Tuesday, December 31, 2013

Sunday, December 22, 2013

நான் பாவலன் (கவிஞன்) இல்லையே!


பாபுனைதல் அல்லது கவிதையாக்குதல் என்பது இலக்கியத்தில் முக்கிய பங்கெடுக்கின்றது. இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அப்படியாயின் யாப்பறிந்து பாபுனைய வருமுன் பா/கவிதை இலக்கியத்தில் எவரும் இறங்கலாமே!

எனது முயற்சிகளும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. எழுத வேண்டுமென்ற விருப்பமே என்னை எழுத வைத்தது. எழுதத் தொடங்கிய பின்னரே, இலக்கணம் அறிந்து எழுதினால் எழுத்தின் தரம் உயருமென நம்பி இலக்கணம் படித்தேன்.

பா/கவிதை என்றால் என்ன? எழுத்தின் மூலம் ஆக்கிய படைப்பு பா/கவிதை எனலாம். அது எப்படியிருக்கும்? வாசிக்கச் சுகமளிக்கும்; மீள மீள நினைவில் வரும்; விரைவாய் வாசகனைச் சென்றடையும். அப்படியாயின் எப்படிப் பாபுனைவது அல்லது கவிதையாக்குவது?

இன்றைய ஊடகங்களில் "காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!" என எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.
நீ
என்னை
காதலிக்கத் தொடங்கியதுமே
என்னுள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி
நீ
என்னைப் பிரிந்ததுமே
அதுவும்
என்னை விட்டு
தொலைதூரத்திற்கு ஓடிப் போய்விட்டதே!

என்று, ஆணோ பெண்ணோ இக்கவிதையை எழுதியிருக்கலாம். இதில் இருபாலாருக்கும் பொதுவான ஓர் உண்மை (பிரிவுத் துயர்) வெளிப்படுகிறது.

கையில காசிருக்கும் வரை
கைகுலுக்கினாயே...
கையறுநிலை வந்ததுமே
கைநழுவி விட்டாயே...
கை கனத்தால் தான்
கைகுலுக்குவாய் என்றால்
நானே
கைகழுவிவிடுகிறேனே!

என்று, பணத்திற்காகக் காதலென்றால் வேண்டாம் என ஆணொருவர் தன்நிலையைச் சொல்கிறார்.

கண்ணை
இமை காப்பது போல
என்னை
நீ காப்பாய் என்றாய்
நம்மி
உன்னை நானும் அணைத்தேன்
வெம்பி அழுகிறேன்
என் நீண்ட வயிற்றைக் கண்டு
நீயும்
எங்கேயோ ஓடி ஒளிந்ததாலே!

என்று, பெண்ணொருத்தி கருவுற்றதும் ஓடியொளியும் ஆண்களைச் சுட்டுவதோடு, பெண்ணின் துயரையும் பெண்ணொருவர் எழுதுகிறார்.

உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை அப்படியே அழகாக, ஒழுங்காக அடுக்கி வைத்தாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

உண்டது நாறின மீனோ செத்த கோழியோ
நேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்
இன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்
மருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே
"கடையுணவு தந்த கேடு!"

என்று, ஒருவர் கடைச் சாப்பாட்டால் தனக்கு வந்த கேட்டைச் சுவையாகச் சொல்கிறார்.

காலையில கிழக்கைப் பார்த்த பூ
மாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன?
ஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ
ஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்
"மஞ்சள் சூரியகாந்தி!"

என்று, ஒருவர் தான் கண்ட காட்சியை அப்படியே அழகாகச் சொல்கிறார்.

உள்ளத்தில் எழும் எண்ணங்களை, விருப்பங்களை எளிமையாக எடுத்துச் சொன்னாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

நான்
நாட்டுத் தலைவரானால்
(பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ)
ஏழைகள் இல்லா
நாட்டை ஆக்குவேனே!
ஆனால்,
வாக்குப் போடவேனும்
நான்
நாலாளுகளை அணைக்க மறந்திட்டேனே!

என்று, ஒருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நல்வருவாய் தரும் தொழிலில்
நானிருந்தால் பாரும்
ஏழைகளுக்கு வாழ்வளிப்பேனே!
ஆனால்,
பிச்சை எடுக்கும் என் நிலை
எப்ப தான் மாறுமோ
எனக்கும் புரியுதில்லையே!

என்று, இன்னொருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண நல்ல பாவலர்கள் (கவிஞர்கள்) தேவையென்றே இத்தளத்தை ஆக்கி அதற்கான பதிவுகளைத் தருகின்றேன். எனவே, பாபுனைய விரும்பும் எல்லோரும் யாப்பிலக்கணத்திற்கு அஞ்சி பாபுனையாமல் / கவிதையாக்காமல் இருக்கலாமோ? மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் பார்த்தேனும் பாபுனைய / கவிதையாக்க முயன்று பாருங்களேன்.

உண்மையில் நான் ஒன்றும் பாவலனோ (கவிஞனோ) இல்லைக் காணும்! மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் போன்ற பதிவுகளையும் மூ.மேத்தா அவர்களின் கவிதைகளையும் படித்துத் தான் பாபுனைய / கவிதையாக்க முனைந்தேன். பின்னர் தான் யாப்பறிந்து பாபுனைய முயன்றேன்.

முடியுமென நினைத்தாலே
முடிந்த மாதிரித்தான்
பாபுனைய முடியுமென நினைத்தாலே
பாபுனைந்த மாதிரித்தான்
முயன்று பாருங்களேன்!

Monday, December 2, 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 03

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், வெண்பா இலக்கணம், வெண்பா வகை, அகவற்பா எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Sunday, November 17, 2013

பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாவலனுக்கு (கவிஞனுக்கு) பழிப்பும் நெழிப்பும் கேலியும் நையாண்டியும் நகைச்சுவையும் என எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்பதான் வாசகர் மகிழ்வடையத்தக்க பாபுனையலாம்.

புகழ்வது போல இகழலும் இகழ்வது போலப் புகழலும் தமிழில் பாபுனையும் போது கையாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக ஓரிரு வரிகள்:
"சிறிலங்காப் படையில் சேருவோம் வாருங்கள்!
அழகான தமிழ்ப் பெண்களைக் கெடுக்கலாம்...
ஆயிரம் தமிழர் வீடுடைத்துத் திருடலாம்...
இலட்சம் கோடி பொன்பணம் பொறுக்கலாம்...
யாழ்போய் போராடினால் அத்தனையும் ஈட்டலாம்...
வாருங்கள் சிறிலங்காப் படையில் சேருவோம்!" என்றவாறு அமைய

ஈழத்து யாழ்பாணத்துப் பாவலர் பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் 1990களில் கவியரங்கொன்றில் பாடிய கவிதையை நான் மறந்தாலும் எனது வரிகளில் அவரது பாபுனை திறனைச் சொல்ல முனைகிறேன்; தவறிருந்தால் என்னை அடித்து நொருக்குங்கள் (ஒறுப்புத் தரலாம்).

ஈழத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் சிங்களத் தலைவர்கள் எனது வரிகளில் குறிப்பிட்டவாறே ஆள்திரட்டினர். அப்படியாயின் சிங்களவருக்குப் புகழ் சேர்க்கும் வரிகள். அப்படிப் புகழ்ந்து பாடித் தமிழர் படும் துயரை வெளிப்படுத்தல்; சிங்களப் படையை இகழ்வதாகவே முடியும். இவ்வாறு சிங்களப் படையைப் புகழ்வதாகப் பாடி இகழ்ந்து, தமிழர் துயரை வெளிப்படுத்திய சா.வே.பஞ்சாட்சரம் அவர்களின் பா (கவிதை) கிடைத்தால் பிறிதொரு பதிவில் தருவேன்.

இனி "பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?" என்ற கதைக்கு வருவோம். பாரதியைப் பற்றிய கதை ஒன்றைச் செய்தி ஏடு ஒன்றில் படித்தேன். அதனைச் சுருக்கிச் சொல்கிறேன்.

எட்டையபுர அரசவையில் புலவர்கள் எல்லோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து நிகழ்வில், அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் (அவரது அகவை 16 - 17 தானாம்) பாரதியை இகழ (அவமானப்படுத்த) எண்ணியிருந்தார். அதற்கு அவர் "பாரதி சின்னப் பயல்!” என்று ஈற்றடி அமையும் வண்ணம் ஐந்து மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 அகவைக்குள். அப்படியாயின் புலவர் காந்திமதி நாதருக்கு பாரதி இளையவர் தான். புலைமையை அரங்கேற்றும் அந்நிகழ்வில் பாரதி கையாண்ட நுட்பத்தைப் பாருங்களேன்.

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

"தான் இளையவன் என்ற இறுமாப்பில், தன்னை இகழ்ந்து கேலி செய்ய முறையற்ற இருண்ட உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்" என மேற்படி பாரதி கேலி பண்ணிப் பாடினார். அதைக் கேட்ட புலவர் காந்திமதி நாதரோ தலையைக் கீழே போட்டார். எப்படியோ புலவர் காந்திமதி நாதரின் தலைக்குனிவைப் போக்க பாரதி இன்னொரு பாடலையும் பாடினாராம்.

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

அகவையில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதரின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்துப் புகழ்ந்து பாடினார்.

முடிவாக முதற் பாடலில் தன்னை ஒரு சிறந்த பாவலன் (கவிஞன்) என்றும் இரண்டாம் பாடலில் தன்னை ஒரு சிறந்த மனிதன் என்றும் பாரதி நிருபித்துக் காட்டியுமுள்ளான். இப்படி நம்மாளுகளில் எத்தனை பேருள்ளனர்.

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?  பார் + அதி = (ர் + அ = ர) பாரதி என்ற சொல்லாட்சியைப் பார்த்தீரா? மேலும் பாவலனுக்குக் (கவிஞனுக்குக்) கேலி பண்ணத் தெரிந்தால் போதாது, தமிழில் இலக்கண திறமையும் வேண்டும். பாபுனைய விரும்புங்கள்; அதேவேளை பாபுனையத் தேவையான தமிழிலிலக்கணத் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

Friday, November 8, 2013

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

உவர் யாழ்பாவாணன் "நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?" என்று கேட்க வந்திட்டார் என்று... நீங்கள் துள்ளுவது எனக்குத் தெரியும். பெரும்பாலானோருக்குப் பா (கவிதை) என்றால் முழு நெல்லிப் புளி போல... உண்மையிலே, எனது வாழ்க்கைத் துணைகூட ரமணிச்சந்திரனின் பொத்தகமென்றால் சமைக்கவும் மாட்டாள்; தூங்கவும் மாட்டாள்; கதையிலே மூழ்கி விடுவாள். வாசகரிடையே பாவைப் (கவிதையைப்) பிடிக்காதவர்களும் (அதாவது, கதை விரும்பிகளும்) இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்றைய இளசுகளுக்கு மூ.மேத்தாவின் புதுப்பா (புதுக்கவிதை) நூல்கள் ஏற்படுத்திய மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு புதுப்பாவையே (புதுக்கவிதையையே) விரும்புகின்றனர். இத்தனைக்கும் மூ.மேத்தா ஒரு தமிழ் பேராசிரியர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதத் தெரிந்த மூ.மேத்தா இளசுகளின் உள்ளத்தைக் கொள்ளையிட புதுப்பா (புதுக்கவிதை) எழுதினாரோ எனக்குத் தெரியாது.

புதுப்பா (புதுக்கவிதை) எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சட்டுப் புட்டென்று படிக்கச் (வாசிக்கச்) சுகமளிக்கும். இலக்கண வேலிகள் இதற்கில்லை. ஆயினும் உணர்வு வீச்சு, மூச்சான அடி எனச் சில இலக்கண எல்லைகள் இருக்கும். புதுப்பா (புதுக்கவிதை) இலகுவானது என்றாற் போல, உவன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் கிறுக்குவது போல சிலர் கிறுக்கலாம். பாடலாசிரியர் வைரமுத்து போன்று இறுக்கமான புதுப்பா (புதுக்கவிதை) புனைவோர் பலருண்டு. வாசகரிடையே மூ.மேத்தா, வைரமுத்து போன்று எழுதுவோரின் தரமான புதுப்பாவை (புதுக்கவிதையை) விரும்புவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கோட்பாட்டுப் (தத்துவப்) பாட்டென்றால் பாவரசர் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். அவருடையை பாட்டு இலக்கணப் பா (மரபுக்கவிதை) சார்ந்தது. அவர் இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதினால் தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருமந்திரம், திருப்புகள் மட்டுமல்ல ஔவை, வள்ளுவர், கம்பர் போன்றோர் பாடிய பாக்களில் இருந்து பொறுக்கிய முத்துக்களையும் சேர்த்துப் புனைந்த பாவலர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்றால்; இலக்கண வேலிக்குள்ளேயே நின்று எழுதினால் சுவையிருக்காது என்பதனை உணர்ந்தே பாவரசர் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ எனக்குத் தெரியாது.

இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்பது பலாப்பழம் போல... பலாப்பழத் தோலை அகற்றி; நாரை அகற்றிச் சுளையெடுத்துச் சுவைப்பது போல; இலக்கணப் போர்வையிலிருந்து இலக்கணப் பாவின் (மரபுக்கவிதையின்) பொருளறிந்தால் சுவையிருக்கும். இலக்கணப் பா (மரபுக்கவிதை) வைரம் போல... வைரம் பட்டை தீட்டப் பளிச்சிடுவது போல... இலக்கணப் பாவில் (மரபுக்கவிதையில்) உள்ள இலக்கணப் போர்வையை உரிக்க உரிக்க சுவையிருக்குமாம். இந்த நுட்பத்தை அறிந்தவர்கள் இலக்கணப் பா (மரபுக்கவிதை) மீது தான் நாட்டம் கொள்கின்றனர்.

இலக்கிய விரும்பிகள் (வாசகர்கள்), இலக்கியப் படைப்பாளிகள் இலக்கியத்துறையில் பல பிரிவுகளில் நாட்டம் கொண்டாலும் சிறப்பாக ஒன்றையே விரும்புவர். நீங்கள் புதுப்பாவையா (புதுக்கவிதையையா) அல்லது இலக்கணப் பாவையா (மரபுக் கவிதையையா) அல்லது பாக்களில் (கவிதைகளில்) விருப்பமில்லையா என்பதனை கீழ்வரும் கருத்துக்கணிப்பூடாகத் தெரிவியுங்கள் பார்ப்போம். இக்கருத்துக் கணிப்புப் பாபுனைய விரும்புவோருக்கு ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன்.

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

வாக்குப் போட்டாச்சா? உங்கள் விருப்புக்கான விளக்கத்தையும் சொல்லுங்க... அப்ப தான், உங்கட பேச்சை நம்பி; நம்மாளுகள் எழுதுகோல் ஏந்தி உலகெங்கும் தமிழ் பரப்ப முன்வருவாங்க!

Friday, October 18, 2013

சுகமாகப் பா (கவிதை) புனைய

இலக்கியம் தோன்றிய பின் இலக்கணம் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் இலக்கியம் படைக்க இலக்கணம் தேவையற்ற ஒன்று என எண்ணிவிட முடியாது. அதாவது, எந்தவொரு இலக்கியத்தைப் படைக்க முயன்றாலும் அதன் வடிவம் குறித்தவொரு இலக்கணத்தை ஒட்டியே காணப்படுகிறது. தமிழ் இன்னும் வாழுகிறது என்றால், அதில் காணப்படும் இலக்கண வரையறை தான் காரணம் என்பேன்.

இலக்கண வரையறை அல்லது சொல்லாட்சி (தூய தமிழ் சொல், அசைசீரால் அமைந்த சொல், தனியசையாலோ தனியெழுத்தாலோ ஆன சொல்) அல்லது குறியீட்டுப் பாவனை என ஏதாச்சும் நம்மாளுகள் தெரிந்து வைத்துப் பாபுனையலாம். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டு தரப்புக் கவிதைகளை வாசித்து மகிழ (இரசிக்க) ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல. எல்லாவற்றுக்கும் பாட்டு இலக்கணம் தான் காரணம். வாசகரும் வாசித்து மகிழ (இரசிக்க) பாட்டு இலக்கணம் சற்றுத் தெரிந்திருந்தால் நன்மை தருமே!

புதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே! முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே!

எடுத்துக்காட்டாக மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டையும் எடுத்துக்கொள்வோம். மரபுக்கவிதை என்றால் இலக்கணம் வேண்டுமென என எண்ணி, இலக்கணம் ஏதுமில்லாத புதுக்கவிதையை எவரும் எழுதிவிடலாமென எழுத முன்வரக்கூடாது. புதுக்கவிதைக்கும் இலக்கணம் உண்டென்பதை மறந்துவிடாதீர்கள்.

எவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று? வரிக்(வசன)கவிதைக்கும் இலக்கணம் உண்டே!

உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை!
எ-கா:
ஆவென்று அலறியவள்
"அம்" எனக் குழந்தை அழுகை கேட்க
அடங்கினாள் ஈன்ற தாய்!

உணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை!
எ-கா:
மகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.
குழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.

இவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம்  இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன். அதாவது அசை, சீர், அலகிடுதல், அடி, தொடை, பாவினம் போன்ற அறிவு தெரிந்திருந்தால் நன்று.

இதனடிப்படையிலேயே யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்ற தொடரை எழுதி வருகின்றேன். மேலும் "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் இவ்வலைப்பூப் பட்டி(Menu)யில் அடிப்படை இலக்கணத் தெளிவைத் தரக்கூடிய நூலொன்றை இணைத்துள்ளேன். (படிக்க: http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html) அதேவேளை விசாகப்பெருமாளின் யாப்பிலக்கணம் நூலைப் பகுதி பகுதியாகப் பதிவு(Posting) செய்கிறேன். இதேநோக்கில் இன்னும் பல அறிஞர்களின் நூலை இவ்வலைப்பூவில் இணைக்க எண்ணியுள்ளேன்.

எனது மின்நூல் களஞ்சியத்திலும் சுகமாகப் பா (கவிதை) புனைய "பாட்டு இலக்கணம்" என்ற பகுதியில் (Folder இல்) பல நூல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இவ்விணைப்பைச் http://wp.me/PTOfc-58 சொடுக்கி "தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்." என்ற இணைப்பைச் சொடுக்கி அத்தனை நூல்களையும் பதிவிறக்கிப் படிக்கலாமே.

முடிவாகச் சொல்வதாயின் இன்றைய வாசகருக்காக படைப்பாளிகள் இலக்கணமின்றிய இலக்கியங்களை ஆக்கினாலோ அதனை வாசகர் ஏற்றுக்கொண்டாலோ தமிழ் அழிவது உறுதி. எனவே படைப்பாளிகள் இலக்கண வரையறையைக் கடைப்பிடித்தே இலக்கியம் எழுத வேண்டும். வாசகரும் அடிப்படை இலக்கண வரையறைகளைத் தெரிந்துகொண்டு நல்ல, இறுக்கமான, தரமான இலக்கியங்கள் மலரப் படைப்பாளிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே தமிழை அழியாது பேணமுடியும்.

புதிதாகப் பாபுனைய விரும்பும் எல்லோரும் சுகமாகப் பா (கவிதை) புனையத் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் படைப்புகள் இலக்கண வரையறையுடன் உயர்தரமாக இருப்பின் பேரறிஞர்களின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புண்டு. எளிமையாக இருப்பின் வாசகர் எண்ணிக்கை பெருகுமென நம்பினால்; அவ்வாறாக எழுதப்படும் இலக்கியங்கள் விரைவில் மறைந்துவிடும் அல்லது மக்கள் மத்தியில் நிலைத்திருக்காது என்பதை மறக்கவேண்டாம்.

Thursday, September 26, 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 02

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதியில் தளை, அடி, தொடை பற்றி விளக்கப்படுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Sunday, September 22, 2013

வெண்நீரும் செந்நீரும் போல...

சங்க இலக்கியத்தில் காதல் தான் அதிகம் பாடு பொருளாகக் காணப்படுகிறது. சும்மா சொல்லக் கூடாது; இப்பவும் அதிகம் காதலைப் பற்றித் தான் எழுதுறாங்க... ஆனால், அன்று இலக்கணக்(மரபுக்) கவிதை இன்று புதுக்கவிதை.

பாடல் உருவாகக் காரணம் மழை தானாம்... வழியாலே போன, வந்த காளையும் வாலையும் பெய்த மழைக்கு ஆங்கே ஒதுங்கினராம்... பெய்த மழையும் சற்று நேரம் கழித்துத் தான் ஓய்ந்ததாம்... அந்தச் சற்று நேரத்திற்குள்ளே காளையும் வாலையும் என்ன தான் எண்ணியிருப்பாங்க... மழை ஓய்ந்ததும் இருவரும் விலகிச் செல்கையில் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. (சங்ககாலத்து இலக்கியத்தில் பெரும்பாலான பாடல்களில் தலைவன் அல்லது தலைவி கூறுவதாகவே அமைந்து இருக்கும்.)

சங்ககாலத்து இலக்கியப் பாடல்:

             யாயும் ஞாயும் யாராகியரோ
             எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
             யானும் நீயும் எவ்வழி அறிதும்
             செம்புலப் பெயல்நீர் போல
             அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
                                (குறுந்தொகை: 40 ஆவது பாடல்)

சங்ககாலத்து இலக்கியப் பாடலுக்கான விளக்கம்:

‘என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லாதவர்கள். நானும் நீயும் முன் பின் தெரிந்தவர்களா? இல்லை. இப்படி எந்த வழியிலும் உறவே அற்ற நம் இருவரது மனமும் செம்மண்ணில் விழுந்த மழை நீர் எப்படித் தன்நிறம் மாறிச் சிவந்த நிறமுடையதாக மாறுகிறதோ, செம்மண்ணும் எப்படி மழை நீருடன் கலந்து குழைந்து சேறாகி விடுகிறதோ அதுபோல நம் மனங்கள் ஒன்றோடு ஒன்று காதல் என்ற உணர்வால் கலந்தனவே’ என்று தலைவன் தலைவியிடம் பேசும் இப்பாடல், உலகத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களிடமும் காணக்கூடிய ஒரு பொது உணர்வான ஆண், பெண் காதல் பற்றிப் பேசுகிறது.. (இவ்விளக்கம் http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051442.htm தளத்தில் காணப்படுகிறது.)

எங்கிருந்தோ வந்த காளையும் நடைபோட, எங்கிருந்தோ வந்த வாலையும் நடைபோட, பெய்த மழை இருவரையும் ஒதுங்க வைச்சிருக்கு. ஒதுங்கிய இடத்தில ஆளையாள் பார்க்காமலே, தாம் வந்த வழியை எண்ணிப் பார்த்திருக்காங்க... இன்றைய வசதிகளற்ற மண் வழி(வீதி); சிவப்புக் (செம்மை) கலந்த மண் வழி(வீதி); வெண்மையான மழைநீர் கொட்டி, வழியில்(வீதியில்) தெறித்து மண் கரைய வெண்நீரும் (மழைநீர்) செந்நீராக (மண்ணும் மழைநீரும் கலந்த) மாறியதைப் பார்த்திருக்காங்க... வழியை(வீதியை) பார்த்துக்கொண்டே தம் உள்ளத்தில் ஆளையாள் எண்ணிப் பார்த்திருப்பாங்க... என்றவாறு பாபுனைந்த பாவலரின் பார்வை அமைந்திருக்கிறது.

அறியாதவர் தெரியாதவர் சந்தித்தால் ஒருவரை ஒருவர் அறிய முனைவர். அதுவும் எதிர்ப்பாலார் சந்தித்தால் ஒருவரை ஒருவர் எண்ணிக்கொள்ள அதிகம் (முக்கியமாகக் காதல்) இருக்கலாம். சந்தித்தவர்கள் பிரியும் போது சிறு உளமாற்றம் இருக்கத்தானே செய்யும். இந்தச் சங்ககாலத்து இலக்கியப் பாடலைப் புனைந்தவர் இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு மழைக்கு ஒதுங்கிய வேளை வெண்நீரும் செந்நீரும் போல ஒருவர் உள்ளத்தில் ஒருவர் கலந்துவிட்டதாகக் காதல் அரும்பிவிட்டதாகப் பாடிமுடிக்கிறார். இப்பாவைப் புனைந்தவர் யாரென்று அறியப்படாமையால்; அவரை, "செம்புலப் பெயல்நீரார்" என்று அவர் கையாண்ட உவமையினையே காரணப் பெயராகக் கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள் போலும்.

பாப்புனைய முனைவோருக்கு செம்புலப் பெயல்நீரார் பாடல் நல்லறிவைப் புகட்டும் என நம்புகிறேன். அவரது பாடலமைந்த சூழலும் பாட்டில் வெளிப்படுத்திய கருத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். மழையால் நிகழ்ந்த சூழல் மாற்றத்தையும் மழைக்கு ஒதுங்கியவர்களின் உள்ளத்து மாற்றத்தையும் உவமித்துப் பாபுனைந்த திறத்தைப் படித்துச் சிறந்த பாக்களை நாம் புனைய முயல்வோம்.

சொந்தம் பந்தம் தெரியாது போனாலும்
எந்தன் பார்வை உந்தன் அழகிலே
முந்திப் பிந்தி அறியாது போனாலும்
இந்தக் கணம் உன்னில் விழுந்தேனே
"வந்த மழைக்கு வந்தொதுங்கியே!"

இப்படி ஒரு குறும்பா நான் புனைந்தால், அழகிலே விழுந்தாகப் பொருள் கொள்ளலாம். அப்படியாயின் சூழலை மறந்து கீழ்த்தரமான எண்ணத்தில் எழுதியதாகக் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே எதுகை, மோனை அமைந்தால் போதாது உவமை, ஒப்பீடு, உயர்ந்த எண்ணம் எல்லாமே பாப்புனைய முனைவோர் தெரிந்திருக்க வேணடுமே!

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

Sunday, September 8, 2013

சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்


சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை,
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் 03/01/2014 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடாத்தவுள்ளது, உலகெங்கும் தமிழ் பரவ, உங்கள் பாவண்ணத்தையும் வெளிப்படுத்த முன் வாருங்கள். இந்நிகழ்வு பற்றிய எல்லாத் தகவல்களையும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
http://tamilkavinjarsangam.yolasite.com/75hours-kaviarankam.php

"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்" யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர்கள் "திருக்குறளே தேசிய நூல்" என்பதை
மையப்படுத்தி மாநாடு ஒன்றினை 2013 ஜுன் 16-ம் திகதி அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் சிறப்பாக நடாத்தி இருந்தைமை யாவரும் அறிந்ததே! அன்றைய நாள் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பு நூலினையும் வெளியிட்டுள்ளனரே! அந்நூலில் இடம் பெற்ற எனது கவிதையினைக் கீழே பார்வையிடலாம்.

திருக்குறளே தேசிய நூல்

நாற்சீரும் முற்சீருமாய் ஈற்றில் தனிச்சீருமாய்
ஏற்றதொரு அறிவை ஊட்டிவிடவே
ஒன்றே முக்காலடி வெண்பாப் பாடிய
இன்றே நினைப்பாய் வள்ளுவரை!

வள்ளுவர் பாடிய 1330 குறளில்
கிள்ளிக் கிள்ளிப் படித்துச் சுவைக்க
அள்ள அள்ள வற்றாத அறிவுக்கடல்
மெள்ள முப்பாலில் ஊற்று எடுக்குமே!

எடுத்த எடுப்பிலே அகரந் தொட்டு
கொடுத்த அறம் (தர்மம்), பொருள், இன்பம் (காமம்) என
நம்மாளுகளின் வாழ்வை விளக்கும் வழிகாட்டல்
எந்நாளும் நமக்குத் திருக்குறளே நன்நூல்!

நன்நூலாம் திருக்குறள் சுட்டும் முப்பாலில்
நன்றே பாயிரம், இல்லறம், துறவறமாக
அறத்துப்பாலில் ஊழியலும் இணைத்து நான்காக
சிறப்பாகத் திருக்குறளின் முதற்பால் இனிக்குமே!

இனிக்கும் திருக்குறளில் பொருட்பாலைப் பாரும்
தனித்தனியே அரசியல், அமைச்சியல், அங்கவியல்
அடுத்துவரும் காமத்துப்பாலைக் கற்றுக் கொண்டால்
தொடுத்தார் களவியல், கற்பியலென வள்ளுவர்!

வள்ளுவர் பாடிய 133 பத்தில் (அதிகாரத்தில்)
கிள்ளியெடுக்க எல்லாத்துறை அறிவும் இருக்கே
எண்ணிப்பாரும் குறள்வெண்பா கூறிடும் முழுவறிவை
எண்ணிக்கொள்ளும் திருக்குறளே நம்தேசிய நூலென்று!

மேலும், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் என் கவிதையும் இடம்பெற்றது. (சான்று: http://paapunaya.blogspot.com/2013/02/blog-post_22.html) "திருக்குறளே தேசிய நூல்" என்ற மாநாட்டில் மேலே குறிப்பிட்ட 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவி முரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர். அம்மதிப்பு உங்கள் யாழ்பாவாணனுக்கும் கிடைத்தது என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, September 1, 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 01


அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன். இப்பகுதியில் அசை, சீர் பற்றிய கேள்விகளும் விளக்கங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அடுத்த பகுதி அடுத்த பதிவில் தர விரும்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

Monday, August 19, 2013

பாபுனையத் தெரிந்து கொள்வோமா?

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என யாப்பிலக்கணத் தொடரை எழுதி வருகிறேன். அதேவேளை பிற அறிஞர்களின் குறிப்புகளையும் இணைத்து வருகிறேன்.

ஆயினும் பிற அறிஞர்களின் சில யாப்பிலக்கண அடிப்படைக் குறிப்புகளை noolaham.org, projectmadurai.org ஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கி "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற நூலைத் தொகுத்துள்ளேன். அதேவேளை எல்லாப் புகழும் நூலாசிரியர்களுக்கே சேரும்.

பல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இந்நூற் தொகுப்பை எனது வலைப்பூப் பக்கத்தில் விரித்துப் பார்க்கவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கவும் இடமளித்திருத்திருக்கிறேன்.

யாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோரும் இந்நூலைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html
அல்லது பட்டியில் (Menu இல்) "பாபுனையப் படிப்போம்" என்ற பக்கத்தைச் சொடுக்குக.

முதலில் இந்நூற் தொகுப்பைப் படியுங்கள். இரண்டாவதாக இதன் நன்மை, தீமைகளைக் கூறி உங்கள் நண்பர்களையும் பார்வையிடச் செய்யுங்கள்.

இவ்வண்ணம்
தொடர்ந்தும் தங்கள் ஆதரவை நாடும்
உங்கள் யாழ்பாவாணன்

Saturday, August 10, 2013

தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு

திருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய "திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு" (http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.php) என்ற பதிவொன்றை இணையப் பக்கமொன்றில் படித்தேன். இதனைப் படித்ததும் குப்புசாமி என்ற மலேசிய அறிஞர் எனக்குப் படிப்பித்தது நினைவுக்கு வந்தது. எனவே, பாபுனைய விரும்புவோருக்கு உதவுமென இப்பதிவை ஆக்கினேன்.

வள்ளுவரின் பாவடிகளிலும் தொல்காப்பியனாரின் பாவடிகளிலும் படிக்கப் பொருளறியச் சிக்கல் என்போருக்கு யாப்பறிந்து பாபுனைய முயலுங்கள் என்பார்கள். யாப்பறிந்து பாபுனைய முயலுமுன் அவர்களது பாவடிகளில் உள்ள பொருளறிந்தால், பாபுனைய முயல்வோருக்கு உதவுமென இப்பதிவை முன்வைக்கிறேன்.

"ஆறாம் அறிவுக்கும் மேலானதாக ஏழாம் அறிவு என்று ஒன்றுள்ளதாகப் பல அறிஞர்களும், சான்றோர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் கூட எடுத்துக் காட்டியுள்ளார். அந்த ஏழாம் அறிவு என்பது எது...?

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)

சிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும், தன் எண்ணத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும். திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார்." என்று பொன்னுசாமி அவர்கள் ஏழாம் அறிவைப் விளக்குகிறார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; வள்ளுவர் வெளிப்படுத்திய ஏழாம் அறிவும் அவர் கையாண்ட சொல் பாவனையும் தான். குறைந்த சொல்கள், குறைந்த அடிகள் மூலமாக மாபெரும் கருத்தை வள்ளுவர் வெளிப்படுத்த முடிந்தால்; நம்மால் ஏன் அப்படி எண்ணமிட்டு எழுத முடியாமற் போகிறது? எண்ணிப் பாருங்கள், எழுத முடியும்!

ஏழாம் அறிவுக்கு முன் ஆறு அறிவு எவை எவை என்று தெரியுமா?
கண் - பார்த்தல்
காது - கேட்டல்
மூக்கு - மணத்தல்
நாக்கு - சுவைத்தல்
தோல் - உணர்தல்
மேற்படி ஐம்புலன்களால் அறியப்படும் அறிவே ஐந்தறிவே. அப்படி என்றால் ஆறாம் அறிவு எந்தப் புலன் உறுப்பால் அறிய முடியும்? உள்ளம் (மனம்) என்ற உறுப்பால் புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு எனலாம். மூளை இயங்கும் செயலே உள்ளம் (மனம்) என்றும் நல்லது, கெட்டது எதுவெனப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு என்றும் குப்புசாமி அவர்கள் விளக்கினார்.

இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை கீழ்வரும் பாடல் விவரிக்கிறது.

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)

இலக்கணப் பாக்களாலான (மரபுக் கவிதைகளாலான) தொல்காப்பியப் பாடலில் இவ்வாறு எளிமையாக ஆறு அறிவுகளை   விரித்து விளக்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் கூறும் ஆறாம் அறிவா, ஆறு அறிவுகளா அத்தனையும் அழகே! இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; இலக்கணப் பாவானாலும் (மரபுக் கவிதையானாலும்) எளிமையாக இருப்பின் எல்லோராலும் விரும்பப்படும் என்பதே!

பாபுனைய முயல்வோர் குறைந்த சொல்கள், குறைந்த அடிகள், எளிமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பாபுனைய முன்வாருங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

முதன்மைப் பதிவராக...

நான்
எழுத்துலகில் எண்பத்தேழில்
கால் பதித்தாலும்
தொண்ணூறிலேயே
என் முதற் கவிதை
பத்திரிகையிலே வெளியானது!
எழுதுங்கள்
என்றோ ஒரு நாள்
எழுத்துகள் சிறக்கும் என
அறிஞர்கள் எனக்கு வழிகாட்டினர்!
எழுதினேன் பத்திரிகையிலே
அன்று
ஆனால், இன்று
இணையவழியில்
வலைத்தளங்களில், வலைப்பூக்களில்
பதிவராகப் பதிகின்றேன்
நல்ல பல பதிவுகளை!
எனக்கு ஒரு துயரம்
என் பதிவுகளுக்கு
ஒருவரும் கருத்துக் கூறுவதில்லை...
என் துயரைப் போக்க
அறிஞர்கள் பலரின் தளங்களைப் படித்தேன்...
"ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூற
ஒருவரும் இல்லையா?
பொய்... பொய்... பொய்...
நீ
எத்தனை பதிவரின் பதிவுக்கு
கருத்துக் கூறினாய்
உன் பதிவுக்கு
எவராச்சும் கருத்துக் கூற" என்று
அறிஞர்கள் சிலர் கேட்டனர்!
நேரம்
பலருக்கு இறுக்கம் தான்
எனக்கும் தான்
என்றாலும்
சில நேரங்களில்
சிலரின் பதிவுகளுக்கு
கருத்துக் கூறுவதால் தான்
ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூட
எனக்கு எட்டுகிறதே!

குறிப்பு: புதிய பதிவர்களே! எனது நண்பர்கள் முதன்மைப் பதிவராக மின்னுவதற்குக் காரணமே, நேரம் உள்ள போதெல்லாம் பிறரது பதிவுக்குக் கருத்துக் கூறுவதால் தான். நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள்... என்றாலும் சொல்கிறேன். கூகிள் வலைப்பூவில் நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் பதிந்தால் கிட்டத்தட்ட நூறு பதில் கருத்துகளைப் பெறுகிறரே! அப்படியாயின், அவர் நூற்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளுக்குக் கருத்துக் கூறுகிறார் போலும்! அப்படித்தான் நானும் எண்ணுகிறேன்.

Wednesday, July 31, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-012


பேச்சின் மூலம் ஒலியாம்
ஒலியின் வடிவம் எழுத்தாம்
எழுத்தால் ஆனது அசையாம்
அசையால் ஆனது சீராம்
சீரைக் கொஞ்சம்
விரித்துப் பார்த்தால் தவறில்லையே!
இரண்டு அசைகள்
இணைந்து வருதலே சீர் என்றாலும்
ஓர் அசையால் ஆனது
ஓரசைச் சீர் என்றும்
இரண்டு அசையால் ஆனது
ஈரசைச் சீர் என்றும்
மூன்று அசையால் ஆனது
மூவசைச் சீர் என்றும்
நான்கு அசையால் ஆனது
நாலசைச் சீர் என்றும்
நால் வகைச் சீர்களைக் காண்பீரே!
யாப்பிலக்ணப் பாக்களில்
வெண்பாவில் மட்டுமே
ஈற்றடி ஈற்றுச் சீராக
ஓரசைச் சீர் கையாளப்படுகிறதே!
அசை பற்றி அலசுகையில் கற்ற
நேர், நிரை, நேர்பு, நிரைபு என்றும்
நினைவூட்டலுக்கு எளிதாக
நாள், மலர், காசு, பிறப்பு என்றும்
ஓரசைகளையும் - அதற்கு
ஒத்த வாய்ப்பாடுகளையும்
தனியசைச் சீர் / ஓரசைச் சீர் என்க!
எடுத்துக்காட்டாக
"சான்றோன் எனக் கேட்ட தாய்" என
69 ஆவது திருக்குறளில் வரும்
"தாய்" என்ற ஓரசைச் சீர்
'நேர்' அசையாகவும் 'நாள்' வாய்ப்பாடாகவும்
"மழலைச்சொல் கேளா தவர்" என
66 ஆவது திருக்குறளில் வரும்
"தவர்" என்ற ஓரசைச் சீர்
'நிரை' அசையாகவும் 'மலர்' வாய்ப்பாடாகவும்
"நன்கலம் நன்மக்கட் பேறு" என
60 ஆவது திருக்குறளில் வரும்
"பேறு" என்ற ஓரசைச் சீர்
'நேர்பு' அசையாகவும் 'காசு' வாய்ப்பாடாகவும்
"மன்னுயிர்க் கெல்லாம் இனிது" என
68 ஆவது திருக்குறளில் வரும்
"இனிது" என்ற ஓரசைச் சீர்
'நிரைபு' அசையாகவும் 'பிறப்பு' வாய்ப்பாடாகவும்
அமைந்திருப்பதை அறிவீரே!
நேர்பசை(நேர்பு அசை), நிரைபசை(நிரைபு அசை),
நேரசை, நிரையசை ஆகிய
நான்குமிணைந்து உருவானது
அசைச்சீர் என்றும்
தனியசைச் சீர் / ஓரசைச் சீர் என்றாயிற்று!
நேரசை, நிரையசை இரண்டுமிணைந்தால்
"ஆசிரியச்சீர்" என்றாகி
ஈரசைச் சீர்களாய்ப் பிணையுமாம்!
ஈரசைச் சீர்களால் ஆனது
ஆசிரியப்பா என்பதால் பாரும்
ஆசிரியச்சீர் என்றும் அழைத்தனர் போலும்!
ஆசிரியப் பாவுக்கே உரிய சீர் என்பதால்
ஆசிரிய உரிச்சீர் என்றும்
அகவலும் ஆசிரியப் பாவிலொரு வகையாம்
ஆகையால் பாரும்
அகவற் சீர் என்றும் அழைக்கமுடிகிறதே!
நேர், நிரை அசைகளை
நேர் + நேர் என்றமைய இணைத்தால்
தே + மா = தேமா எனவும்
நிரை + நேர் என்றமைய இணைத்தால்
புளி + மா = புளிமா எனவும்
நிரை + நிரை என்றமைய இணைத்தால்
கரு + விளம் = கருவிளம் எனவும்
நேர் + நிரை என்றமைய இணைத்தால்
கூ + விளம் = கூவிளம் எனவும்
ஈரசைச் சீர் வாய்ப்பாடு அமைய
இணைவதைப் பாருங்களேன்!
'மா' என முடியும் சீர்களை
மாச்சீர் என்றும்
'விளம்' என முடியும் சீர்களை
விளச்சீர் என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பாபுனையும் வேளை
வேண்டிய ஒழுங்கில் சீரமைக்க
அசை பிரித்தல் தேவையே!
"வந்தான் படித்தான் உழைக்கவே என்றவன்" என்ற
அடியில் வரும் சீர்களை
வந் + தான் = வந்தான்
(நேர்) + (நேர்) = (தேமா) என்றும்
படித் + தான் = படித்தான்
(நிரை) + (நேர்) = (புளிமா) என்றும்
உழைக் + கவே = உழைக்கவே
(நிரை) + (நிரை) = (கருவிளம்) என்றும்
என் + றவன் = என்றவன்
(நேர்) + (நிரை) = (கூவிளம்) என்றும்
அசை பிரித்தல் நன்றென்பேன்!
எடுத்துக்காட்டாக
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்னும்
வள்ளுவரின் குறள் வெண்பாவை
அசை பிரித்து ஆய்வு செய்தால்
கற்(நேர்) + க(நேர்) = கற்க(தேமா)
கச(நிரை) + டறக்(நிரை) = கசடறக்(கருவிளம்)
கற்(நேர்) + பவை(நிரை) = கற்பவை(கூவிளம்)
கற்(நேர்) + றபின்(நிரை) = கற்றபின்(கூவிளம்)
நிற்(நேர்) + க(நேர்) = நிற்க(தேமா)
அதற்(நிரை) + குத்(நேர்) = அதற்குத்(புளிமா)
தக(நிரை) = தக(மலர் - அசைச்சீர் வாய்ப்பாடு)
என்றவாறு அமைவதைக் காண்பீரே!
எழுத்துத் தெரிந்து, அசை அறிந்து,
சீர் அமைத்துப் பா புனைய
அசை பிரித்துப் பழகுதலே
நல்ல பயிற்சி என்பேன்!
இயற் சீர்களாகிய
மாச்சீர், விளச் சீர்களுடன்
நேரசை, நிரையசை இணைய
மூவசைச் சீர்கள் தோன்றக் காண்பீரே!
நேர் + நேர் + நேர் என்றிணைய
தே + மாங் + காய் = தேமாங்காய் எனவும்
நிரை + நேர் + நேர் என்றிணைய
புளி + மாங் + காய் = புளிமாங்காய் எனவும்
நிரை + நிரை + நேர் என்றிணைய
கரு + விளங் + காய் = கருவிளங்காய் எனவும்
நேர் + நிரை + நேர் என்றிணைய
கூ + விளங் + காய் = கூவிளங்காய் எனவும்
நேர் + நேர் + நிரை என்றிணைய
தே + மாங் + கனி = தேமாங்கனி எனவும்
நிரை + நேர் + நிரை என்றிணைய
புளி + மாங் + கனி = புளிமாங்கனி எனவும்
நிரை + நிரை + நிரை என்றிணைய
கரு + விளங் + கனி = கருவிளங்கனி எனவும்
நேர் + நிரை + நிரை என்றிணைய
கூ + விளங் + கனி = கூவிளங்கனி எனவும்
காய்ச்சீர், கனிச்சீர் என
மூவசைச் சீர்கள் அமைவதைப் பார்த்தீரே!
காய்ச்சீர் நான்கினையும்
இடைச்சீர் எனினும்
வெண்பா உரிச்சீர் என்றும்
(வெண்பாவுக்கு உரிய சீர்)
கனிச்சீர் நான்கினையும்
கடைச்சீர் எனினும்
வஞ்சி உரிச்சீர் என்றும்
(வஞ்சிப் பாவுக்கு உரிய சீர்)
யாப்பில் கையாளப்படுகிறதே!
தொல்காப்பியர் காலத்தில் இல்லாத போதும்
பின் தோன்றிய நான்கசைச் சீர்கள்
பெறுமதியிழந்து
பின் நாளில் மறைந்தாலும்
அசை, சீர் பயிற்சிக்காக
விரித்துக் காட்டுகிறேன் பாரும்!
காய்ச்சீர், கனிச்சீர் உடன்
நேரசை, நிரையசை இணைய
'காய்' வரின் 'தண்' எனவும்
'கனி' வரின் 'நறும்' எனவும்
பூச்சீர், நிழற் சீராக
நாலசைச் சீர் அமைகிறதே!
நேர் + நேர் + நேர் + நேர் எனின்
தேமாந்தண்பூ எனவும்
நிரை + நேர் + நேர் + நேர் எனின்
புளிமாந்தண்பூ எனவும்
நிரை + நிரை + நேர் + நேர் எனின்
கருவிளந்தண்பூ எனவும்
நேர் + நிரை + நேர் + நேர் எனின்
கூவிளந்தண்பூ எனவும்
நேர் + நேர் + நிரை + நேர் எனின்
தேமாநறும்பூ எனவும்
நிரை + நேர் + நிரை + நேர் எனின்
புளிமாநறும்பூ எனவும்
நிரை + நிரை + நிரை + நேர் எனின்
கருவிளநறும்பூ எனவும்
நேர் + நிரை + நிரை + நேர் எனின்
கூவிளநறும்பூ எனவும்
நேர் + நேர் + நேர் + நிரை எனின்
தேமாந்தண்ணிழல் எனவும்
நிரை + நேர் + நேர் + நிரை எனின்
புளிமாந்தண்ணிழல் எனவும்
நிரை + நிரை + நேர் + நிரை எனின்
கருவிளந்தண்ணிழல் எனவும்
நேர் + நிரை + நேர் + நிரை எனின்
கூவிளந்தண்ணிழல் எனவும்
நேர் + நேர் + நிரை + நிரை எனின்
தேமாநறுநிழல் எனவும்
நிரை + நேர் + நிரை + நிரை எனின்
புளிமாநறுநிழல் எனவும்
நிரை + நிரை + நிரை + நிரை எனின்
கருவிளநறுநிழல் எனவும்
நேர் + நிரை + நிரை + நிரை எனின்
கூவிளநறுநிழல் எனவும்
நாலசைச் சீர் அமைவதைக் காணும்!
நான்கு அசைச் சீர்கள்
நீண்டிருப்பதால்
பா புனையப் பாவித்தால்
வரிப்பா(வசன கவிதை) போலவோ
உரை நடை போலவோ
அமைந்திட வாய்ப்பிருக்கே!
புலவர் வெற்றியழகனின் கருத்துப்படி
வஞ்சிப்பாவில் மட்டும் தானாம்
நாலசைச் சீர் வந்துள்ளதாம்!
அசை, சீர், அலகிடல் பற்றி
மீளவும் மீட்டுப் பார்ப்போமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/07/011.html

Sunday, July 14, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-011

எழுதப்படுவது எழுத்துப் போல
பாடப்படுவது பாட்டுப் போல
இசைக்கப்படுவது இசையைப் போல
அசைக்கப்படுவது 'அசை' என்போம்!
யாப்பிலக்கணத்திலே
எழுத்துகளால் அசைத்து
இசை கொள்ளுதலே அசையாம்!
உயிர், குறில், நெடில், ஆயுதம்,
மெய், வல்லினம், மெல்லினம்,
இடையினம், உயிர்மெய்,
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக்குறுக்கும், அளபெடை
எல்லாமே அசைக்கும் உறுப்புகளே!
(இதுவரை இவைபற்றி எழுதிவிட்டேன்.)
இயலசை, உரியசை என
அசை இரண்டாகுமே!
நேரசை, நிரையசை என
இயலசை இரண்டாகுமே!
நேர்பு அசை, நிரைபு அசை என
உரியசை இரண்டாகுமே!
அசை பற்றி
நன்கு தெளிவு பெற்றால்
நாள், மலர், காசு, பிறப்பு என
நான்கு வகை வாய்ப்பாடு
அறிய வரும் - அதனை
வெண்பாவின் ஈற்றுச் சீராக
பாவிக்க வேண்டி வருமே!
குறில்(எ.கா.: க, ங), நெடில்(எ.கா.: கா, ஙா), ஒற்று(எ.கா.: க், ங்) என்னும்
மூவை எழுத்துகளால் ஆக்குவோம்
பாவின் முதுகெலும்பான "அசை"ஐ!
குற்றெழுத்துத் தனித்தோ (எ.கா.: க)
குற்றெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கல்)
நெட்டெழுத்துத் தனித்தோ (எ.கா.: கா)
நெட்டெழுத்து ஒற்றடுத்தோ (எ.கா.: கால்)
எழுத்தமைதல் நேரசையாம்!
இருகுறில் இணைந்தோ (எ.கா.: கட)
இருகுறில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடல்)
குறில் நெடில் இணைந்தோ (எ.கா.: கடா)
குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தோ (எ.கா.: கடாண்)
எழுத்தமைதல் நிரையசையாம்!
தனிக்குறில் ஒழிந்த(தவிர்ந்த)
எஞ்சிய மூன்று நேரசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நேர்பு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"பந் + து = பந்து" என்றும்
"கா + டு = காடு" என்றும்
"காப் + பு = காப்பு" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
எண்ணிப் பாருங்களேன்
தனிக்குறில் நேரசையோடு
வல்லின உகரம் இணைந்தால்
வருவது நிரையசை அன்றோ!
(எ.கா.: ககு, கசு, கடு, கது, கபு, கறு)
நான்கு நிரையசைகளோடு
கு, சு, டு, து, பு, று என்னும்
வல்லின உகரம் இணைதலே
நிரைபு அசையாகும்!
எடுத்துக்காட்டாக
"விற + கு = விறகு" என்றும்
"வடக் + கு = வடக்கு" என்றும்
"தகா + து = தகாது" என்றும்
"நடாத் + து = நடாத்து" என்றும்
அமைந்து வருவதைக் காண்பீரே!
இரண்டு அசைகள் இணைந்து வருதலே
சீர்(சொல்) என்று
யாப்பில் கையாளப்படுகிறதே!
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீர்
தனியசையில் தான் முடியணுமாம்
அதற்கமைய
வாய்ப்பாடு ஒன்றும் வகுத்தனரே!
எடுத்துக்காட்டாக
வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீரில்
நேர் அசை வரின் "நாள்" என்றும்
நிரை அசை வரின் "மலர்" என்றும்
நேர்பு அசை வரின் "காசு" என்றும்
நிரைபு அசை வரின் "பிறப்பு" என்றும்
யாப்பில் அழைக்கப்படுகிறதே!
பா புனையும் போது
அசை எப்போதும்
சீர், தளை போன்ற
எஞ்சிய பா உறுப்புகளோடு
இணைந்தே வரும் ஆகையால்
'சீர்' பற்றியே - அடுத்து
நாம் தொடர்வோமே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/06/010.html

Friday, June 21, 2013

பா புனையப் படிக்க வேண்டுமா? - 02


பா புனைய (கவிதை எழுத)
நாம் படிக்கவும் வேண்டுமா?
உண்ணான நல்ல கேள்வி தான்!
பா புனையப் படிக்க வேண்டாமப்பா...
பா புனைய முயன்று பாருங்களேன்!
முயன்றோம்...
இலக்கணம் குறுக்கே வந்து நிற்குதே!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய இலக்கணம் குறுக்கே வரலாமா?
உள்ளத்தில் உள்ளதை
இயல்பாக எடுத்துச் செல்லுங்களேன்...
அது கூட நல்ல பா தான்!

குறிப்பு: இக்கவிதை சிறு மாற்றங்களுடன் ஏற்கனவே இவ்வலைப்பூவில் "பா புனையப் படிக்க வேண்டுமா? - 01 (http://paapunaya.blogspot.com/2013/03/blog-post_13.html)" எனப் பதிவு செய்திருந்தேன். நண்பர்களின் கருத்திற்காக இதனையும் பதிவு செய்கிறேன்.

தமிழ்நண்பர்கள் தளத்தில் இப்பதிவு இடம் பெற்ற போது...
நண்பர் வினோத் தெரிவித்த கருத்து:
இலக்கணம் குறுக்க வந்து நிற்குதோ!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய இலக்கணம் குறுக்க வரலாமா?
இது நல்ல பதிலாகும் கேள்வி.

எனது பதில்:
"சட்டிக்குள் சோளம்
துள்ளித் துள்ளிப் பொரியுமாப் போல
வான் வெளியில் வெள்ளிகள்" எனப் பாடும்
கடலை விற்கும் பாட்டிக்கு
யாப்பிலக்கணம் தெரியாதே!
சோளப்பொரி, வானத்து வெள்ளி
எப்படியிருக்கிறது ஒப்பீடு?
நம்மாளுகளும்
இப்படிப் பா புனையலாமே!

நண்பர் சுஷ்ரூவா தெரிவித்த கருத்து:
இலக்கணம் குறுக்க வந்தாலும்
இலக்கியம் முன்பு வந்தாலும்
நினைப்பதை எழுதிப் பழகினால்
இலக்கணம் அதன் வழி பகரும்
தண்டிக்க எண்ணும் காலமல்ல
பழகட்டும் புலமையென முழங்கட்டும்!

எனது பதில்:
பா புனைய முனைவோரை
எவராலும்
தண்டிக்கவோ தடுக்கவோ முடியாதே!
பா புனைய முனைவோரை
தூண்டும் செயலாகவே
"பா புனையப் படிக்கத் தேவையில்லை" என்கிறேன்!
"பணம் இருக்கும் வரை தான்
மணந்து நாடும் உறவுகள்..." என
யாப்பிலக்கணம் அறியாத ஏழை
எடுத்தாளும் ஒழுங்கைப் பார்த்தேனும்
நம்மாளுகள் பா புனையலாமே!

நண்பர் கார்த்திக்2011 தெரிவித்த கருத்து:
சித்திரம் செந்தமிழ் இரண்டும் கை பழக்கம்

எனது பதில்:
சித்திரமும் கை பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
நம்மாளுகள்
பா புனைய இரண்டையும் பழகி
வழக்கப்படுத்த வேணுமே!


பா புனைய எது வேண்டும்?

பா புனையலாமென இருக்கையில் குந்தினேன்...
பா புனையும் வண்ணம்
எந்த எண்ணமும் தோன்றவில்லை...
"
பாட்டு வரும் கேட்டு வராது" என
நினைத்தேன் - அதுவே
என் பாவிற்கு முதலடியாயிற்று!
இரண்டாம் அடியைத் தேடினேன்...
நாட்டார் பாடல்கள்
கேட்டுக் கேட்டே செவிவழி வந்ததை
நினைவிற்கொள்ள
அடுத்த வரிகளும் வந்தமைந்தன!
பாட்டை ஏட்டில் எழுத
முட்டி மோதும் இலக்கண இடையூறுகள்
குறுக்கே வந்து நிற்குமென அஞ்ச
நான்காம் அடியும் வந்து சேர்ந்தது!
"
கொட்டிக் குவியும் எண்ணங்களால்
கட்டி எழுப்பலாம் பா" என்று
முடிவுக்கு வந்தாலும்
தலைப்பு தலையைப் பிய்த்தது!
ஒரு வழியாகப் 'பா புனைய...' என
தலைப்பிட்ட என் 'பா'வை
தொடர்ந்து படித்துப் பாருங்களேன்!
பாட்டு வரும் கேட்டு வராதென
நினைத்த வேளை
நாட்டார் பாடல்கள்
கேட்டுக் கேட்டே செவிவழி வந்ததென
நினைவில் உறுத்தியது!
பாட்டை ஏட்டில் எழுத
முட்டி மோதும் இலக்கண இடையூறுகள்
குறுக்கே வந்து நிற்க
கொட்டிக் குவியும் எண்ணங்களால்
கட்டி எழுப்பலாம் பா!

Saturday, June 8, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-010

பா புனையப் போகுமுன்
அசைக்கு முன் எழுத்தெனப் பார்க்கையில்
எழுத்துகளாலான
சொல்கள் புணருவதைப் பார்க்கையில்
இயல்புப் புணர்ச்சி,
தோன்றல், திரிதல், கெடுதல் என
விகாரப் புணர்ச்சி (பொது)
படித்த பின் பார்ப்பது
செய்யுள் விகாரம் ஆயிற்றே!
செய்யுளுக்கே உரித்தான
செய்யுள் விகாரத்தில்
வலித்தல், மெலித்தல், நீட்டல்,
குறுக்கல், விரித்தல், தொகுத்தல்,
முதற்குறை, இடைக்குறை,
கடைக்குறை என வரும்
ஒன்பது கூறுகள் இருப்பதைப் பாரும்!
ஒரு செய்யுளுக்கு
ஒன்பது விகாரமா என்று
சற்றுத் தளர வேண்டாம்
இவை தான்
பாவலர்க்கு வழிகாட்டும்
யாப்பில் தவறின்றியே
பாபுனைய உதவும் வழிகாட்டிகளே!
பாவலர்க்கு உதவ
யாப்பு இலக்கணமா என்று
கலங்க வேண்டாம் உறவுகளே
மரபுக் கவிதை/ பாப்புப் பா என்றால்
வாசிக்க விளங்காமை
பொருளறிய முடியாமை
போன்ற நிலைகளைப் போக்க
வாசகருக்கும் பக்கத்துணை
நான் கூறும்
செய்யுள் விகாரம் ஒன்பதுமே!
மெல்லினத்தை வல்லினமாக்கும்
வலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கம்பரின் பா வரிகளைப் பாரும்...
"அரக்கரோர் அழிவு செய்து
     கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல
     மனுநெறி கூறிற் றுண்டோ?"
இவ்வீர் அடிகளிலே
முதலடியில் வரும் எதுகைக்கு
('அரக்கர்' என்றமைந்த)
அடுத்தடியில் வரும் எதுகையை
சரி செய்யும் நோக்கிலே
மெல்லின மெய்யை
வல்லின மெய்யாக மாற்றியே
(இயல்பில் 'குரங்கு' என்பதை
எதுகைக்காக 'குரக்கு' என மாற்றியே)
வலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
வலித்தலின் மறுதலையே
மெலித்தலாம் என்க...
வல்லினத்தை மெல்லினமாக்கும்
மெலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கீழ்வரும் அடிகளைப் பாரும்...
"தண்டையின் இனக்கிளி கடிவோள்
பண்டையள் அல்லள் மானோக்கினளே!"
இவ்வீர் அடிகளிலே
இரண்டாம் அடி எதுகை
'பண்டையள்' என்னும் சீருக்காக
முதலடியில் வரும் எதுகை
'தட்டையின்' என்னும் சீரை
'தண்டையின்' என மாற்றியே
('ட்', 'ண்' ஆக
வல்லின மெய்யை
மெல்லின மெய்யாக மாற்றியே)
மெலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
குறிலை நெடிலாக்கும்
நீட்டல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவின் இறுதிச் சீராக
ஓரசைச் சீர் வரலாமே தவிர
இடையில் வரக் கூடாது"
என்பதற்கிணங்கவே
வள்ளுவனார் தன் குறளில்
'நிழல்' என்ற ஓரசைச் சீரை
'நீழல்' என்ற ஓரசைச் சீராக
மாற்றிவிட்டார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
ஒரு சீரின் முதல் எழுத்தாகவுள்ள
குறில் எழுத்தை நெடில் எழுத்தாக
மாற்றி அமைத்துப் பா புனைதலை
நீட்டல் விகாரம் எனலாமே!
நெடிலைக் குறிலாக்கும்
குறுக்கல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"ஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேன் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவிற்கான தளையில்
மா முன் நிரை அமைதல் வேண்டும்"
அதற்கேற்பப் பாரும்
'ஒருநாள்' முன் 'ஏழுநாள்போற்' வரின்
மா முன் நேர் அமையுமென அஞ்சி
'எழுநாள்போற்' எனவாக்கி
நெடில் 'ஏ' ஐக் குறில் 'எ' ஆக்கி
வள்ளுவனார்
யாப்பைச் சரி செய்தார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
நெடில் எழுத்தைக் குறில் எழுத்தாக்குவதே
குறுக்கல் விகாரம் எனலாமே!
குறும் சொல்லை நீட்டும்
விரித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?"
இங்கே
முதலடி மூன்றாம் சீர்
'கொல்' என அமைந்ததால்
வெண்பாவின் ஈற்றுச் சீராக வரவேண்டிய
தனி அசைச் சொல்லை
யாப்பைக் கருத்திற் கொண்டே
'கொல்லோ' என வள்ளவர் மாற்றினாரோ...
'குடும்பத்தைக்' என்ற சீரின் முன்னே
மாச் சீரை வரவழைத்து
மா முன் நிரை அமையுமாறு
'கொல்' ஐ 'கொல்லோ' எனவாக்கி
சொல் ஒன்றை விரித்து எழுதுவதே
விரித்தல் விகாரம் என்போம்!
நெடும் சொல்லைக் குறுக்கும்
தொகுத்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியார் தோள்தோயா தார்."
இங்கே
முதலாம் அடி முதற் சீர்
'நலத்துக்குரியார்' என்றமைய
இருந்திருக்க வேண்டுமே...
அப்படி அமையாமைக்கு
வெண்பாச்சீர் ஆக அமையாது
பூச் சீராக இருந்தமையே...
இலக்கணப் பிழை நிகழாமல்
'நலக்குரியார்' எனக் காய்ச்சீர் அமைய
(நலம்+அத்து+கு+உரியார்)
வள்ளுவனார் முதற் சீரமைத்து
'காய் முன் நேர்' என்றமைய
பா புனைந்திருக்கும் ஒழுங்கே
(நீண்ட சொல்லைச் சுருக்கித் தொகுத்தல்)
தொகுத்தல் விகாரம் என்போம்!
சொல்லின் முதலெழுத்தைக் குறைக்கும்
முதற் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி" எனும்
செய்யுளடியைப் பாரும்...
இலக்கணத் தவறு நிகழாமலே
முதற் சீராக வர வேண்டிய
"தாமரையிதழ்" இலே
முதலெழுத்தை நீக்கியமையே
சொல்லின் முதல் எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
முதற்குறை விகாரம் என்போமே!
சொல்லின் இடையெழுத்தைக் குறைக்கும்
இடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"என்னனைக் கிலங்கு மார்பம்" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"என்னன்னைக்கு" இலே
இடையிலே 'ன்' ஐ நீக்கியமையே
சொல்லின் இடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
இடைக்குறை விகாரம் என்போமே!
சொல்லின் கடையெழுத்தைக் குறைக்கும்
கடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"கள்ளுக்கில் காமத்திற் குண்டு" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"கள்ளுக்கில்லை" இலே
கடைசியிலே 'லை' ஐ நீக்கியமையே
சொல்லின் கடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
கடைக்குறை விகாரம் என்போமே!
யாப்பிலக்கணத்தின் முதற் பகுதியான
எழுத்தைப் பார்த்தோம்...
எழுத்தோடு தொடர்புடைய
இலக்கணத்தைச் சற்றுப் பார்த்தோம்...
சொல்களைப் பார்த்தோம்...
சொல்கள் புணருவதைப் பார்த்தோம்...
இலக்கண(மரபு)ப் பா புனைய
துணைக்கு வந்து நிற்கும்
செய்யுள் விகாரத்துடன்
எழுத்தை முடித்துக் கொண்டு
யாப்பில் அடுத்து வரும்
"அசை" என்ற பகுதியை
அடுத்த பகுதியில் பார்ப்போம்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/05/009.html

Friday, June 7, 2013

கவிதை எழுதத் தூண்டிய சூழல்


பேரூந்தில் ஏறின பின்னர்
கிழக்கு மேற்குப் பார்ப்பதில்லை
வடக்கும் தெற்கும் தெரிவதில்லை
இருக்கை இருந்தால் போதுமென
முண்டியடித்து
முன்னே ஏறிய பின்னர்
ஆளுக்காள்
முணுமுணுக்கத் தான் தெரியுமே!
இடப் பக்க இருக்கை
குளு குளு காற்றடிக்க
வெயில் பிடிக்காத இடமாச்சே
முணுமுணுத்தார் ஒருவர்...
இருக்கை என இருக்க வந்தாச்சு
வெயிலென்ன காற்றென்ன
முகம் வாட்டும்
வெயில் பக்கமாய் இருந்தவர்
அழுவாரப்போல முணுமுணுத்தார்...
உள்ளே போங்கோ உள்ளே போங்கோ என
நடத்துநரும்
ஆட்களை அடுக்கி ஏற்றினாரே!
ஓட்டுநரும்
பேரூந்தை உருட்டி நகர்த்தினார்
முன், இடம், வலம் என
பேரூந்தும் நகர
பேரூந்துக்குள்ளே மீண்டும்
முணுமுணுப்பு வலுத்தது...
வெயில் பக்கமாய் இருந்தவருக்கு
சில்லெனக் குளிர் காற்றும்
நல்ல நிழல் காய
மகிழ்ந்து முணுமுணுக்க...
நிழலும் காற்றும் சுகமாயிருக்க
மகிழ்ந்தவருக்கு
முகத்திலடிக்கும் வெயில் காற்று
துன்பம் தருவதாய் முணுமுணுக்க...
நடுவே நசிபவர்கள்
இவ்வளவு தூரம் வந்தாச்சு
இன்னும் எவரும்
இறங்குவதாயில்லை என
அலுத்துக்கொள்ள பேரூந்தும் நகர்ந்ததே!
சிறிது தூரம் பேரூந்து நகரவே
பெரும் மாற்றங்களைக் காணும்
நம்மாளுகளே
இருக்கை இருந்தால் போதுமென
முன்னேறுகையில்
பின்னே வரும் துயரை
நினைக்க மறப்பது சரியா?
ஒரு வெயில் ஒரு காற்று
நான்கு பக்கங்கள்
இவை ஆறும் தெரியாதா உமக்கு?
பேரூந்துக்குள்ளே
முணுமுணுக்க முன்னே
முன்னேற்பாடாய் இருந்தவர்
(துன்பம் களித்தவர் மகிழ்வடைய)
நலமாகப் பயணம் செய்கிறாரே!
இதைப் பார்த்த எனக்கு
"பட்டபின்னே அறிவதை விட
படமுன்னே அறிவதே
அறிவு!" என்றும்
"தேவை ஏற்படாத வரை
இப்படியும்
நிகழுமென உணராத வரை
பின்விளைவை அறியாத வரை
சிந்திக்காத நம்மாளுகள்;
வெயில் சுட்ட போதும்
காற்றின் இசை கேட்ட போதும்
'பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பு என்று' என
பாடிக்கொண்டே சிந்திக்கிறார்களே!" என்றும்
பல கவிதைகள் எழுதத் தோன்றிற்று!

Tuesday, May 21, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-009


சொல்கள் புணரும் வேளை
நின்ற சொல்லுடன் இணைய வரும் வேளை
வந்த சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் மிகுவதும்
நின்ற சொல்லின் ஈற்றெழுத்தில்
வல்லினம் மெய்யெழுத்தாக இருந்தால்
வல்லின ஈற்றெழுத்துத் திரிவதும்
பார்த்து முடித்தாச்சு!
வல்லினம் மிகா இடங்களை
வரும் பகுதியில் காண்போமே!
அஃறிணைப் பன்மை விகுதியாம்
'கள்' என்பது நின்ற சொல்லானால்
குடிக்கின்ற மதுவாகப் பொருள் கொள்ளும்
அப்பதான் தெரியும்
"கள் + கள் = கள்கள்"
என்றமையாது என்பதை!
நானொரு முட்டாளுங்க
நாற்பத்திரண்டு அகவை வரை
"சொல் + கள் = சொற்கள்" என்று
பாவித்த முட்டாள் என்றால்
நினைத்துப் பாருங்களேன்!
"சொல் + கள்" என்ற புணர்வில்
வல்லினம் மிகாது என்பதையே
நினைவூட்ட விரும்புகிறேன்!
(சான்று: பக்கம்-54; யாப்பரங்கம்;
புலவர் வெற்றியழகன்; சீதை பதிப்பகம்;
சென்னை-600004; இந்தியா)
பல சொல் இணைந்த கூட்டம்
"சொற்கள்" அல்ல
"சொல்கள்" என்பதே சரியாம்!
"சொற்கள்" என்பதை
"சொல்லாகிய கள்(மது)" என்றே
பொருள் கொள்ள முடிகிறதாம்!
இப்படித்தான் பாருங்கோ
கல்கள், பல்கள், வில்கள்,
ஆள்கள், நாள்கள், கோள்கள்,
பொருள்கள் ஆகியவற்றிலே
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
சிறிய + காற்றாடி = சிறிய காற்றாடி
நல்ல + பிள்ளை = நல்ல பிள்ளை
தீய + செய்கை = தீய செய்கை
என்பவற்றிலே வரும்
குறிப்புப் பெயரெச்சம் அல்லது
பண்புச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
காளையின் + பேரில் = காளையின் பேரில்
சிங்கத்தின் + பின் = சிங்கத்தின் பின்
ஆலின் + கீழ் = ஆலின் கீழ்
என்பவற்றிலே காண்பீர்
அஃறிணைப் பெயர்ச் சொல்களை
அடுத்து வரும் பின்னொட்டுகளில்
பேரில், பின், கீழ் என்பன வரின்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டுக்களாக
ஆசிரியர் + சார்பாக = ஆசிரியர் சார்பாக
மாணவர் + தொடர்பாக = மாணவர் தொடர்பாக
ஆகியவற்றிலே பாரும்
நின்ற பெயர்ச் சொல்லுடன்
"சார்பாக, தொடர்பாக" என்ற ஒட்டுகள்
வந்ததாலும் வல்லினம் மிகாது...
நொந்து + கொள் = நொந்து கொள்
நடந்து + கொண்டிரு = நடந்து கொண்டிரு
செய்து + பார் = செய்து பார்
கொய்து + காட்டு = கொய்து காட்டு
கொண்டு + போ = கொண்டு போ
ஒழிந்து + தொலை = ஒழிந்து தொலை
ஆகியவற்றிலே பாரும்
'செய்து' என்னும் வினையெச்சச் சொல்லை
அடுத்து வரும் துணை வினைகளான
கொள், கொண்டிரு, பார், காட்டு, போ, தொலை என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
சென்ற + போது = சென்றபோது
செய்த + படி = செய்தபடி
சொன்ன + படியால் = சொன்னபடியால்
ஆகியவற்றிலே பாரும்
பெயரெச்சத் தொடரின் ஒட்டுகளான
போது, படி, படியால் என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
ஊர் + தோறும் = ஊர் தோறும்
என்ற வகையில் பாரும்
பெயர்ச் சொல்லை அடுத்து
'தோறும்' என்னும் ஒட்டு
வந்ததாலும் வல்லினம் மிகாது...
என்றறிந்தால் தவறு நிகழாதே!
எடுத்துக்காட்டின்றியும்
வல்லினம் மிகா இடங்களை
எடுத்துச் சொல்கிறேன் பாரும்...
எழுவாயாக நிற்கும்
பெயர்ச் சொல்களுடன் பாரும்
கூட, பற்றி, பொருட்டு, பால், குறித்து, தவிர ஆகிய
ஒட்டுகள் வரினும் வல்லினம் மிகாதாம்...
விடவும், காட்டிலும் ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
ஆ, ஆவது, ஏ, ஓ, என்று, போன்று ஆகிய
இடைச் சொல்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அடா, அடி ஆகிய சொல்களை
அடுத்து வரும் வல்லினமும் மிகாதாம்...
உள்ள, உரிய, தகுந்த ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அகர உயிர் இறுதியில் உள்ள
அத்தகைய, இத்தகைய, எத்தகைய;
அன்றைய, இன்றைய, என்றைய;
அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட;
அப்போதைய, இப்போதைய, எப்போதைய;
மேற்கத்திய, கிழக்கத்திய, வடக்கத்திய, தெற்கத்திய;
நேற்றைய, இன்றைய, நாளைய என்னும்
பெயரெச்சங்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
வந்து, சென்று, கண்டு, அழுது, வென்று
என்னும் வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
செயின், செய்தால் என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மை, அப்பர், மாமன், மாமி,
அண்ணன், அண்ணி, தந்தை, தம்பி,
தங்கை, அக்காள் என்னும்
முறைப் பெயர்களை அடுத்து
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மா, அப்பா, மாமா, மாமி,
அண்ணா, அண்ணி, தம்பி, தங்காய்,
அக்கா ஆகிய முறை விழிப் பெயர்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
நட, படி, பாடு, ஓடு ஆகிய
முன்னிலை ஏவல் ஒருமை வினைகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
அடேயப்பா, அய்யோ, அம்ம ஆகிய
வியப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
எடுத்துக்காட்டாக
அவள் + பெரியவள் = அவள் பெரியவள்
ஆடு + சிறியது = ஆடு சிறியது
கூழ் + போதாது = கூழ் போதாது
என்றமையும் முதல் வேற்றுமையாகிய
எழுவாய்த் தொடரில் சில இடங்களில்
வல்லினம் மிகாதாம்...
ஒடு, ஓடு என்னும்
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
விரிந்து வரும் பொழுது
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமையாகிய
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமை விரியில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
'உடைய' என்னும்
ஆறாம் வேற்றுமை உருபை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
"நா + காக்க = நா காக்க
(நாவைக் காக்க)" என்றவாறு
இரண்டாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
"கை + தட்டினான் = கை தட்டினான்
(கையால் தட்டினான்) என்றவாறு
மூன்றாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
எழுவாய் உயர்திணையாக இருந்தாலும்
அஃறிணைப் பெயருடன்
வினைச்சொல் வந்தாலும்
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமைத் தொகையில்
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
ஏழாம் வேற்றுமைத் தொகையிலும்
"அரசர் + கண் = அரசர் கண்" என்றவாறு
வல்லினம் மிகாதாம்...
"ஆடு + கோழி = ஆடு + கோழி
(ஆடும் கோழியும்) என்றவாறு
உம் என்னும் சொல் மறைந்து வரும்
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"ஊறு + காய் = ஊறுகாய்" என்றவாறு
(ஊறிய/ ஊறுகின்ற/ ஊறும் காய்)
மூன்று காலங்களையும் உணர்த்தும்
வினைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"கார் + காலம் = கார் காலம்" என்றவாறு
பண்புத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
இப்படியே பார்த்தால்
இவை தான்
வல்லினம் மிகா இடங்கள்!
அடுத்து செய்யுளுக்கே உரிய
செய்யுள் விகாரம் பற்றியே
தொடரும் வரை காத்திரும்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/04/008.html

Thursday, May 16, 2013

அடே! யாழ்பாவாணா!


பெண்/ஆண் மீது காதல் கொண்டதால்
கிறுக்கிக் கொள்ளலாம்...
கவிதை வரலாம்...
பாவல(கவிஞ)ராக முடியாது
தோழர்களே! தோழிகளே!
அடே! யாழ்பாவாணா!
நாம்மால
பாவல(கவிஞ)ராக முடியாதென
நீ எப்படிச் சொல்வாயென
என்னையும் நீங்களும் கேட்கலாம்!
நானும் தான் கேட்கிறேன்
பெண்/ஆண் மீதான காதலைத் தவிர
வேறெதனையும் வைத்துக் கிறுக்கலாமே!
வேறெதுவா?
மின்மினிப் பூச்சி ஒளியில
வாழும் ஏழைக் குடிசையை...
ஒரு பிடி அன்னத்திற்கு
துடிதுடிக்கும் உள்ளங்களை...
பெண்களின் கண்களில் இருந்து
வடிகின்ற கண்ணீர்த் துளிகளை...
பிறந்த உடலாக
குடிச்சுப் போட்டு அலையும் ஆண்களை...
மேலைநாட்டு ஈர்ப்பில்
சேலைகளைப் பறக்கவிட்டும்
ஆணாடைகளை அணிந்து
மது(பியர்) குடித்தும்
பொன்னிலை(கோல்ட் லீவ்ப்) புகைத்தும்
உலாவும் இன்றைய குமரிகளை...
வாக்கு வேண்டும் வரை
மக்களுக்காக குளிர்களியாக(ஐஸ்கீறீம்) உருகி
தேர்தலில் வெற்றி பெற்றதும்
வாக்களித்த மக்களை மறந்து போய்
நாடாளுமன்ற நாற்காலி(கதிரை)யைத் துடைக்கும்
பை நிரம்பப் பணம் சுருட்டும்
அரசியல்வாதிகளை...
இறைதொண்டு செய்வதாய்
மறைவில் மங்கை சுகம் காணும்
இறைதொண்டர்களை...
இன்னும் இன்னும்
எத்தனையோ தலைப்புகள் இருக்கே!
மொத்தத்தில்
பாவல(கவிஞ)ன் என்பவர்
மக்களாய(சமூக) ஓட்டைகளுக்குள்
நடப்பவற்றை எழுதவேண்டியவரே!
காதலியையோ காதலனையோ
எண்ணி எண்ணிக் கிறுக்கும்
தலைவிகளே தலைவர்களே
பாவல(கவிஞ)ன் என்பவர்
கரும்கல்லுக்கப்பால் நிகழ்வதையும்
நாளை நடக்கக்கூடியதை இன்றும்
எண்ணி எண்ணிக் கிறுக்குபவரே!
அடே! யாழ்பாவாணா!
நாம்மாலையும்
பாவல(கவிஞ)ராக முடியுமென்போர்
உலகின் மூலைமுடுக்கெங்கும்
நடந்த, நடக்கும், நடக்கவுள்ள
உங்கள் உள்ளத்தை
தாக்கிய, நோகடிக்கும் எதையும்
எண்ணி எண்ணி எழுதுங்களேன்!
"பாவல(கவிஞ)ர் வாக்கு
பொய்த்ததில்லை" என்ற
உண்மையில் என்ன இருக்கும்
அவரது
தூரநோக்கு முடிவோ தீர்வோ தான் - அது
அவரையே
பாவல(கவிஞ)ர் என்று சாற்றுகிறதே!

அறிவுக்கண்ணால பாருங்க...காதல் என்பது
யார் மீதும்
எந்நேரமும் வரலாம்
அந்நேரம்
மணமானவர்கள்
கணவனை / மனைவியை நினைவூட்டுங்க...
மணமாகாதவர்கள்
காதலனென்றால்
நல்ல வருவாய்க்காரனாகவும்
காதலியென்றால்
பணத்தைச் சேமிப்பவளாகவும்
பார்த்துக் கொள்ளுங்க...
காதல் வந்ததும்
கண்ணை மறைக்கும் என்கிறாங்க...
அதுங்க
அறிவுக் கண்ணைத் தானுங்க...
அதுதானுங்க
காதல் வந்ததால்
வரவேண்டிய அறிவைச் சொன்னேனுங்க!
நான் சொன்னா
நீங்க கேட்க மாட்டியளே...
இப்படித்தானுங்க
நாலு பிள்ளைக்காரனுங்க
நாலாம் பிள்ளையின் அகவையிலே
நாலு பிள்ளைகளை
பொழுதுபோக்காகக் காதலித்தானுங்க...
நடுச்சந்தியிலே காதலி நாலும்
ஒன்றாய்ச் சந்திக்கையிலே
ஒன்பது பெண்களிடம்
நாலு பிள்ளைகளைக்காரன்
நல்லாய் வேண்டிக்கட்டினானுங்க...
என்னங்க - நீங்க
தலையைச் சொறியிறதைப் பார்த்தால்
கணக்குப் புரியவில்லையோ
கணக்குப் பார்க்கத் தெரியாதோ
என்றெல்லோ
நான் நினைச்சேன்...
என்றாலும் சொல்லிவிடுகிறேன்
பொழுதுபோக்காகக் காதலித்த பெண்கள்
மனைவியின் நண்பர்களாம்...
அவரின் அந்த நாலு காதலிகளும்
மனைவியோட அவரும்
அவரோட நாலு பிள்ளைகளும்
சந்திச்சபோது தான்
அவரோட காதல் அரங்கேற
ஒன்பது பெண்களுமா
அவரை உதைத்துத் தள்ளிட்டங்கண்ணே!
ஓரறிவுக்கண்ணால
பின்விளைவைப் பார்க்காததாலே
பதினெட்டுக் கண்கள் பார்த்ததும்
போட்டுத் தள்ளிய கதையைவிட
இன்னொரு
சுவையான கதையைக் கேளுங்கண்ணே...
என்னையும் ஒருவள்
தனக்குள்ளே
என் மீது காதல் அரும்ப
"என்னைத் தான் காதலிப்பதாகவும்
நீங்க விரும்பினால்
உங்க மகனைக் கட்டிட்டு
உங்களுக்கு
மருமகளாயிடுவேன்" என்று
ஒருவருக்கும் தெரியாம
என் வீட்டை வந்து
என் இல்லாளிடம் கேட்க - அவளோ
அடுப்பில ஆட்டுக் கறிக்கு மூட்டிய
வேப்பந்தடி நெருப்புக் கொள்ளியால
"கண்ணில்லையாடி
என் கணவனையே காதலிப்பதாக
என்னட்டை வந்து கேட்க..." என்று
மூஞ்சியில சுட்டுக் கலைத்த கதை
நல்லாயிருந்ததண்ணே!
என் மனைவி
என்னை விட மொத்தம் தான்
ஆனால்,
என் மனைவிக்கு
நான் பிள்ளையாக இருக்கலாமென
நம்பிய பெண்ணுக்கு
அறிவுக்கண்ணில
ஏதும் பிழையிருக்கலாமண்ணே!
உப்பிடியான
கதைகளைப் பொறுக்கித் தானண்ணே
யாழ்பாவாணனனும் பா புனையிறானுங்க...
நானும்
உந்தக் கதைகளை வைத்து
"அறிவுக்கண்ணால பாருங்க..." என்று
தலைப்பிட்டு
பா புனையப் போறேனுங்க!

என் கிறுக்கல்கள்


எத்தனையோ படிப்பிருக்க
இலக்கியப் படைப்பாக்குவதை
படித்தமையாலே தான்
பாக்கள், கதைகள், நகைச்சுவைகள், என
என்னென்னவோ கிறுக்குவதாக
எவரும்
நினைத்துப் போடாதையுங்கோ...
மூ.மேத்தாவின் பொத்தகத்தைப் படித்தால்
புதுப் பா(புதுக்கவிதை) எழுத வருமென்றார்கள்...
கண்ணதாசனின் பொத்தகத்தைப் படித்தால்
நல்ல பாட்டு எழுத வருமென்றார்கள்...
சொன்னவர் சொற்கேட்டுப் படித்தேன்
பாவோ(கவிதையோ) பாட்டோ
என்னாலே எழுத முடிந்ததில்லையே!
சின்னஞ் சிறு அகவையிலே
படிக்கிறதென்றால் புளிக்குமே - நான்
படிக்கையிலே புளிக்கையிலே
உள்ளத்தால் உணர்ந்ததை எல்லாம்
எழுதிப் பார்த்த போது தான்
என் கிறுக்கல்களும் பாக்களோ என
என்னாலே உணர முடிந்தது என்பேன்!
"சிவாஜி, சாவித்திரி இருவருமே
பள்ளிக்குப் போகமலிருக்க - நான்
நடிச்சது போல நடிக்க மாட்டார்களே...
பாரதிராஜா, பாக்கியராஜா இருவருமே
தேர்வு எழுதாமிலிருக்க - நான்
சாட்டுப் போட்டு ஒளித்தது போல
ஒரு படமும் இயக்க மாட்டார்களே..." என
என்னாலே உணர முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
"படிப்பில பிடிப்பில்லாத வரை
எப்படித்தான் படித்தாலும்
படிப்பும் புளிக்கும் தானே...
படிக்கிறது என்பது விரும்புகிற வரை
எப்படித்தான் பார்த்தாலும்
படிப்பும் இனிக்கும் தானே..." என
என்னாலே வழிகாட்ட முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
நல்ல தலைப்பைப் போட்டிட்டு
பாப்புனையக் குந்தினால்
என்னாலே பாப்புனைய முடிந்ததில்லை...
"இப்படி எழுதுகையில்
எப்படியோ பா(கவிதை) அமைகிறதே..." என
எழுதி முடிக்கையிலே தான்
தலைப்பு ஒன்றை வைத்து
பா(கவிதை) ஒன்று எழுதியதாக
நிறைவடைகிறேனே!
உண்மையைச் சொல்லப் போனால்
உள்ளம் நொந்த போதும்
மாற்றார் சுடுசொல் கேட்ட போதும்
எண்ணியதெல்லாம் எடுத்துச் சொல்ல
விரும்பிய போதெல்லாம்
தாளோடும் எழுதுகோலோடும்
விளையாடியதன் விளைவே
என் பாக்(கவிதை)கள் என்பேன்!
என் உள்ளத்தைப் புண்ணாக்கிய
என் உள்ளத்தைச் சுகப் படுத்திய
எதுவும் கூடத் தப்பாமல்
எவ்வாறு எனக்கிருந்தது என்பதை
அவ்வாறே எழுதியதால் தான்
என் கிறுக்கல்கள் கூட
பா(கவிதை) போல எனக்கிருக்கிறதே!

பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?


நிலாவில் இறங்கி
நேரில் பார்த்தது போல
தரைக்குக் கீழே
இருக்கும் நிலைமையை
படம் பிடித்தாற் போல
கருங்கல் வேலிக்கு அப்பாலே
நடப்பதைக் கூட
நேரில் கண்டது போல
மக்களாயம்(சமூகம்) என்ற
வட்டத்திற்கு உள்ளே
ஊடுருவிப் பார்த்தது போல
நேற்றைய நடப்புகளை வைத்து
நாளைய எதிர்வைக் கூறக் கூடியதாக
சூழல் மாற்றங்கள் சுட்டும்
செய்திகளைக் கூறக் கூடியதாக
மூட நம்பிக்கைகளை
தூக்கி எறியக் கூடியதாக
வருங்கால வழித்தோன்றல்களுக்கு
வழிகாட்டக் கூடியதாக
வாழைப்பழத்தில
ஊசி ஏற்றுவது போல
நல்லறிவை ஊட்டக் கூடியதாக
எந்தச் சிக்கல்களுக்கும் எளிதான தீர்வை
முன்வைக்கக் கூடியதாக
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே போரிட்ட பாரதியைப் போல
பாக்களைப் புனைபவனே
உண்மைப் பாவலன்(கவிஞன்)!
செந்தமிழில் விளையாடிய
பாரதிதாசனைப் பாரும்
பொதுவுடைமைக் கருத்துகளை முன்வைத்த
பட்டுக்கோட்டையாரைப் பாரும்
கோட்பாடுகளால்(தத்துவங்களால்) குறிவைத்து
நம்மாளுகளுக்கு வழிகாட்டிய
கண்ணதாசனைப் பாரும்
மக்கள் நினைவில் உருளும்
அவர்களது பாக்களில் உள்ள
எண்ணங்களை(கற்பனைகளை)
கணக்கிட்டுப் பாரும்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
பா(கவி) பாடுமளவுக்கு
கம்பனின் பா(கவி) புனையும் திறத்தை
பலரும் உவமிப்பதையும் பாரும்
எத்தனையோ பாவலர்களைப் போல
எத்தனையோ எண்ணங்களை(கற்பனைகளை)
வெளிப்படுத்தினால் தானே
நல்ல பாவலன்(கவிஞன்) ஆகலாம்!
தெருவால போன அழகியைக் கண்டதும்
ஆடைகளைக் களைந்து
பாவிலே அழகை விவரிப்பதோ
காதலித்துத் தோல்வி கண்டதாலோ
காதல் உணர்வு தோன்றியதாலோ
பாவிலே காதலை விவரிப்பதோ
பாவலன்(கவிஞன்) என்று
அடையாளப்படுத்த உதவாதே!
தெருவிலே வாழ்வோர் நிலையை
தெருவில் கையேந்துவோர் நிலையை
பட்டினி வயிற்றின் நிலையை
ஊருக்குள்ளே உள்ள சீர்கேட்டை
பணி செய்யும் இடங்களில்
இடம் பெறும் கையூட்டு நிகழ்வை
கல்வி ஊட்டுவோர்
படிப்போரைக் கெடுக்கும் செயலை
அரசுகளின் ஓட்டை உடைசலுகளை
எண்ணிப் பார்த்தால்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
அத்தனையையும் பொறுக்கி
உங்கள் பாவிலே எடுத்தாள முனைந்தால்
நீங்கள் பாவலன்(கவிஞன்) தான்!
ஊரைச் சீர்படுத்தவும்
அரசை ஆட்டம் காண வைப்பதும்
உலகை ஒரு கணம் உலக்கவும்
எதைத்தான் சொன்னாலும்
பாவலனால்(கவிஞனால்)
முடியாதது ஏதுமுண்டோ?
சான்றுக்கு
கவிகாளமேகம் ஒருவரே
போதுமென்பேன்!
எந்த எழுத்தில் தொடங்கி
அந்த எழுத்திலே முடிப்பதற்கும்
எந்தச் சொல்லில் தொடங்கி
அந்தச் சொல்லிலே முடிப்பதற்கும்
எந்தப் பொருளிலும் எந்த நிகழ்வையும்
தன் பாவால் எடுத்தாண்டு
பொறாமை கொண்ட பாவலர்களை அடக்கி
அரசனிடம் பரிசு பெற்றதாக
காளமேகத்தின் பா புலமையைக் கூறும்
பொத்தகமொன்றில் படித்தேனே!
பாவலர்களாக(கவிஞர்களாக)த் துடிக்கும்
புதியவர்களே...
பாடுபொருள் மட்டுமல்ல
சிறந்த எண்ண வெளிப்பாடு
(கற்பனைத் திறன்)
பா புனையும் ஆற்றல்
எல்லாவற்றையும் கண்டு
வாசகர் களிப்படைந்தாலே
உங்கள் பாக்கள் வெற்றி பெறும்!
பாவலனாகும் எண்ணத்தில்
நான் படித்ததை
உமக்குரைத்த நான் கூட
உங்களைப் போன்ற புதிய பாவலனே!