Sunday, January 20, 2013

சோமசுந்தரப்புலவர் பா(கவிதை)


பாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல்ல சாப்பாடாக
கூழும் கொழுக்கட்டையும் உண்ணும் நிகழ்வை புதுமையாக ஈழத்து யாழ்ப்பாணத்து நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பாவைப் படித்ததும் நாவூறும் பாருங்கோ... பாபுனைய விரும்புவோர் அவரது நுட்பத்தைப் படித்து சிறந்த பாக்களைப் புனைய வாழ்த்துகிறேன்.

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

ஆக்கியோன்: ஈழத்து யாழ்ப்பாணத்து நாவாலியூர் சோமசுந்தரப்புலவர்

7 comments:


  1. வணக்கம்!

    கவி.சோம சுந்தரனார் கற்கண்டு சொல்லால்
    புவிசேமப் பாடல் புனைந்தார்! - செவிகண்கள்
    இன்பச் சிலிர்ப்பில் இளகினவே! கற்போர்தம்
    துன்பம் அனைத்தும் துடைத்து!

    ReplyDelete
  2. தங்கள் கருத்துச் சொல்லும் உண்மையை
    என் மாணவர் பின்பற்றி
    பெரும் பாவலராக விரும்பும்
    யாழ்பாவாணனின் நன்றி.

    ReplyDelete
  3. ஆடிப் பிறப்பின் அழகு நிகழ்வுகளைத்
    தேடிக் கொடுத்தீர்! தெளிவாகப் - பாடினேன்!
    கோடி மலரெடுத்துக் கொஞ்சும் தமிழுக்குச்
    சூடி மகிழ்வேன் சுடர்ந்து.

    ReplyDelete
    Replies
    1. அறிஞரின் தமிழ்ப் பற்றுத் தெரிகிறது
      அறிவேன் தமிழ் பற்றாளர் தேடல்
      படிப்பேன் பல அறிஞர் பாட்டு
      படித்ததில் பிடித்ததை அடுத்தும் தருவேன்!

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.