Tuesday, January 1, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-001


வியாசனுக்கு,
வியாசன் சொல்லிக் கொள்ள
விநாயகா - நீ
ஒற்றைக் கொம்புடைத்து
எழுதிக் கொடுத்து உதவினாய்!
எனக்கும்
விநாயகா - நீ
யாப்பறிந்து பாபுனைய
பாவிலக்கணம்
நாளைய தலைமுறைக்கு
கடுகளவேனும் சென்றடைய
எள்ளளவேனும் என்னால் எழுத
துணை வேண்டி நிற்கின்றேன்!
என் தாய்க்கு
நானொரு பிள்ளையாயின்
வையகமெங்கும் தமிழ் பரப்பியே
நான் சாக வேண்டும்
தமிழ்த்தாயே - நீ
எனக்குத் துணை நிற்க,
நான் தமிழ் பரப்ப
உலகெங்கும் தமிழ் பரவ
தமிழ்த்தாயே வழிகாட்டு!
யாப்பியல், செய்யுளியல்
செவ்வனே கற்ற பாவலரே
என் முயற்சியில்
தவறேதும் கண்டிருப்பின்
சுடச் சுடச் சுட்டி
திருத்திய வழியில் தொடர
துணை நிற்குமாறு
தங்கள் கால்களில் வீழ்ந்தே
பணிகின்றேன்!
தமிழறிந்து சுவை தெரிந்து
புதுப் பா புனைவோரும்
என் முயற்சியில்
தவறு கண்டிருப்பின்
அஞ்சாமல் தாக்கி நின்று
திருந்தத் தொடர்ந்து எழுத
துணை செய்யுங்களேன்!
என் இனிய உறவுகளே!
நான்
யாப்பறிந்து பாபுனைய
பாவிலக்கணம் கூற
தாங்கள்
எனக்குத் தரும் கூலியாக
"நீங்கள் கற்ற தமிழை
உலகெங்கும் பரப்புங்கள்" என்பேன்!
தேவைப்படின் - நானே
தங்களுக்குத் துணையாயிருப்பேன் என
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என
அன்புடன் அழைக்கின்றேன்!
உண்மையின் பின்னே
உருளும் உலகம் போல
பாபுனையத் தகுதி
உங்கள் உள்ளங்களில் இருக்கென
நம்பியே எழுதத் தொடங்குங்கள்...
எழுதியதை
மீள மீள வாசியுங்கள்...
இனிமையாக இருக்கும் வண்ணம்
மாற்றி மாற்றி எழுதி
உள்ளத்தில் மகிழ்வு வரும் வரை
வாசிக்க இனிமையாக எழுதுங்கள்!
யாப்பு என்றால்
யாத்தல் அல்லது கட்டுதல் எனலாம்!
செய்யப்படுவதாக இருப்பின்
செய்யுள் எனலாம்!
பாக்களைக் கட்டுவதற்கு
இல்லாட்டிச் செய்யுளை அமைக்க
இருக்கின்ற, இருக்கக்கூடிய
ஒழுக்க நெறியே
யாப்பிலக்கணம் எனும்
பாவிலக்கணம் என்போம்!
யாப்பறிந்து பாபுனைய வந்தவருக்கு
என்ன இருக்கு என்று கேட்டாலும்
சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை...
எண்பத்தேழில் எழுதுகோல் ஏந்தினேன்
தொண்ணூறில் முதற்பா
பத்திரிகையில் வெளியாயிற்று...
உள்ளத்தில் நிரம்பி வழிந்த
எண்ணங்களைச் சுமக்க இயலாமல்
யாப்பறியாமல் பாபுனைந்தேன்...
பாவுக்கு ஒலி நயம் / ஓசை நயம்
இருக்க வேண்டுமென்றனர் சிலர்...
எதுகை, மோனை இருந்தால்
பாவரிகள் வாசிக்கச் சுவையாம் சிலர்...
என் பாக்களுக்கு
தாக்குரையும் திறனாய்வும்
துணிவாகத் தந்தவர்களின் கருத்துக்களை
பணிவாக ஏற்றுக்கொண்ட அறிவோடு
எழுத எழுதப் பட்டறிவாம்
எழுதித் தேறவே
"யாப்பறிந்து பாபுனைய...",
"யாப்பரங்கம்", "யாப்பதிகாரம்" போன்ற
நால்களைப் படித்த அறிவு மட்டும்
என் தகுதி என்றுரைத்து
"யாப்பறிந்து பாபுனைவது எப்படி?" என்பதை
இயன்றவரை, முடிந்தவரை
நிறைவு தரும் வகையில்
எடுத்துரைக்க முனைகின்றேன்!
பல நிறப் பூக்களெடுத்து
பூமாலை கட்டுவது போல
பொருள் தரும் சொல்லெடுத்து
இசை எழும் வகையில்
சொல்லடுக்கிப் பாக்கட்ட (பாபுனைய)
நல்லதோர் ஒழுங்கு ஒன்றாம்
யாப்பிலக்கணம் / பாவிலக்கணம் என்று
எடுத்துரைக்க ஏற்பீர்கள் என
நம்பியே தொடங்குகின்றேன்!
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்!
தமிழ் எழுத்துக்கள் எல்லாம்
இருநூற்று நாற்பத்தேழு என்றுரைப்பது
யாப்பில் வரும்
எழுத்து உறுப்பு அல்ல...
பன்னிரு உயிரும்
ஆங்கே ஆயுதம் ஒன்றும்
பதினெட்டு மெய்யுமாக
தமிழில் முப்பத்தியொரு எழுத்தாம்!
பன்னிரு உயிரும் பதினெட்டு மெய்யும்
பிணைகின்ற போது
இருநூற்றிப் பதினாறு தோன்றுவதும்
யாப்பில் வரும்
எழுத்து உறுப்பு அல்ல...
குறல், நெடில், மாத்திரை,
குற்றியலுகரம், முற்றியலுகரம் என
எழுத்தோடு தொடர்புடைய
இயல்புகளை ஆய்வு செய்தலே
யாப்பில் வரும் எழுத்து உறுப்பாகும்!
(தொடரும்)

2 comments:

 1. வாசித்தேன் மேலும் தொடரும் எண்ணம். வாழ்த்துடன்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 2. தங்கள் வாழ்த்துகளுடன் தொடருகிறேன்.
  இனிவரும் பதிவுகளிலும்
  தங்கள் கருத்தைக் காணவிரும்புகிறேன்.

  ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.