Tuesday, March 31, 2015

பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

யாழ்பாவாணன் எழுதுவதெல்லாம்
பா (கவிதை) அல்ல - வெறும்
பா (கவிதை) நடையே - அதை
படியெடுத்தால் பாவாக்க (கவிதையாக்க) முடியாதே!
புதிதாய்ப் பாப்புனைய (கவிதையாக்க) விரும்புவோர்
புதுப்பா (புதுக்கவிதை) புனைய (ஆக்க) விரும்புவோர்
பாவலர் மூ.மேத்தா அவர்களின்
கண்ணீர்ப் பூக்களைப் படிக்கலாம்...
பாவலர் வைரமுத்து அவர்களின்
கவிராஜன் கதை படிக்கலாம்...
படித்துச் சுவைத்ததைப் பகிராமலே
படித்துச் சுவைத்ததைப் போலவே
பாப்புனையத் (கவிதையாக்கத்) தான் முயன்றாலும்
பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

கால்களை மேயும் கண்களால் கண்டதை
மீளவும் உள்ளக் கண்ணால் பார்த்தே
எண்ணமிட்டுப் (கற்பனை செய்து) பாரும்...
"வாலை ஒருவள் வந்த வழியைப் பாரேன்
காலைத் தூக்கி வைத்து நடப்பதைப் பாரேன்
வைத்த கால்ப் பெருவிரலின் போக்கைப் பாரேன்
நேர்கோடு ஒன்றில் பயணிப்பதைப் பாரேன்
நடைபயிலும் வாலையின் சுடும்காலைப் பாரேன்
சித்திரை வெயிற்றரை வாட்டுவதைப் பாரேன்" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"கால்நடைகள் நடக்கும் வீச்சுநடை போல
வீசும்காற்றுக்குத் தள்ளாடும் கமுகு போல
கண்முன்னே மண்விழுவான் நெழிவார் போல
வழியெதிரே ஆடியாடி விழுவார் போல
விழிமங்கக் குடித்தவர் வழியிலே வீழவே
வந்தகாற்று உடைபிடுங்க ஆளோ அம்மணம்!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

முகம் பார்க்கும் கண்ணாடியிலே கொஞ்சம் - தங்கள்
மூஞ்சியைப் பார்த்தால் பாப்புனைய முடியாதாம்
தெருவால போறவங்க மூஞ்சியைப் பார்த்தே
எத்தனை எத்தனை பாப்புனையலாம் பாரும்...
"செக்கச் சிவந்த பொட்டு இட்டவளே
கழுத்திலே மின்னும் கொடி போட்டவளே
கிட்ட வந்தவேளை கண்டுகொண்டேன் - உன்னை
எட்ட விலத்தி நடக்கிறேன் என்னவளைத் தேடி" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"திறந்த சட்டைக்குள்ளே தெரிவது தங்கச்சங்கிலி
தலையை வாரிவிடும் கையிலே மின்னுவது மோதிரம்
எல்லாமே தங்கப்பூச்சோ வாடகையோ - உன்
நடிப்பைக் கண்டு நானும் விலகினேனே - என்
தங்கமான என்னவனைத் தேடியே" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

"நெஞ்சிலே தெரிவது எலும்பும் தோலுமே" என்று
கண்ணுக்கு எட்டிய ஆணைப் பார்த்தும்
"நெஞ்சிலே தெரிவது நீர்வீழும் வீழ்ச்சியோ" என்று
கண்ணுக்கு எட்டிய பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்கு மேலேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!
"நெடுநாள் அடக்கம் எவளை முடக்குமோ" என்று
எட்டி நடைபோடும் ஆணைப் பார்த்தும்
"நெடுநாள் முடக்கம் என்றோ அம்மாவாக்கவே" என்று
எட்டி நடைபோடும் பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்குக் கீழேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!

வழியிலே கண்டவர் வயிற்றைப் பார்த்து
வழியிலே நின்றவர் பேச்சைக் கேட்டு
பாப்புனைதல் (கவிதையாக்கல்) என்ற மலையின்
அடியில் ஊரும் எறும்பாகிய நாமும்
துளிப்பா (கைக்கூ) ஆயினும் புனைய முடியாதோ?
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
தப்பாமல் நீண்டு மின்னும் வயிறானவள்
நமக்கு ஆகாதவள் ஆச்சே!" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
நீண்டு மின்னும் குடிகாரன் வயிறாச்சே
நமக்கு ஆகாதவன் ஆனானே!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

கல்லெறியோ சொல்லடியோ விழுந்தாலும் - நீ
மேலேமேய்வதையோ கீழேமேய்வதையோ விட்டிட்டு
நாட்டுக்கு நல்ல செய்தி சொல்ல - உன்
பாட்டுக்குச் சொல்லெடுத்து அடியமைத்து
பாப்புனைய (கவிதையாக்க) விரும்புங்கள் உறவுகளே!
பேச்சளவில் பாவலர் என்றெவர் சொன்னாலும்
எழுத்தளவில் எண்ணமிடலை (கற்பனையை) வைத்தே உணரலாம்
பாப்புனைய விரும்பும் உறவுகளே! - கொஞ்சம்
எண்ணமிடலை (கற்பனையை) வளப்படுத்தினால் பாரும்
பாவலராக வேறென்ன தகுதிவேண்டும் உமக்கு!

Tuesday, March 3, 2015

படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?


படியெடுத்துப் பதிவெழுத அஞ்சுவோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதும் பெரியோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதத் தெரியாதோருமிருக்க
படியெடுத்துப் பாப்புனைவது எப்படி என்றால்
படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கவும் வேண்டுமே!

படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கத் தானே
சின்னப்பொடியன் யாழ்பாவாணனா பாவரசர் கண்ணதாசனா
படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?
என்றாவது எப்பன் அறிந்திருந்தால் தானே
எப்பவும் படியெடுத்துப் பாப்புனையவாவது விரும்புவீர்?

மூ.மேத்தாவின் புதுக்கவிதை அடிகளா
வைரமுத்துவின் மரபுக்கவிதை அடிகளா
கண்ணதாசனின் பட்டுக்கோட்டையாரின் அடிகளா
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் பாப்புனைந்தால்
படியெடுத்தது எவரது அடிகளென அறீவீரே!

உள்ள எல்லா இலக்கியங்களிலும் சுழியோடி
மெள்ள நல்ல எண்ணங்களைப் பொறுக்கி
வெள்ளமெனத் தான் வடித்த பாக்களிலே
துள்ளியெழ நுழைத்து இருந்தும் கூட
கண்ணதாசன் படியெடுத்துப் பாப்புனைந்ததை எவரறிவார்?

கம்பனின் அழகுத் தமிழ் அடிகளா
காளமேகத்தின் புலமைத் தமிழ் அடிகளா
திருக்குறளின் குறளடியா திருப்புகழின் இசையடியா
அடிக்கு அடி படியெடுத்துப் பாப்புனைந்த
கண்ணதாசன் சொல்லியும் நம்ம மறுக்கிறீரே!

பிறரடி படியெடுத்துப் பிறர் கண்பட
யாழ்பாவாணன் பாப்புனைவதில் சிறியவரே...
பிறர் கண்ணில் விழுந்து விடாதபடி
பிறர் பாவடியின்றி நற்பொருள் படியெடுக்கும்
கண்ணதாசன் பாப்புனைவதில் பெரியவரே!

படியெடுத்துப் பாப்புனைவதில் சிறியவர் யாழ்பாவாணன்
படியெடுத்துத் தானும் சொல்லெறி வேண்டிக்கட்டுவார்
படியெடுத்துப் பாப்புனைவதில் பெரியவர் கண்ணதாசன்
படியெடுத்தாலும் படிப்பவர் உள்ளங்களைக் கட்டிப் போடுவார்
படியெடுக்கும் நுட்பமறிந்து பாப்புனைய வாருங்களேன்!

யாப்பறிந்த பின்னரே பாப்புனையலாம் என்பது
பாப்புனைய விரும்பும் உறவுகள் எல்லோருமே
அறிந்தாலும் தெரிந்தாலும் பாப்புனைய விரும்பினால்
கண்ணதாசன் பாக்களைப் பார்த்தேனும் பாப்புனையலாமே...
பாக்களைப் பார்த்தேனும் பாப்புனைந்தாலும் பாவலரே!

"தாலிக் கயிற்றை மாட்டப்போய் - பெண்ணே
தூக்குக் கயிற்றில் மாட்டிவிடாதே!" என்று
நானோர் ஏட்டில் படித்தேன் - அதனை
அப்படியே படியெடுத்துக் கொஞ்சம் அழகாக்கி - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"அடிநுனி முன்பின் ஏதுமறியா ஆணை
நம்பித் தலையை நீட்டும் பெண்ணே - உன்
கழுத்தில் விழுவது தாலிக்கயிறா தூக்குக்கயிறா - பின்
விளைவைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாயா?" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் எப்படி என்பீர்!

"மனைவியைத் தெரிவு செய்வதில் தோற்பவன்
மரணத்தைத் தெரிவு செய்வதில் வெல்கிறான்." என்று
கண்ணதாசன் எழுதிய வரிகளைப் படித்தேன் - அன்று
எண்ணிப் பார்த்தேன் படியெடுத்துப் பாப்புனைய - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"பெண்ணுள்ளம் என்னவென்று அறியாதவனே - நீ
நல்லதோர் இல்லாளைத் தெரிந்தெடுக்கத் தவறினால் - நீ
மெல்லச் சாவைத் தெரிந்தெடுத்து இருப்பாயே!" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் இப்படி என்றால் - உங்கள்
கைவண்ணம் எப்படியென வெளிக்கொணர முன்வருவீரே!

பாப்புனைய விரும்பும் இனிய உள்ளங்களே!
யாழ்பாவாணனைப் போலப் பிறரடிகளை அல்ல
கண்ணதாசனைப் போல நற்பொருளைத் தானே
படியெடுத்துப் பாப்புனைவதற்கும் பழகுங்கள் என்றே
நானழைப்பது பாப்புனைய விரும்புங்கள் என்பதற்கே!