட்டலுக்கு ஏற்ப, எப்படியோ எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் இப்படித் தொகுத்தேன்.

அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.