Sunday, January 26, 2014

கவிதை என்றால் என்ன?

நான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவிதை எழுதுவோரே அதிகம் என்பேன். அப்படி இருப்பினும் 'கவிதை என்றால் என்ன?' என்பதைத் தெரிந்துகொண்டு எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். என் அறிவிக்கெட்டியவரை, எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை எனது கிறுக்கல் நடையிலே கீழே தருகின்றேன்.

உண்மையில்
'கவிதை என்றால் என்ன?' என்று
எனக்குள்ளே - நான்
கேட்டுப்பார்த்தேன்...
உணர்வு வரிகளால்
தொடுக்கப்பட்ட மாலை என்றே
எனக்குப்பட்டது!
அசை, சீர், அடி, தொடை,
எழுத்து, அணி, நடை,
பா, பாவினம் எனப் பல
யாப்பிலக்கணம் என
இருந்தாலும் கூட
இன்றைய இளசுகள்
மூ.மேத்தாவின் நடையிலே
(நானும் அப்படியே)
உணர்வுகளால் ஆன
அடிகளை அடுக்கி
படிக்கச் சுகமளிக்கும் படி
ஆக்குவது புதுக்கவிதையாம்!
எழுத்தெண்ணி அசை பிரித்து
சீராக்கித் தொடையமைத்து
அடி அமைத்துப் பாவாக்கல்
மரபுக் கவிதை என்றாலும் கூட
படித்தால் தான்
உள்ளத்தில் மாற்றத்தைத் தான்
தந்தால் போதுமென்று தான்
வாசிக்க எழும் ஓசையிலே
இசை எழுப்பும் அடிகளால்
ஆக்குவதும் கவிதையே!
பாலைப் போல வெள்ளை
நுலைப் போல சேலை
தாயைப் பொல வாலை
என்றெல்லோ ஒப்பிட்டு
'உமாவின் உள்ளம்' என
மோனை அமைய
'பெண்ணின் அழகு
கண்ணில் தெரியுமே' என
எதுகை அமைய
புதுக்கவிதையிலும்
இலக்கணம் இறுக்கியே
நல்ல கவிதை ஆக்கலாமே!

என்னங்க... கவிதை எழுதத் தொடங்குவோமா? அது தானுங்க சற்று இலக்கணம் சேர்த்து இறுக்கமான நல்ல கவிதை ஆக்குவோமே! பாபுனைய விரும்பும் உறவுகளே! இப்பதிவு உங்களுக்குப் பெரிதும் உதவுமென நம்புகிறேன்.

Saturday, January 18, 2014

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 04

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், ஆசிரியப்பா இலக்கணம், ஆசிரியப்பா வகை, கலிப்பா இலக்கணம், கலிப்பா வகை எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Saturday, January 11, 2014

பொங்கல் பாட்டு


இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!
                                                        (இன்றைக்கு)

மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!
                                                        (மழை)
                                                        (இன்றைக்கு)

பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு
பொங்கல் நாளே உழவர் நாளாச்சு
பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு
                                                         (இன்றைக்கு)
                        
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு
ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு
                                                          (இன்றைக்கு)
                        
முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு
கோலம் போடுவது அம்மா ஆச்சு
பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு
ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு
                                                          (இன்றைக்கு)
                        
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு
நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு
உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு
                                                           (இன்றைக்கு)

இசைப் (திரைப்) பாடல் புனைவோமா!

நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாம். இன்றைய திரைப் (சினிமாப்) பாடல்கள் எல்லாம் புதுக்கவிதை அமைப்பிலே இருந்தாலும் அன்று மரபுக்கவிதை அமைப்பிலே இசைப் (திரைப்) பாடல்கள் இருந்தனவாம். கவிதைக்கு இசையூட்டினால் பாடல் ஆகாது; இசைக்குக் கவிதை அமைத்தால் பாடல் ஆகாது; இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் தான் பாடல் ஆகுமே!

இன்றைய திரைப் (சினிமாப்) பாடல், அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தி (இசைப் பாடல்) என்று சொன்னாலும் கூட, நம்மவூரு நாட்டார் பாடல் காலத்தில் இருந்தே தோன்றியிருக்கணும். ஆயினும் பண்ணத்தி (இசைப் பாடல்) என்பது பண் என்றால் இசை; அத்துச் சாரிகை; இ - பெயர் விகுதி என்று ஒரு பொத்தகத்தில் படித்தேன். அதாவது, பண்ணத்தி என்றால் இசையை உடைய பாடல் எனலாம்.

பண்ணத்தி (இசைப் பாடல்) ஆனது எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணிகள் (சரணங்கள்) ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. திரைப் (சினிமாப்) பாடல் புனைவதை ஒரு பூமாலை கட்டுவதற்கு ஒப்பிடலாம். அதாவது எடுப்பை அரும்பு என்றும் தொடுப்பை பூ (மலர்) என்றும் கண்ணிகள் (சரணங்கள்) ஆனது மாலையாக்கியது என்றும் சொல்லலாம்.

இது பற்றிய விரிப்பைப் பிறிதொரு பதிவில் விளக்கமாகத் தரவுள்ளேன். ஆயினும் இச்சிறு குறிப்பைப் பாபுனைய விரும்புவோர் கருத்திற்கொண்டு புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் வாருங்கள்.

அண்ணே! அண்ணே! - என்
கண்ணான கண்ணே!
                                               (அண்ணே!)

எடுப்பை மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முடிவில்; எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள்.

பெண்ணைக் கண்டேன்! - நான்
கண்ணாலே கண்டேன்!
                                                (பெண்ணைக்)
                                                (அண்ணே!)

எடுப்பைப் போன்று தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். பின்னர் எடுப்பையும் தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக அவற்றின் முதற் சீரை அடுத்தடுத்து அடைப்புக்குள் இடுங்கள்.

என் கண்ணாலே கண்ட - அவள்
என் முன்னாலே நின்றாள்!
என் விருப்பைச் சொல்ல - அவள்
உன் காதலி என்றாள்!
                                                   (அண்ணே!)

எளிமையாக இப்படிக் கண்ணி (சரணம்) அமைக்கலாம். கண்ணியைப் படித்த பின் மீண்டும் எடுப்பையும் தொடுப்பையும் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள். ஒரு கண்ணி ஒரு பூ மாலை ஆகாதே! அடுத்தடுத்துப் பல கண்ணிகளை (சரணங்களை) அமைக்கலாம்.

அண்ணே! அவளைக் கண்டேன் - அவள்
கண்ணில் உன்னைக் கண்டேன்!
பெண்ணே! அழகுக்கு அவளே - அவள்
மண்ணில் உனக்கே அண்ணே!
                                                    (அண்ணே!)

இப்படி நான்கைந்து கண்ணிகளை (சரணங்களை) அமைத்தால் பூ மாலை ஆகிடுமே! ஆமாம், இப்படிப் புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் எனச் சொல்ல வந்தேன். முயன்று பாருங்கள்; எதுகை, மோனை எத்துப்பட்டால் இசை அமையுமே! இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் இன்றைய திரைப் (சினிமாப்) பாடலோ, அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தியோ (இசைப் பாடல்) அமையலாம். எல்லாவற்றுக்கும் முதலில பாபுனைய விரும்புங்கள். பாபுனைகையிலே தூயதமிழைப் பேணித் தாய்த் தமிழை வாழ வையுங்கள்.

Sunday, January 5, 2014

பாவலனுக்குத் தேடல் தேவை தான்...


"பாபுனைய எல்லோரும் கிளம்பினால்
பாக்களுக்கு என்னவாகும் - அவை
பாக்களின்றி வெற்றுக் கிறுக்கல் ஆகாதோ!" என
எண்ணிப் பார்த்தேன்.

இலக்கியத்திற்குப் பின் இலக்கணம் தோன்றியது என்பதைக் கூறி, பாபுனைதல் (கவிதை ஆக்கல்) இலக்கியமென இலக்கணம் அறியாமல் எழுதுவதும் அழகல்ல. நானும் புதுப்பா (புதுக்கவிதை) என்ற எண்ணத்தில் கிறுக்கினாலும் யாப்புப் பா (மரபுக் கவிதை) சிறந்தது என்பதையே ஏற்றுக்கொள்பவன். இதுபற்றிய உங்கள் கருத்துக்கணிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி வழங்குக.
நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?
http://paapunaya.blogspot.com/2013/11/blog-post_2149.html

எனது புதுப்பா (புதுக்கவிதை) கிறுக்கலால் "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" எனப் பல பாபுனைய உதவும் குறிப்புகளை எழுதினாலும் என்னைவிடப் பெரிய அறிஞர்களின் கருத்துகளைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த வகையில் புதுப்பா (புதுக்கவிதை), யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுத உதவும் மென்பொருள், ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் என நான் படித்த பதிவுகளை உங்களுடன் பகிருகிறேன்.

"புதுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். புதுக்கவிதை புனைவோர் புதுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031223.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031443.htm

இதேபோன்று பிறிதொரு தளத்தில் "கவிதையின் வடிவங்கள் – ஒரு பார்வை" என்ற பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://segarkavithan.blogspot.com/2013/07/blog-post.html

புதுக்கவிதை மீது விருப்பம் கொள்ள வைத்த "கவிஞர் மு.மேத்தா அவர்களுடன் நேர்காணல்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.tamilauthors.com/10/11.html

"மரபுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். மரபுக்கவிதை புனைவோர் மரபுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031551.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என மேற்காணும் இணைப்புகளை தேடிப் படித்துவிட்டீர்களா? அப்படியாயின் இப்பவே யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுதக் கிளம்பியாச்சா? கொஞ்சம் நில்லுங்கள்! நீங்கள் எழுதிய யாப்புப் பா (மரபுக் கவிதை) சரியா என்று பார்க்க ஓர் இணையத்தளம் இருக்கே! எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.avalokitam.com/

மேற்காணும் தளத்திற்குச் செல்லாமல் அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கையாளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

மேற்காணும் மென்பொருளைக் கையாள்வது எப்படி? "மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் அவலோகிதம் மென்பொருளை எவ்வாறு கையாள்வது என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_05.html

அப்பாடா! இப்ப நீங்கள் பாவலர் (கவிஞர்) ஆகியிருப்பீர்கள். புதுப்பா (புதுக்கவிதை) அல்லது யாப்புப் பா (மரபுக் கவிதை) எதுவானாலும் உங்களால் துணிவோடு எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி என்றால்  blogger, wordpress தளங்களில் உலகெங்கும் தூய தமிழ் பேண நல்லதோர் வலைப்பூவைத் தொடங்குங்கள். பாவலர் (கவிஞர்) ஆனால் போதாது உங்கள் படைப்புகளை அரங்கேற்ற இவ்வலைப்பூக்கள் உதவுமே!

அதற்கும் கூட ஒருங்குகுறி (Unicode) சிக்கல் உங்களுக்கு வரலாம். அதற்காக "தமிழ் எழுதும் வழிகள்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் இணையப்பக்கங்களில் ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் காணப்படுகிறது.
http://meerantj.blogspot.com/2011/08/blog-post_03.html

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என்ற தலைப்பில் பல அறிஞர்களின் பதிவுகளை சும்மா நான் உங்களுக்குத் திரட்டித் தரவில்லை. நீங்கள் சிறந்த படைப்பாளியாகவும் உலகெங்கும் தூய தமிழ் பேண உதவுவீர்கள் என்றும் என நினைத்தால் தவறில்லை.

நான் ஒரு நாள் ஐம்பது கவிதைகளுடன் பொத்தகம் அச்சிட விரும்புகிறேன் என அறிஞர் ஒருவரிடம் முன்னே போய் நின்றேன். அவற்றைப் படித்த பின் "பாவலனுக்குத் தேடல் தேவை" என்றார். அதாவது, பா (கவிதை) வடிவம், பா (கவிதை) எழுத்து நடை, பா (கவிதை) அழகு, பா (கவிதை) இலக்கணம் எனப் படிப்பதோடு அடுத்தவர் கையாண்ட அடிகளைக் கையாளாமல் இருக்கவும் உதவும் என்றார். அவரது வழிகாட்டலுக்கு ஏற்ப, எப்படியோ எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் இப்படித் தொகுத்தேன்.

அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.