Thursday, May 1, 2014

புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?


இனிய உறவுகளே!
நான் புதன், சித்திரை 30, 2014 அன்று "கவிதை" என்பது வடமொழியா? எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே "கவிதை" என்பது வடமொழியா? (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, "புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.

"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
புவியும் அதுவெனப் போ!" என்ற
கவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.

உடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் "குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29)." என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.

http://ta.wiktionary.org/s/gy6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.

என் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.

http://ta.wiktionary.org/s/4jt6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.

இவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே! தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.

எனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா? இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா? அறிஞர்களே! உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

6 comments:

  1. தமிழ் போற்றும் நல்லுலகில் பா புனையும் அனைவரையும் பாவலர்கள்
    என்று அழைப்பதற்குப் பதிலாக கவிஞர் வைரமுத்து ,கவிஞர் வாலி ,
    கவிஞர் கண்ணதாசன் கவிஞர் பாரதிதாசன் என்று வடமொழியில்
    பெயர் சூட்டிப் புகழ்ந்து போற்ற என்ன அவசியம் உள்ளத இவர்களை போன்று
    இன்னும் எத்தனையோ பேர் பா புனைகிறார்கள் அனைவருமே வட மொழியைச்
    சார்ந்தவர்களா ?...எம் தாய் மொழி அல்லாத பிற மொழிக்கு ஏன் இந்த இடத்தில்
    இவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளனர் ?...இன்பத் தமிழில் இனிதாக
    பாவலர்கள் என்று அழைத்திருக்கலாமே ?..ஏமாற்றம் தரும் இச் சொல்
    வடமொழிச் சொல்லா எம் தாய் மொழிச் சொல்லா கேள்விக் குறிகளோடு
    விடைபெற்றுச் செல்கின்றேன் ஐயா தங்களின் முயற்சி வெற்றி பெற என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. 'கபி' என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் இருந்து உள்வாங்கியுள்ளதாக புலவர் வெற்றியழகன் கூறுகின்றார். கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களே என புலவர் வெற்றியழகன் கூறுகின்றார்.

      Delete
    2. உண்மையும் இதுவாகத் தான் இருக்க வேண்டும் .தங்களின்
      தேடலுக்குக் கிடைத்த பதிலைக் கண்டு நானும் மகிழ்ந்தேன்
      வாழ்த்துக்கள் ஐயா .

      Delete
    3. தங்கள் தமிழ்ப் பற்றைப் பாராட்டுகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. புலவர் வெற்றியழகன் கபி என்றால் குரங்கு என்பது சமற்கிருதம் என்றும், கவி, கவிதை, கவிஞன் என்பன நல்ல தமிழே என்றும், சமற்கிருதக்காரர் கவிதையைக் கவி என்று கூறும் தமிழ்ச்சொல்லை அவர்கள் எடுத்துக்கொண்டனர். கருத்துக் கவிந்திருப்பது, உணர்ச்சி கவிந்திருப்பது கவிதை. சங்க இலக்கிய நுால் பரிபாடலில் கவிதை எனும் சொல் வருகின்றது, பாரதிதாசன், கவிதை என்பது நல்ல தமிழே என்று "வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" என்னும் நுாலில் கூறியுள்ளார், ஆகையால், புலவர் வெற்றியழகன் உண்மையே சொல்லியுள்ளார், பொய் சொல்லவில்லை என்பது புலனாகிறது. –
    தமிழன்புடன், கவிஞர்.துாயோன், செயலாளர், தமிழ் இலக்கிய இயக்கம், சென்னை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆழமான ஆய்வுக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.