Monday, June 30, 2014

இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்


வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை சிகரம் பாரதி ஏற்பதாகத் தெரிய வந்ததும் அவரது தளத்தைப் பார்க்க முடிந்தது.
"எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல" என்ற ஆய்வுக் கட்டுரையையும் அல்லவா படித்தேன்.
எனது நாட்டைச் சேர்ந்தவர் என்றதும் பாதி மகிழ்ச்சி, சிறந்த படைப்பாளி என்பதில் பாதி மகிழ்ச்சி, மொத்தத்தில் இப்பதிவு தந்த நிறைவில் முழு மகிழ்ச்சி!
பாபுனைய விரும்புவோருக்கு இப்பதிவு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என்பதில் தங்களுடன் இதனைப் பகிர விரும்புகிறேன்.

"புதுக் கவிதையயன்று பார்க்கும்போது அதன் முன்னோடியாகத் தமிழில் மஹாகவி பாரதியையே குறிப்பிடுகிறோம்." என்றும் "கவிதை என்பது மன உணர்வுகளின் ஒரு வெளிப்பாடே. சில புனைவுகளைச் சேர்த்துச் சொல்வதால் அதற்கென ஒரு தனி நடையும் சிறப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புனைவுகளின்றி ஒரு நயமின்றிச் சொல்லப்பட்டால் அது ஒருபோதும் சிறந்த கவிதையாக மாட்டாது." என்றும் அவர் கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

“இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள் மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்.” என
மஹாகவி கூறியிருப்பது பாடுபொருளின் உள்ளடக்க அமைவை வெளிப்படுத்தி நிற்கிறது. இது சிகரம் பாரதி எடுத்துக்காட்டிய பாடுபொருள் பற்றிய சான்று.

பாபுனைய விரும்புவோர் இவரது இப்பதிவைப் படிப்பதால் பாபுனையும் போது கருத்திற்கொள்ள வேண்டிய வழிகாட்டலைப் பெறலாம்.
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.
http://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html#.U7CrWfmSzbN

Thursday, June 26, 2014

புதுக்கவிதை எழுத முன்...

கவிதை என்பது
எண்ணங்களைக் கொட்டிவிட்டால் ஆகாது...
வரிக் (வசன) கவிதைக்கு
பாரதியின் 'குயில் பாட்டு' படியுங்கள்...
புதுக்கவிதைக்கு
மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' படியுங்கள்...
மரபுக் கவிதைக்கு
கண்ணதாசன் பாடல்களைப் படியுங்களென
எடுத்துச் சொல்ல ஏது உண்மை?
பாக்கள் (கவிதைகள்), பாடல்கள் எல்லாம்
இலக்கண உடை உடுத்தால் தான்
உயிர் ஊட்டப்பட்டிருக்குமே!
அரும்புகள் மலரட்டும் தளத்தில்
"புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு" என்ற
பதிவைப் படித்த பின்
பாப்புனைய விரும்புவோருக்கு
நல்ல பாடமாக இருக்குமென்றே எண்ணி
என் உள்ளம் நிறைவோடு
உங்களுடன் பகிர விரும்புகிறேன்!
கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டு
ஆக்குவது புதுக்கவிதை அல்ல...
புதுக்கவிதைக்கும்
படிமங்கள், வடிவங்கள் எனப் பலவுண்டு...
புதுக்கவிதை எழுத முன்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!

http://pandianpandi.blogspot.com/2013/08/blog-post_25.html

Wednesday, June 25, 2014

பாப்புனையப் பயிற்சி தேவை

பாப்புனைய விரும்புவோருக்கு
சிறந்த வழிகாட்டலாக இருக்கும்
இன்றைய கவிதைகள் மீதான
கண்ணோட்டத்தைத் தந்திருக்கும்
அறிஞர் வா.மணிகண்டன் அவர்கள் எழுதிய
"யார் கண்டுகொள்கிறார்கள்?" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
"கலை என்பது பயிற்சி.
எழுத்தும் அதில் அடக்கம்.
தொடர்ந்து பயிற்சி செய்வோம்." என்ற
அறிஞரின் வழிகாட்டலைப் பின்பற்றுங்கள்!
மேலும்
அறிஞரின் கணிப்புப் படி
"எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற
தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன." என்ற
நிலைமை வருவதேன் என்பதை
படிக்க மறந்து விடாதீர்கள்!

இதோ
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
அவரது பதிவைப் படியுங்கள்!
http://www.nisaptham.com/2014/06/blog-post_20.html

புதிய புதிய சொல்கள் ஆள
புதிய புதிய நுட்பங்கள் நுழைய
எழுத எழுத வரும் பட்டறிவு பெருக
சிறந்த பாக்களைப் புனையலாம் என்பதை
அறிஞரின் பதிவு சொல்லாமல் சொல்கிறதே!
பாப்புனைய விரும்புங்கள்
பாப்புனைய முயலுங்கள்
மீள மீளப் படையுங்கள்
ஆழமாக எண்ணுங்கள்
சிறந்த பாக்களை வெளிப்படுத்த
பட்டறிவு துணை நிற்குமே!

Friday, June 20, 2014

உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?


"சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்
விக்கல் வந்தது.
அம்மா
தண்ணீரைக் குடி என்று நீட்டினாள்.
தங்கை
எங்கையண்ணே களவு எடுத்தியள் என்றாள்.
எனக்கு
எதுவும் சொல்லவோ செய்யவோ
முடியாமல் போயிற்று." என
"என் சமையலறையில்..." என்ற தலைப்பில்
எழுதினாலும் பா/கவிதை அல்ல
கட்டுரை என்றே கூறுவர்!
"அப்படியாயின்
எப்படி ஐயா
இந்தச் சமையலறை நிகழ்வை
பா/கவிதை ஆக்குவது?" என்று
என்னை
நீங்களும் கேட்பியளே!
நான், அம்மா, தங்கை என
மூன்றாள்
சாப்பிட்டது,
அம்மாவின் அன்பு,
கள்ள விக்கல் என
மூன்று செய்தி
ஆக மொத்தம் ஆறு தான்
அதையேன்
கட்டுரையாய் எழுத வேணும்?
"வேலைக்குப் போக நேரமாகுதென
வேளைக்குச் சாப்பிட எண்ணி
சாப்பிட்ட வேளை விக்கல் வர
தண்ணீரைக் குடி விக்கல் போகுமென
கண்ணீர் மல்கிய அம்மா நீட்ட
எங்கையணே களவுக்குப் போனியளென
தங்கைதான் உளவறியக் கேட்க
என்பாடு திண்டாட்டம் ஆச்சு!" என்றெழுதி
"சாப்பிடேக்க விக்கினால் கள்ள விக்கலா?" என
தலைப்பைப் போட்டால் பா/கவிதை ஆச்சே!
ஹைக்கூ யப்பானியச் சொல்
தமிழில் துளிப்பா
ஈரடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
மூன்றடிக் கவிதையே!
லிமரிக் ஆங்கிலச் சொல்
தமிழில் குறும்பா
நான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
ஐந்தடிக் கவிதையே!
மரபுக் கவிதைக்கு மட்டுமல்ல
வரிக்(வசன) கவிதை, புதுக் கவிதை போன்ற
எல்லாக் கவிதைக்கும்
இலக்கணம் இருக்கிறதே!
எண்ணியதெல்லாம் எழுதுங்கள்...
எழுதியதெல்லாம்
ஓர் இலக்கணத்திற்கு உட்பட்டே
இருக்குமென்பதை மறவாதீர்கள்!
என்றாலும் வாசிக்கச் சுவையாக
நன்றாக உலகெலாம் தமிழ் பரவ
இன்றே பாபுனைய விரும்பு!

Tuesday, June 10, 2014

பாவலர்களுக்கு ஒளிக்கலாமா?

நிலவைப் பெண்ணாக
உருவகித்தது அந்தக் காலம்
உலவும் பெண்ணை
ஒப்பிடுவது இந்தக் காலம்
பாவலனின் கண்ணில் பட்டதெல்லாம்
உருவகமுமாகலாம் ஒப்பீடுமாகலாம்!

"பாவலர்களின் கண்களில் பட்டுவிடாதே
உன்னை
எப்படியும் ஆக்கி எழுதிவிடுவார்கள்" என்று
சிலர் எச்சரிக்கலாம் - ஆனால்
எண்ணிப் பார்க்க முடியாதளவு
எழுதக்கூடியவர்கள் பாவலர்களே!

எதை, எவனை, எவளை
நாம் எப்படியும் ஒளிக்கலாம்
ஆனால்
அதை, அவனை, அவளை
பாவலன் அப்படியே ஒளிக்காமல்
பாப்புனைந்து வெளிக்காட்ட வல்லான்!

எதையும் உண்டு களிக்காமல்
உண்டு சுவைத்தது போல
பாப்புனைந்து நாவூற வைப்பான்
தன் கண்ணில் படாததையும்
கண்ணில் பட்டதுபோல் எழுதுவான்
தேடலுள்ள பாவலனின் ஆற்றலை
பாப்புனையும் திறனில் பார்ப்பேன்!

தன் கற்பனைப் பார்வையால்
கருங்கல் வேலிக்கப்பால் நடப்பதை
இப்பால் இருந்தே சொல்வான்
எப்பாலும் நடக்கும் என்றாலும்
இக்கணமே எடுத்துச் சொல்வான்
எக்கணமும் அஞ்சாது எழுதும்
பாவலனுக்கு ஒளிப்பதில் பயனேது!

கற்பனை வானில் பறப்பான்
கனிந்த எண்ணங்களைத் தொடுத்து
சொற்சுவை பொருட்சுவை மின்ன
பற்பல பாக்களை ஆக்குவான்
ஆக்கிய பாக்களில் ஒளிந்துள்ள
உண்மையை மெல்லக் கண்டுகளி!


எல்லா வலைப்பூக்களிலும் நானிட்ட புதிய பதிவுகளை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.0hna.com/