Saturday, March 30, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-007


நின்ற சொல்லொடு வந்த சொல்
புணரும் வேளை பாரும்
தோன்றல் விகாரப் புணர்ச்சியில்
வரும் சொல்லின் முதல் எழுத்து
வல்லினமாயின் - அவ்வல்லினம்
இரட்டிக்கப் பார்க்குதே!
இப்படி வல்லினம்
இரட்டித்தலை 'மிகும் இடம்' என்றும்
இயல்பாகப் புணருமாயின்
'மிகா இடம்' என்றும்
பார்க்கப் போகுமுன்
நின்ற சொல்லின் பொருள்
கணக்கிலெடுத்தே
மிகும் இடம், மிகா இடம்
வரையறுக்க வேண்டுமே!
எடுத்துக்காட்டாக
இட்டிலி, சாம்பார் ஆகியன
புணரும் நிலையை வைத்தே
"இட்டிலி சாம்பார்" என்பதில்
"இட்டிலியும் சாம்பாரும்" என்று பொருள்...
"இட்டிலிச் சாம்பார்" என்பதில்
(வல்லினம் மிகுத்து இருக்கிறது)
"இட்டிலியாகிய சாம்பார்" என்றும்
அப்படியாயின்
"இட்டிலியே சாம்பார்" என்றும்
பொருள் கொள்ளலாம் எனில்
மிகும் இடம், மிகா இடம்
பொல்லாத இலக்கணமே!
நின்ற சொல்லின்
சொல்கள் புணர வரும் தொடரின்
பொருளை அறிந்தே
மிகும் இடம், மிகா இடம்
கையாள வேண்டுமென்பதை
நினைவிற் கொள்வீரே!
தனிக்குற்றொடு
நின்ற மெய்யீற்றை அடுத்து
உயிர் வந்து இருந்தால்
நின்ற மெய்யீறு மிகுமாமே!
எடுத்துக்காட்டாக
கல்+எறிந்தான்=கல்லெறிந்தான்
என்பதில் பாரும்
மிகுத்த 'ல்' ஒடு எகரம் ஏறி
லெகரம் ஆனதை அறவீரே!
ங, ஞ, ந, ம ஆகிய
மெல்லினம் நான்கும்
சொல்கள் புணரும் வேளை மிகுமே!
வல்லினம் மட்டுமல்ல
மெல்லினமும் மிகுமே...
எடுத்துக்காட்டாக
இ+ஙனம்=இங்ஙனம்
அ+ஙனம்=அங்ஙனம்
எ+ஙனம்=எங்ஙனம்
மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
மு+நீர்=முந்நீர்
கை+மாறு=கைம்மாறு
ஆகியவற்றில் மெல்லினம் மிகுத்ததே!
க, ச, த, ப ஆகிய
வல்லினம் நான்கும்
சொல்கள் புணரும் வேளை மிகுமே!
மெல்லினத்தில் ணகர, னகர
வல்லினத்தில் டகர, றகர
எழுத்துக்கள்
சொல்லுக்கு முதலில் வராமையால்
மிகும் இடங்களில்
தலை காட்டாமல் போயிற்றே!
மெல்லினமும் மிகும் என்றாலும்
வல்லினம் அதிகம்
பயன்பாட்டில் இருப்பதால் பாரும்
பல ஒழுங்கு முறையின் கீழே
வல்லினம் மிகும் இடங்களைப் பாரும்!
ணகர, னகர ஈற்றின் பின்னே
வல்லினம் வந்தால் பாரும்
மண்+குடம்=மட்குடம் என்றும்
பொன்+குடம்=பொற்குடம் என்றும்
'ண்' என்பது 'ட்' ஆயும்
'ன்' என்பது 'ற்' ஆயும்
புணர்ந்து வரக் காண்பீரே!
நின்ற சொல்லின் ஈறு
உயிர் மெய்யாக இருந்து
வரும் சொல் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால்
நின்ற சொல்லீற்று மெய் திரியுமாமே!
(வேற்றெழுத்தாக மாறும்)
நின்ற சொல்லின் ஈற்றில்
'ன்', 'ல்', 'ண்', 'ள்' என்பன வந்தாலும்
ஒவ்வோர் எழுத்துக்கும் - அதன்
தன்மைக்கு ஏற்ப திரிபடையும்
எழுத்து வெவ்வேறாமே!
அ+காளை=அக் காளை
அந்த+காளை=அந்தக் காளை
இ+செய்தி=இச் செய்தி
இந்த+செய்தி=இந்தச் செய்தி
என்றவாறு பார்த்தால்
சுட்டுச் சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எ+பக்கம்=எப் பக்கம்?
எந்த+சேனை=எந்தச் சேனை?
எப்படி+பேசினான்=எப்படிப் பேசினான்?
என்றவாறு பார்த்தால்
வினாச் சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
பெயர்ச் சொல்லினது பொருளை
வேறுபடுத்திக் காட்டுவதே
வேற்றுமையின் வேலையாகும்!
முதல் வேற்றுமையாக
எழுவாய்/பெயர் வேற்றுமை
எடுத்துக்காட்டாக : அழகன்,
இரண்டாம் வேற்றுமையாக
'ஐ' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனை,
மூன்றாம் வேற்றுமையாக
'ஆல்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனால்,
நான்காம் வேற்றுமையாக
'கு' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகற்கு,
ஐந்தாம் வேற்றுமையாக
'இன்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனின்,
ஆறாம் வேற்றுமையாக
'அது' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனது,
ஏழாம் வேற்றுமையாக
'கண்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகன்கண்,
எட்டாம் வேற்றுமையாக
விழி வேற்றுமை
எடுத்துக்காட்டாக : அழகா!,
என்றவாறு தான்
முதல் எட்டு வேற்றுமைகளும்
தமிழில் அமைகிறதே!
எப்படித் தான் இருப்பினும்
மூன்றாம் வேற்றுமைக்கு
ஆன், ஆல், ஓடு, ஒடு ஆகிய
நான்கு உருபுகள் இருப்பதை
இலக்கியங்கள் சாற்றுமே!
ஆகப் பிந்திய தகவலாக
உடன், கொண்டு ஆகிய உருபுகளும்
மூன்றாம் வேற்றுமையாமே!
வரும் சொல் முதல் எழுத்து
உயிராய் இருப்பின்
ஆன், ஓடு உருபுகளும்
உயிர்மெய்யாய் இருப்பின்
ஆல், ஒடு உருபுகளும்
வந்தமையக் காண்பீரே!
நான்காம் வேற்றுமையிலும்
கு, ஆ, பொருட்டு, நிமித்தம் என
நான்கு உருபுகள் உண்டாமே!
ஐந்தாம் வேற்றுமையிலும் பாரும்
இன், இல், இருந்து, நின்று,
காட்டிலும், பார்க்கிலும் என
உருபுகள் ஆறாமே!
ஆறாம் வேற்றுமையில்
அது, ஆது, ஆ, உடைய என
நான்கு உருபுகளும் உண்டாமே!
ஏழாம் வேற்றுமையில்
கண், கால், உள், இல், தலை,
உழி, புறம், அகம், பால், இடை என
உருபுகள் பத்தாமே!
எட்டாம் வேற்றுமையிலும்
அப்ப!, அம்ம! என விளிப்பது
அண்மை விளி என்றும்
அப்பா!, அம்மா! என விளிப்பது
சேய்மை விளி என்றும்
சொல்லிக் கொள்கிறார்களே!
சரி! சரி!
வேற்றுமை தெரிந்தால்
வேற்றுமையிலும்
சொற்புணர்ச்சியைப் பார்ப்போமே!
எடுத்துக்காட்டாக
ஆட்டை+கட்டினான்=ஆட்டைக் கட்டினான்
நாயை+துரத்தினான்=நாயைத் துரத்தினான்
இவ்வாறே
இரண்டாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
நம்பியால்+பெற்றான்=நம்பியாற் பெற்றான்
வாளால்+குறைத்தான்=வாளாற் குறைத்தான்
என்றவாறே
'ல்' என்பது 'ற்' ஆகத் திரிந்தும்
மூன்றாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வேலிக்கு+கம்பி=வேலிக்குக் கம்பி
பாம்புக்கு+பகை=பாம்புக்குப் பகை
என்றவாறே
நான்காம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எஞ்சியிருக்கும்
மிகும் இடம், மிகா இடம்
வரும் முறை தொடரலாம் என
எண்ணியிருக்கிறேன்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/03/006.html

Wednesday, March 20, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் - 006



நின்ற சொல்லொடு
வந்த சொல் இணைவதே
சொற்புணற்சியாம்!
சொற்புணற்சியின் போது
சொற்களில் மாற்றம் நிகழாமல்
இணையும் செயலே
இயல்புப் புணற்சியாம்!
எடுத்துக்காட்டாக
"தமிழ் + வளம்=தமிழ் வளம்" என்று
புணருவது இயல்பே!
நின்ற சொல்லுடன்
வரும் சொல் சேரும் பொழுது
சொற்களில் மாற்றம் நிகழுமாயின்
விகாரப் புணற்சியாம்!
தோன்றல், திரிதல், கெடுதல் என
மூவகை விகாரமுண்டாம்!
"ஏழை + குடும்பம்= ஏழைக்குடும்பம்" என்பதில்
'க்' எனும் மெய் தோன்றியமையே
தோன்றல் விகாரப் புணற்சியாம்!
"வில் + பொறி=விற்பொறி" என்பதில்
'ல்' ஆனது 'ற்' ஆகத் திரிந்தமையே
திரிதல் விகாரப் புணற்சியாம்!
"மரம் + வேர்=மரவேர்" என்பதில்
'ம்' எனும் மெய் கெட்டுப் போவதே
கெடுதல் விகாரப் புணற்சியாம்!
இயல்புப் புணற்சியும்
விகாரப் புணற்சியும்
உரைநடைக்கும்
செய்யுளுக்கும் உதவும் வேளை
செய்யுளுக்கு உரித்தானதாய்
செய்யுள் விகாரமும் உண்டே!
இயல்பிலும் விகரத்திலும்
சொற்கள் புணரும் போது
நெறிமுறைகள் சிலவற்றை
பின்பற்றவும் வேண்டுமே!
உயிர்க்கு முன்னும்
உயிர்மெய்க்கு முன்னும்
ஒரு, ஓர், அது, அஃது என்பன
வேறுபட்டே புணருமாம்!
வந்த சொல்லின் முதலெழுத்து
உயிராக இருப்பின்
நின்ற சொல்
ஓர், அஃது என்றே புணருமாம்!
வந்த சொல்லின் முதலெழுத்து
உயிர்மெய்யாக இருப்பின்
நின்ற சொல்
ஒரு, அது என்றே புணருமாம்!
வந்த சொல் ஆயிரமாயிருக்க
நின்ற சொற்களான
ஒரு, இரு என்பன
ஓர், ஈர் என்று மாறி
ஓராயிரம், ஈராயிரம் என்றே புணருமாம்!
'யா' வினது ஒலி
அகர ஒலி போல ஒலித்தலால்
விதிவிலக்காக
'யா' வின் முன் வரும்
ஒரு, அது என்பன
ஓர், அஃது என்றே புணருமாம்!
உயிருக்கு முன் 'ஓடு' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'ஒடு' என்றும்
உயிருக்கு முன் 'ஆன்' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'ஆல்' என்றும்
உயிருக்கு முன் 'தோறும்' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'தொறும்' என்றும்
சொற்கள் புணரும் வகையில்
தொடர் அமையுங்களேன்!
எடுத்துக்காட்டாக
உயிருக்கு முன்னே
பெருமை(பெரிய) + ஆசிரியர்=பேராசிரியர்;
சிறுமை(சிறிய) + அன்னை=சிற்றன்னை;
என்றும்
உயிர்மெய்க்கு முன்னே
பெருமை(பெரிய) + கதை=பெருங்கதை;
சிறுமை(சிறிய) + கதை=சிறுகதை;
என்றவாறும்
புணருவதைப் பாருங்களேன்!
இன்னும் சொல்லப் போனால்
ஓர் அறிவிப்பு (ஓர்)
ஒரு நற்செய்தி (ஒரு)
ஈர் ஆயிரம் / ஈராயிரம் (ஈர்)
இரு நன்மைகள் (இரு)
அஃது ஒரு நாய் (அஃது)
அது கருங்குரங்கு (அது)
கற்றாரோடு ஏனையவர் (ஓடு)
விலங்கொடு மக்கள் (ஒடு)
நீரான் அமையும் (ஆன்)
வாய்மையால் வெல்லலாம் (ஆல்)
வெளிப்படுந்தோறும் இனிது (தோறும்)
களித்தொறும் கள்ளுண்டல் (தொறும்)
என்றெல்லோ புணருமாம்!
'உடன்படு மெய்' என்ற
எழுத்து ஒன்று இருப்பதை
நினைவிற் கொள்வீர்களா?
நின்ற சொல்லின் ஈறு உயிராயும்
அதாகப்பட்டது
உயிரெழுத்து ஒலியாயும்
வரும் சொல்லின் முன்னும்
வருவது உயிராயும் இருப்பின்
உயிரும் உயிரும்
ஒன்று சேராது என்பதால்
புணர்ச்சிக்கு இடமில்லையாம்!
சொற்கள் புணர வேண்டுமாகையால்
ஈருயிர்களுக்கிடையே
மெய்யொன்று தோன்றி
ஓருயிரைத் தான் பெற்ற உடம்பே
உடம்படு மெய்யாம்!
உடம்பை அடுத்து வரும்
மெய் என்பதை விட
சொற்கள் புணர உடன்படும்
மெய் என்றே கருதி
ஈருயிர்களுக்கிடையே
தோன்றும் மெய்யை
உடன்படு மெய் என்போமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
இ, ஈ, ஐ ஆகியவற்றில்
ஏதுமொன்று வரின்
இடையில் யகர(ய) மெய்யும்
'ஏ' இன்றி ஏனைய எட்டுக்கும்
இடையில் வகர(வ) மெய்யும்
ஏகாரம்(ஏ) தோன்றின்
யகர(ய), வகர(வ) மெய்யிரண்டும்
உடன்படு மெய்யாகத் தோன்றுமே!
ஏகாரத்தில்(ஏ) முடியும் நின்ற சொல்
பெயர்ச்சொல்லாயின் வகரமும்(வ்)
இடைச்சொல் - அதாவது
அசைநிலையாயின் யகரமும்(ய்)
பண்புச் சொல்லுக்குத் தான் இரண்டும்
உடன்படு மெய்யாகுமே!
யகர(ய்) உடன்படு மெய்யிற்கு
கிளி(இ) + அழகு = கிளியழகு
தீ(ஈ) + அழல் = தீயழல்
மை(ஐ) + அழகு = மையழகு
எடுத்துக்காட்டாகுமே!
வகர(வ்) உடன்படு மெய்யிற்கு
பல(அ) + இடங்கள் = பலவிடங்கள்
பலா(ஆ) + அடியில் = பலாவடியில்
நடு(உ) + இடம் = நடுவிடம்
பூ(ஊ) + அழகு = பூவழகு
எ(எ) + அழகு = எவ்வழகு
(இங்கு 'எ' - வினாச்சுட்டு)
நொ(ஒ) + அகலும் = நொவ்வகலும்
இங்கு 'நொ' - துன்பம்)
கோ(ஓ) + இல் = கோவில்
கௌ(ஔ) + அழுக்கு = கௌவழுக்கு
(இங்கு கௌவுதல் - திருடுதல்; அழுக்கு - குற்றம்)
எடுத்துக்காட்டாகுமே!
நின்ற சொல் ஈறு ஏகாரத்திற்கு
அவனே(ஏ) + அழகன் = அவனேயழகன்
(இங்கு அசைநிலை - இடைநிலை ஏகாரம்)
ஏ + எலாம் = ஏவெலாம்
(இங்கு ஏ-அம்பு பெயர்ச்சொல்)
சே(ஏ) + அடி = சேயடி
(இங்கு சே-செம்மை பண்புச்சொல்)
சே(ஏ) + அடி = சேவடி
(இங்கு சே-செம்மை பண்புச்சொல்)
எடுத்துக்காட்டாகுமே!
நன்னூலர் காலத்தில்
ஏகாரத்திற்கு எப்படியோ
தொல்காப்பியர் காலத்தில்
ஆகாரத்திற்கும் அப்படியாமே!
நின்ற சொல் ஈறு ஆகாரம்(ஆ)
பெயர்ச்சொல் ஈறாயின் வகரமும்
அகரம் நீண்டு நின்ற
சுட்டுச்சொல் ஈறாயின் யகரமும்
உரிச்சொல் ஈறாயின் யகரமும்
உடன்படு மெய்யாகுமாமே!
இதோ
ஆ + ஈன = ஆவீன
(இங்கு ஆ-பசு பெயர்ச்சொல்)
ஆ + இடை = ஆயிடை
(இங்கு அகரச்சுட்டு நீண்டு நின்றது)
மா + இருஞாலம் = மாயிருஞாலம் (பேருலகம்)
(இங்கு மா-உரிச்சொல்)
என்பன எடுத்துக்காட்டாம்!
நின்ற மெய்யீற்றுக்கு
அடுத்து உயிர் வந்தால்
வந்த உயிர்
நின்ற மெய்யின் மேல் ஏறுமே!
எடுத்துக்காட்டாக
ஆண் + அழகு = ஆணழகு ஆகுமே!
"உயிர்வரின் உக்குறள்
மெய்விட்டோடும்" என்பது
நின்ற சொல்
குற்றியலுகர ஈறாயின்
வந்த சொல்லின் முதல் எழுத்தான
உயிர் அதன் மீது ஏறுதலேயாம்!
"கொக்கு + அழகு = கொக்கழகு" என்பதில்
'கு' இலிருந்த 'உ'
'க்' ஐ விட்டோட
'க்' கோடு அகரம் இணைந்தமை
எடுத்துக்காட்டு ஆகுமே!
எண்ணிப்பாரும்
காசு + அகலும் = காசகலும்
நாடு + என்னுயிர் = நாடென்னுயிர்
காது + இரண்டு = காதிரண்டு
மார்பு + அகன்றது = மார்பகன்றது
ஆறு + அழகு = ஆறழகு
எல்லாம் எடுத்துக்காட்டே!
சொற்கள் புணரும் வேளை
மிகும், மிகா இடங்கள்
வரும் முறை காண்போமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

கரித்துண்டு


நாட்டில
அரசு கவிழும் என்றால்
மக்களிடையே
வேலையில்லாச் சிக்கல் தான்!
வீட்டில
உறவுகளிடையே முறிவு என்றால்
தலைவர்மாருக்கு
வேலையில்லாச் சிக்கல் தான்!
தெருவெளியில
காதல், மோதல் என்றால்
காளைக்கும் வாலைக்கும்
வேலையில்லாச் சிக்கல் தான்!
நடுவழியில
பிணவாடை வீசும் என்றால்
ஆளுக்காள்
வேலையில்லாச் சிக்கல் தான்!
செய்தி ஏட்டில
எத்தனையோ
இழவுச் செய்தி வந்தாலும்
அரசின் காதுக்கு எட்டல...
என் பாட்டில
எழுதக்கூட
எழுதுகோல் வேண்டக் காசில்லை...
நானும்
பாரதியைப் போல
கரிதுண்டு பிடித்து
தெருவெளியில எழுதப் போறேனுங்க...!

செய்தி:-
இந்தியாவில்
வெள்ளையனுக்கு எதிராக
பாரதி எழுப்பிய போர் முரசெல்லாம்
கரிதுண்டால் எழுதி
தெருச்சுவரெல்லாம்
நிரம்பி வழியக் கிடந்ததாமே!
சான்றுக்கு
பாவலர் வைரமுத்துவின்
"கவிராஜன் கதை" என்னும்
புதுக்கவிதைக் காவியத்தை
படித்துப் பாருங்களேன்!


Wednesday, March 13, 2013

பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டு


மங்கலம், அமங்கலம் என்பது
தமிழ் கூறும் இலக்கணம்
என்னவென்று தெரியுமா?
ஒருவர் செத்துப் போனால்
'செத்துப் போனார்' என்றுரைக்காமலே
'காலமாகி விட்டார்' என்றழைப்பது
மங்கலம் ஆகுமாம்!
ஒருவர் திருமணம் செய்தால்
'நல்ல துணையைக் கைப்பிடித்தார்' என்றுரைக்காமலே
'சனியனைப் பிடிச்சிட்டார்
இனிச் சீரழியப் போகிறார்' என்றழைப்பது
அமங்கலம் ஆகுமாம்!
பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டோ
இவ்விரண்டையும் இணைத்தே
கூடற் சுவை(அங்கதச் சுவை)
சொட்டப் பாபுனைவதே!
ஒருவரை
புகழ்வது போல இகழ்வதும்
இகழ்வது போல புகழ்வதும்
கூடற் சுவை(அங்கதச் சுவை) என்றறிவோம்!
எடுத்துக் காட்டாக
"வாருங்கள் மது அருந்தலாம்
போதை தலைக் கேறினால்
நிர்வாணமாய் நடைபோடலாம்!" என
புகழ்வது போல இகழலாமே!
எடுத்துக் காட்டாக
"பண்ணையாருக்குப் பெருஞ்சோர்வு(நட்டம்)
கையிருப்பைக் கிள்ளி விசுக்கிறார்
ஊரெல்லாம் பசியாறுகிறது!" என
இகழ்வது போல புகழலாமே!
படிப்பவர் மூளைக்கு வேலை கொடுக்கும்
பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டைக் கையாண்டு
பா புனைவோம் வாருங்கள்!

பா புனையப் படிக்க வேண்டுமா? - 01

காதல் வந்தால்
பா (கவிதை) புனையச் சுகம்
என்போரிருக்க
பா புனையப் படிக்க வேண்டுமா?
என்றும்
சிலர் கேட்காமலில்லை!
உண்ணான நல்ல கேள்வி தான்!
பா புனையப் படிக்க வேண்டாமப்பா...
பா புனைய முயன்று பாருங்களேன்!
முயன்ற வேளை
இலக்கணம் குறுக்க வந்து நிற்குதோ!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய
இலக்கணம் குறுக்க வரலாமோ?
எடுத்துக்காட்டாக
"வயிறுப்பசி கிள்ள
மெள்ள அம்மாவின் நினைவு
மெல்ல உணவு தருவாளென்றே!" என்று
தொடுத்துப் பாருங்கள்...
உள்ளத்தில் உள்ளதை
இயல்பாக எடுத்துச் செல்லுங்களேன்...
அது கூட நல்ல பா தான்!

குறிப்பு: இலக்கணப் பாக்களில் (மரபுக் கவிதையில்) யாப்பிலக்கண வரம்பை மீறியும் பாக்கள் அமைவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனைச் செந்தொடை என்பர்.
மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.
சான்று: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88

Thursday, March 7, 2013

உங்களால் முடிந்தால்...


பாட முடிந்தால் பாடுங்கள்
ஆட முடிந்தால் ஆடுங்கள்
எழுத முடிந்தால் எழுதுங்கள்
நடிக்க முடிந்தால் நடியுங்கள்
பேச முடிந்தால் பேசுங்கள்
எண்ண முடிந்தால் எண்ணுங்கள்
பண்ண முடிந்தால் பண்ணுங்கள்
எல்லாம்
நல்ல தமிழாக இருக்க
உங்கள் கலைத்திறமையை
வெளிப்படுத்துங்கள் - அதுவே
உங்கள் உடல் அழிந்தாலும்
உங்களை உலகில்
பாரதியைப் போல...
கண்ணதாசனைப் போல...
வாழ வைக்கும் என்பதை அறிவீரா?
உண்மையைச் சொல்லப் போனால்
எந்தக் கலைஞனும்
இவ்வுலகிலே
சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

Sunday, March 3, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-005


யாப்பில் அலகிடுதல் என்பது
சீரை அசைகளாக
உடைத்துப் பார்ப்பதேயாகும்!
அலகிடாமலும்
பா புனைய இயலாது...
அலகிட்டாலும் கூட
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
மெய்யெழுத்து என்பன
செய்யுளில் அலகு பெறாது என்போம்!
தனிக்குற்றெழுத்தை
கொண்டிராத சொல்லில்
மாற்றெழுத்தின் பின்னே
வல்லின மெய்யின் மேல்
ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாம்!
க, ச, ட, த, ப, ற எனும்
வல்லினம் மேல் உகரம் ஏற
கு, சு, டு, து, பு, று என வருவது
குற்றியலுகர எழுத்தாம்!
ஆறு, காசு, நாடு என்பதில்
நெட்டெழுத்தின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
நெடிற்றொடர்க் குற்றியலுகரமாம்!
அஃது, எஃகு, கஃசு என்பதில்
ஆயுத எழுத்தின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
ஆயுதத் தொடர்க் குற்றியலுகரமாம்!
மதகு, பழுது, வயிறு என்பதில்
த, ழு, யி என்பன
த்+அ, ழ்+உ, ய்+இ என அமைந்த
உயிர் மெய்களின் பின்னே
(அ, உ, இ ஆகியவற்றின் பின்னே)
குற்றியலுகர எழுத்து வரின்
உயிர்த் தொடர்க் குற்றியலுகரமாம்!
நாக்கு, பாட்டு, கூற்று என்பதில்
வல்லின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
வன்றொடர்க் குற்றியலுகரமாம்!
சங்கு, நண்டு, நன்று என்பதில்
மெல்லின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
மென்றொடர்க் குற்றியலுகரமாம்!
பல்கு, ஆய்சு, மார்பு என்பதில்
இடையின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
இடைத் தொடர்க் குற்றியலுகரமாம்!
நின்ற சொல்லின் ஈற்றில்
குற்றியலுகர எழுத்து நிற்க
வரும் சொல்லின் முன்னே
'யா' இருக்கும் வேளை பாரும்
குற்றியலுகரம்
குற்றியலிகரமாகத் திரியுமாம்!
'ம்' என்னும் மெய்யின் மீது
ஏறிவரும் இகரமும்
குற்றியலிகரமாம்!
எடுத்துக்காட்டாக
"காசு + யாது = காசியாது?"
"காது + யாது = காதியாது?"
என்பன முதல் வகையிலும்
"கேள் + மியா = கேண்மியா?"
"சென் + மியா = சென்மியா?"
என்பன இரண்டாம் வகையிலும்
சி, தி, மி என்பன
குற்றியலிகர எழுத்துக்களாம்!
"குடதிசை" இல் 'கு' போன்று
சொல்லின் முதலில் வரும் உகரம்
உ, கு, சு, ணு என
தனிக் குற்றெழுத்தாக உள்ள உகரம்
நகு, பசு, மறு என
தனிக் குற்றெழுத்தைத் தொடரும் உகரம்
புறவு, அலமு, புழுவு என
இரு குறிலைத் தொடரும் உகரம்
"தள்ளியிருமு" இல் 'மு' போன்று
இரு எழுத்துக்களுக்கு மேல் வரும்
சொல்லின் ஈற்றில்
கு, சு, டு, து, பு, று தவிர்ந்த உகரம்
எல்லாமே முற்றியலுகரம் தான்!
குறிலுக்கு ஒரு மாத்திரையாயினும்
குற்றியலுகரத்தில் வரும்
உகரத்திற்கும்
குற்றியலிகரத்தில் வரும்
இகரத்திற்கும்
குறுகி ஒலிப்பதால் அரை மாத்திரையாம்!
குறுகி ஒலிக்கும் எழுத்துக்கள்
மாத்திரையின் அளவை மாற்றும்
அவற்றைக் குறுக்கங்கள் என்போம்!
'ஐ' என்னும் உயிருக்கு
மாத்திரை இரண்டு - அது
ஒரு மாத்திரையாகக் குறைந்து
தன் வடிவம் மாறாமலோ
தன் வடிவம் திரிந்தோ
சொல்லுக்கு இடையிலும்
முதலிலும் ஈற்றிலும்
வருகின்ற வேள குறுகி ஒலிப்பதால்
ஐகாரக் குறுக்கமாம்!
"ஐந்தவித்தா னாற்ற " என்று (25 ஆம் குறள்)
தொடரும் குறளடியிலே
'ஐ' தன் வடிவம் மாறாது
குறுகி ஒலித்திடினும்
செய்யுள் நிலையில் 'நேர்' என்றே
அலகிடப்படுகிறதே!
"வையத்துள் வாழ்வாங்கு " என்று (50 ஆம் குறள்)
தொடரும் குறளடியிலே
'ஐ' தன் வடிவம் திரிந்து
'வை' என்று வந்தே
குறுகி ஒலித்திடினும்
'நேர்' என்றே அலகிடப்படுகிறதாம்!
"மனத்துக்கண் மாசில னாத லனைத்தற" என்ற
அடியின் ஈற்றுச் சீரான
"லனைத்தற" இல் 'ஐ' தன் வடிவம் திரிந்து
சொல்லுக்கு (அ)சீர்க்கு இடையே
குறுகி ஒலிப்பதால்
நெடில் 'ஐ' குறிலாகிறதே!
"வீழ்நாட் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்" என்ற
அடியின் இரண்டாம் சீரான
"படாஅமை" இல் ஈற்றில்
ஐகாரம் தனது வடிவம் திரிந்து
குறுகி ஒலிப்பதால்
நெடில் 'ஐ' குறிலாகிறதே!
'ஔ' என்னும் உயிருக்கு
மாத்திரை இரண்டு - அது
ஒரு மாத்திரையாகக் குறைந்து
மொழிக்கு முதலில் வந்து குறுகுவதால்
ஔகாரக் குறுக்கமாம்!
"உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்" என்ற
அடியின் மூன்றாம் சீரான
"கௌவை" இல் முதலில் வரும்
'ஔ' தன் வடிவம் திரிந்து
குறைந்து ஒலித்திடினும்
செய்யுள் நிலையில் 'நேர்' என்றே
அலகிடப்படுகிறதே!
ணகர, னகர மெய்களுக்குப் பின்னும்
வகர மெய்க்கு முன்னும்
அரை மாத்திரையான மகரம்
கால் மாத்திரையாகக் குறுகி ஒலிப்பதே
மகரக் குறுக்கமாம்!
ஈரசைச் சீர்களான
மருளும், போலும் என்பவற்றை
ஓரசைச் சீர்களாக்கினால்
மருண்ம், போன்ம் எனக் குறுகும் வேளை
தோன்றும் 'ம்' உம்
"தரும் வளவன்" என்பதில்
'வ' இற்கு முன்னுள்ள 'ம்' உம்
மகரக் குறுக்கங்களே!
தனிக் குறிலை அடுத்து வரும்
லகர, ளகர மெய்கள்
ஈற்றெழுத்தாகவுள்ள சொல்லுக்கு
பின்னொட்டாக வரும்
சொல்லின் முதலில் வரும் தகரம்
சொற்புணற்சியின் போது
ல், ள் ஆகியன ஆயுதமாகத் திரிந்து
இணையுமாம் - அதுவே
ஆயுதக் குறுக்கமாம்!
எடுத்துக்காட்டாக
கல் + தீது = கஃறீது எனவும்
அல் + திணை = அஃறிணை எனவும்
முள் + தீது = முஃடீது எனவும்
ஆயுதக் குறுக்கம் அமையுமே!
இங்கு
அரை மாத்திரை ஆயுதம்
கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கிறதே!
சொற்களை ஆக்கும்
எழுத்துக்களைப் படித்தோம்...
எழுத்துக்களான சொற்கள் தான்
பாக்களில் வரும் சீருமல்ல...
அசைகளால் ஆகும் சீர்கள்
தளைக்கேற்ப அமைவதால்
சொற்கள் கூட உடையலாம்!
உடையும் சொல்லை ஒட்டவோ
பிரியும் சொல்லைச் சேர்க்கவோ
பொருள் தரும் வகையில்
அசை, சீர், தளைக்கு இசைவாக
பாக்களைப் புனைவதற்கு
சொற்புணர்ச்சியும் தேவை தானே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க