Sunday, January 27, 2013

பாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)


நான் படித்த பாவலர்களின் பாக்களிலே
பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின்
தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென
'தமிழ்' என்று தலைப்பிட்டுப் பாடிய பா
தமிழில் பாபுனைவோருக்கு அறிவுப் பா!

பாவலன் பாடும் பாடுபொருளைவிட
பாவலன் பாட்டில் வரும் தூரநோக்கு
எண்ணங்களை எண்ணிப் பாருங்களேன்...
முடிந்தால் பாரதியின் எண்ணங்களைப் போல
பாபுனைய விரும்புவோர் பாடுங்களேன்!

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
      உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார்.

ஆக்கியோன் பாரத நாட்டுச் சுப்பிரமணிய பாரதியார்

4 comments:

  1. "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை;
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."

    இதைத் தான் செய்யனும் என்று பாரதி சொன்னார், ஆனால் நாம் அதை செய்யத் தவறினோம், இன்று பிற மொழிகளை கலந்து பேசி எழுதுகிறோம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இன்றும்
      ஒன்றும் கெட்டுப்போகவில்லை
      என்றும் மங்காது எங்கள் தமிழ்...
      இன்று
      பிற மொழிகளைக் கலந்து பேசி எழுதுவதை
      நறுக்கென வெட்டிக்கொண்டோமானால்
      பாரதியின் தூரநோக்கில் மின்னுவதை
      கண்முன்னே காண்போம் ஐயா!
      பிற மொழிகளைக் கலந்து பேசி எழுதுதாத
      தூய தமிழைப் பேணுவதே
      தமிழர் ஒவ்வொருவரது கடமையானால்
      உண்மையில் உலகெங்கும் வாழ்வோர்
      தமிழை வணக்கம் செய்வர்
      பாரதியின் எண்ணங்கள் நிறைவேறுமே!

      Delete
  2. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
    தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.