Wednesday, January 16, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-003


எண்ணி எண்ணி
எத்தனையோ
எழுத்துக்கள் இருப்பினும்
சுட்டெழுத்துக்கள் இல்லாத
பேச்சு மொழியும் உண்டோ!
பொருளையோ ஆளையோ
சுட்டிக்கூற உதவும்
அ, இ, உ ஆகிய மூன்றும்
சுட்டெழுத்துக்களாம்!
அவன், இவள், உது என
சொல்லொடு சேர்ந்து நின்று
பிரிக்க முடியாத நிலையில் நிற்பது
அகச் சுட்டு ஆகுமே!
அம் மனிதன், இவ் வீடு, உப் பையன் என
சொல்லிலிருந்து
பிரிந்து நின்று சுட்டுவது
புறச் சுட்டு ஆகுமே!
இவன், இவள், இது என
அண்மையில் இருப்பதைச் சுட்டுவது
அண்மைச் சுட்டு ஆகுமே!
உவன், உவள், உது என
அண்மைக்கும் சேய்மைக்கும்
இடையில் உள்ளதைச் சுட்டுவது
இடைமைச் சுட்டு ஆகுமே!
அவன், அவள், அது என
சேய்மையில் இருப்பதைச் சுட்டுவது
சேய்மைச் சுட்டு ஆகுமே!
சுட்டெழுத்தால்
சுட்டிச் சொன்னாலும்
கேட்பதற்கு உதவும்
எ, யா, ஆ, ஓ, ஏ என்பன
வினா (கேள்வி) எழுத்துக்களாம்!
'எ' எனும் உயிரும்
'யா' எனும் உயிர்மெய்யும்
சொல்லின் முதலெழுத்தாய் வர
'ஆ', 'ஓ' ஆகிய உயிர்கள்
சொல்லின் ஈற்றெழுத்தாய் வர
'ஏ' எனும் உயிர்
ஏது? இவனே? என
சொல்லின் முன்னும் ஈற்றாகவும் வருமே!
எவன்?, எவள்? என்றவாறு
சொல்லுடன் சேர்ந்து நிற்பது
அகவினா ஆகுமே!
எப் பொருள்?, எம் மனிதன் என்றவாறு
சொல்லுக்கு வெளியே நிற்பது
புறவினா ஆகுமே!
மொழியின் முதல் பேச்சே
பேச்சின் முதல் சொல்லே
சொல்லின் முதல் வருவதே
மொழிமுதல் எழுத்தாம்!
பன்னிரு உயிரும்
க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் எனும்
உயிரேறிய ஒன்பது மெய்யும்
மொழிமுதல் வரும் எழுத்தாம்!
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல் என
ஞகரம் நான்கு உயிரோடும்
யகரம் ஆறு உயிரோடும்
வகரம் எட்டு உயிரோடும்
எஞ்சிய
ககரம், சகரம், தகரம், நகரம், பகரம், மகரம் ஆகிய
ஆறும் பன்னிரு உயிரோடும்
மொழிக்கு முதல் வருமாம்!
மொழிமுதல் எழுத்தைப் போல
சொல்லின் ஈற்றெழுத்தே
மொழியீற்று எழுத்தாகும்!
மொழி விளங்காமைக்கு
சொல்லின் இறுதி எழுத்து
உறுத்தப்படாமையோ
விழுங்கப்படுதலோ
அதாவது
உச்சரிக்கப்படாமையோ
காரணம் ஆகுமே!
எகரம் ஒழிந்த (சேராது)
பதினொருயிர்களும்
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய
ஏழு மெய்களும் ஒழிந்த (சேராது)
எஞ்சிய மெய் எழுத்துக்களுமாக
இருபத்திரண்டு
மொழியீற்று எழுத்துக்கள் உண்டாம்!
தமிழில், யாப்பில்
எழுத்துக்களைக் கணக்கிடுதல்
தமிழ் நெடுங்கணக்கு என்பர்!
இந்தக் கணக்கையும் உச்சி
முந்திக் கொள்கிறது
மூன்று போலி எழுத்துக்களாம்!
மஞ்சு என்றால் மேகம்
'மஞ்சு' என்பதற்குப் பதிலாக
'மைஞ்சு' என எழுதியதால்
'ம' இற்குப் பதிலாக 'மை' வந்தமை
அதுவும்
சொல்லின் முதலில் வந்தமை
என்பதாலே
'மை' என்பது முதற்போலியாம்!
இவ்வாறே பார்த்தால்
'அமச்சு' என்பதற்குப் பதிலாக
'அமைச்சு' என எழுதினால்
'ம' இற்குப் பதிலாக 'மை' வரலாம்
அதுவும்
மொழி முதலாகவோ
மொழியீறாகவோ வராமல்
இடையெழுத்தாக
'மை' வந்தமை இடைப்போலியாம்!
'சுடுகலன்' என்பதை
'சுடுகலம்' என எழுதுகையில்
'ன்' இற்குப் பதிலாக 'ம்' வருதலும்
அதுவும்
மொழியீறாக வருதலும் கடைப்போலியாம்!
போலி எழுத்துக்கள்
ஒரு போதும்
சொல்லின் பொருளை மாற்றாதே!
பா புனைந்தாலும்
பா வரிகளை இனிக்கச் சுவைக்க
எதுகை, மோனை துணைக்கு வருமே!
எதுகை, மோனைக்கு
இசைவான எழுத்து அமையாத போது
எழுத்துக்களின் இன எழுத்தையே
நாடவேண்டி வருகிறதே
உயிர்க்குறிலுக்கு
முறையாக அமையும்
உயிர் நெடில் இனமாகுமென
முன்னர் பார்த்தோம்!
உண்மையில்
எழுத்துக்களை உச்சரிக்கையில்
ஒலியின் பிறப்பிடம்
ஒலிக்கும் முயற்சி
ஒலிக்கும் கால அளவு
எழுத்தின் வடிவம் எல்லாம்
இனவெழுத்துக்களை
அடையாளப் படுத்துகின்றனவே!
உயிர் எழுத்துக்களில்
'அ' இற்கு
அ, ஆ, ஐ, ஓள இனமாக
'இ' இற்கு
இ, ஈ, எ, ஏ இனமாக
'உ' இற்கு
உ, ஊ, ஒ, ஓ இனமாக
'எ' இற்கு
எ, ஏ, இ, ஈ இனமாக
'ஐ' இற்கு
ஐ, அ, ஆ, ஓள இனமாக
'ஒ' இற்கு
ஒ, ஓ, உ, ஊ இனமாக
'ஓள' இற்கு
ஓள, அ, ஆ, ஐ இனமாக
அமையுமெனப் பார்க்கலாம்!
உயிர்மெய் எழுத்துகளில்
உயிருக்கு அமைவது போல
'க' இற்கு
க, கா, கை, கௌ இனமாக
'கி' இற்கு
கி, கீ, கெ, கே இனமாக
'கு' இற்கு
கு, கூ, கொ, கோ இனமாக
'கெ' இற்கு
கெ, கே, கி, கீ இனமாக
'கை' இற்கு
கை, க, கா, கௌ இனமாக
'கொ' இற்கு
கொ, கோ, கு, கூ இனமாக
'கௌ' இற்கு
கௌ, க, கா, கை இனமாக
அமையுமெனப் பார்க்கலாம்!
எழுத்துக்கள் தமக்குள்ளே
சுற்றிச் சுற்றி வந்தாலும்
குறிலுக்கு முறையாக அமையும்
நெடிலை இனமாக ஏற்று
பா புனையலாம் தானே!
பா புனையப் போகையிலே
அது, அஃது, ஒரு, ஓர் என
வேறுபடும் எழுத்துகளோடு
பாவோசையில் மாற்றம் தரும்
எழுத்துக்களாக அளபெடையும்
பார்த்துத் தானே போகவேணும்!
(தொடரும்)


முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/01/002.html

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.