Wednesday, April 30, 2014

அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா

எனது அருமை உறவுகளே!

பாபுனைய விரும்புங்கள் என எத்தனை பதிவுகளை நான் எழுதினாலும் அதைவிடப் பயன்தரும் பதிவை உங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படியுங்கள், பாபுனைய விரும்புங்கள்!



அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா

"கவிதை" என்பது வடமொழியா?

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!

சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

இப்பதிவின் தொடர் பதிவைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html

Tuesday, April 1, 2014

முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?

பா(கவிதை) என்றால் எல்லோருமே புனைவோமே! என்றாலும் பா(கவிதை) என்பது பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக இருக்கணுமே! அதாவது, குறைந்த எழுத்துகள், குறைந்த சொல்கள், குறைந்த வரிகள் கொண்ட ஒரு படைப்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:
தாய்மை தான்
உண்மைக்குச் சான்று!

இல்லான், இல்லாள் இணைந்து நாடாத்திய குடும்ப வாழ்விற்கான சான்றாகத் தாய்மையைப் போற்றுகிறோம். அதாவது, தாய்மை இவ்வுண்மையை வெளிப்படுத்துவதால் உண்மைக்குச் சான்று தாய்மை எனலாம். இந்தப் பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக மேற்காணும் ஈரடிப் பாவைக் (கவிதையைக்) கூறலாம்.

"முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?" என்ற கேள்வியைப்  பா(கவிதை) புனைய முனைவோர் விருப்புடன் ஏற்று இறங்குங்கள். பா(கவிதை) புனைய இறங்கு முன் முட்டாள் நாளைப் பற்றிப் படித்தோ அல்லது பார்த்தோ அல்லது பிறரிடம் கேட்டறிந்தோ இருக்க வேண்டும். சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளையே முட்டாள் நாள் என்று கூறுவதை நாம் அறிவோம். அப்படியாயின்,

"சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளே
முட்டாள் நாள்!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான முதலாம் அடியைத் தொடங்குங்கள். அடுத்த அடியைத் தொடங்க முன் முட்டாள் நாளைப் பற்றி  http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் படியுங்கள். அதிலே முட்டாள் நாளை முதலில் பிரெஞ்சு நாட்டவர் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,

"முட்டாள் நாள்
பிரெஞ்சு நாட்டிலே பிறந்தது!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான இரண்டாம் அடியைத் தொடங்குங்கள். மேலும், http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் 1466 ஆம் ஆண்டு தான் 'விகடகவி' என்ற ஒருவரால் மன்னன் பிலிப்பை அரச சபையில் வைத்து முட்டாளாக்கியதாகவும் அந்நாளையே முட்டாள் நாளாகக் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,

"1466 இலே
மன்னன் பிலிப்பை
அரச சபையிலே
'விகடகவி' என்றவர்
முட்டாளாக்கிய நாளே
முட்டாள் நாளாம்!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான மூன்றாம் அடியைத் தொடங்குங்கள். அதேவேளை, எவரும் முட்டாளாகப் பிறந்திருக்க மாட்டார்களென நாமறிவோம். அப்படியாயின்,

"பிறக்கும் போது
எவரும்
முட்டாளாகப் பிறப்பதில்லையே!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான நான்காம் அடியைத் தொடங்குங்கள். ஆயினும், ஒரு பாவலன் (கவிஞன்) நடப்பைக் கூறி நாளையை விளக்கி வழிகாட்டத் தவறக்கூடாது. அப்படியாயின்,

"எமக்கு
இங்கு முட்டாள் நாளா?
நாம் படிப்போம்...
அறிவாளி நாளாக
முட்டாள் நாளையே மாற்றுவோம்! என்று

உங்கள் பா(கவிதை) இற்கான ஈற்று அடியை முடித்து வைக்கலாம். இவ்வாறு நாம் கட்டம் கட்டமாக எண்ணி அடிகளை ஆக்கிய பின், எல்லா அடிகளையும் தொகுத்து ஒரு பா(கவிதை) ஆக்கலாமே! அவ்வாறே நான் ஆக்கிய பாவைக் (கவிதையைக்) கீழே பார்க்கவும்.

இத்தரைக்குச் சித்திரை (ஏப்பிரல்) வர
முதல் நாள் முட்டாள் நாள் என
முதல்ல பிரெஞ்சுக்காரர்
வெளிப்படுத்தினாலும்
1466 ஆம் ஆண்டு
அரச சபையில் வைத்து
பந்தயம் ஒன்றிலே
மன்னன் பிலிப்பை முட்டாளாக்கிய
'விகடகவி' என்ற பாவலரின் வெற்றி நாளா
முட்டாள் நாள்!
(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)
எண்ணிப் பாரும்
மண்ணில் பிறக்கையிலே
எவரும்
முட்டாள்கள் இல்லையென்றால்
முட்டாள் நாள் நமக்கெதற்கு?
சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளை
இத்தரையில் நாம்
அறிவாளி நாளாக மாற்றி
எல்லோரையும்
அறிஞர்களாக ஆக்குவோமே!

மேலே நீங்கள் படித்தது நான் தான் சின்னப் பொடியன் யாழ்பாவாணன் எழுதிய பா(கவிதை) தான். அதென்ன இடையில "(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)" என்று எழுதியிருப்பதாக நீங்கள் கேட்கலாம். குறித்த தளத்தில் தானே குறித்த தகவைலப் பொறுக்கியதாக மேலே குறிப்பிட்டேன். அவ்வாறு எழுதாவிடின் படித்தவர்கள் என்னை "அறிவுப் பொறுக்கி" என்பதற்குப் பதிலாக "இலக்கியத் திருடன்" என்பார்களே!

பா(கவிதை) புனைய விரும்பும் எல்லோரும் பா(கவிதை) புனையலாம். மேலே நான் பா(கவிதை) புனைய எப்படி எண்ணமிட்டேன்; எப்படித் தகவல் பொறுக்கிப் பொறுக்கிய இடத்தையும் சுட்டினேன் என்பதையும் மறக்கவேண்டாம். அதாவது சொந்த எண்ணங்களையே வெளிப்படுத்த வேண்டும்; பிறரது எண்ணங்களைப் பொறுக்கிப் பாவித்திருப்பின் அவரது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுதுவோரையே இலக்கிய நேர்மையுடன் எழுதுவோர் என்று கூறலாம். சரி, இனி நீங்கள் நல்ல நல்ல பா(கவிதை)களை எழுதுங்களேன்.