Wednesday, March 12, 2014

பாபுனைய இலகுவான பாவெது?

"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எழுத்து, அசை, சீர் எனப் பன்னிரு பகுதிகளைப் பதிவு செய்துவிட்டேன். இடையே பிறரது இலக்கண நூல்களைத் தந்தேன். அவற்றைப் படிக்க இடது பக்க நிரலில்
(Left Side Bar) உள்ள இணைப்பைச் சொடுக்கினால் போதும். "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரில் எஞ்சிய பகுதிகளை இனிவரும் பதிவுகளில் தரவுள்ளேன்.

வலைப்பூக்களில் பாபுனைவோரின் தளங்களே அதிகம். ஆயினும் ஏனைய படைப்புகளிலும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. எனவே தான் பிறரது நூல்களை இடையில் அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எனது தளம் பலரது தேடல்களுக்குத் தீர்வு தருமென நம்புகிறேன். இனிவரும் பதிவுகளைப் பயனுள்ள பதிவுகளாகத் தருவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தொடரை எழுத முயலும் முன், நான் படித்த நூல்களில் தேடிப் பொறுக்கிய பாக்களின் தலைப்புகளைத் தொகுத்து ஒரு கருத்துக்கணிப்பைத் தர இப்பதிவில் முயன்றிருக்கிறேன். யாப்புடனும் யாப்பின்றியும் பல பாக்கள் உள. எப்படியும் ஒர் ஒழுங்கிற்கு அமையவே எழுத முடிகிறது. அதிலும் "இலகுவானது எது?" என்பதே எனது கேள்வி!

ஆசிரியப்பா எழுதுவோர் சிலர், வெண்பா எழுதுவோர் சிலர், குறும் பா எழுதுவோர் சிலர் என விருப்புக்கு உரிய அல்லது சிறப்புப் புலமையை வெளிப்படுத்த ஆளுக்காள் கைவண்ணம் வேறுபடலாம். கீழுள்ள பாவண்ணங்களில் உங்கள் கைவண்ணம் எதில் நாட்டமோ அதனைத் தெரிவு செய்யுங்கள்.

கருத்துக் கணிப்புப் படிவத்தை இடது பக்க நிரலில் (Left Side Bar) பார்வையிட்டு வாக்களிக்குக.

இக்கருத்துக்கணிப்புப் பற்றிய தங்கள் மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பா தலைப்புகள் இருப்பினும் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.

Thursday, March 6, 2014

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், கலிப்பா இனம், வஞ்சிப்பா இலக்கணம், வஞ்சிப்பா வகை, மரூட்பா இலக்கணம், மரூட்பா வகை  எனப் பல பகுதிகளை அலசுகிறது. இத்துடன் "விசாகப்பெருமாள் விளக்குகிறார்" என்ற தொடர் நிறைவுபெறுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.