Saturday, May 31, 2014

பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில்
09/2011 காலப்பகுதியில்
சரவணன் என்னும் நண்பரின் பதிவில்...
இதோ அவரது பதிவு:

” காதலி “
***************
கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!

சரவணன் என்னும் நண்பருக்கு எதிராக எதனையும் குறிப்பிட்டிருந்தால் என்னைச் சுட்டுக் கொல்லவும்.

இதோ என் தாக்குரையும் திறனாய்வும்:

"கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!" என்னும்
துளிப்பா(ஹைக்கூ) தரும் பொருள்
எல்லோரும் வழமையாகப் பாடும்
பாடுபொருளே!
இத்துளிப்பாவை

” காதலன் “
***************
கல்லாதவளையும்
கவிஞையாக்கும்
ஆசிரியன்!

இப்படியும் எழுதலாமே!

எழுதும் போது
இப்படியும் அமையலாம் என
இரண்டு பக்கத்தையும்
பார்த்து எழுதாவிட்டால்
உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே...
அதேவேளை
உங்களுடைய கவிதை
முழுமையடையாமல் போகிறதே!

கவிதை தரமானது
ஆனால்
காதலன் கூற்றே!
அப்படியாயின்
காதலியின் கூற்றையும் கூறி
பாவலன்(கவிஞன்) கருத்தாக
உங்கள்
முடிவையும் சொல்லி வைக்கலாமே!
எடுத்துக்காட்டாக:

"என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவளே...
என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவனே...
காதலாகியோர் சொல்லும் கதை!" என்று
எழுத்தை ஆள முற்பட்டால்
உங்கள்
தனித்துவம் புலப்படுமே!

காதலிக்கையிலோ
காதலித்துத் தோல்வி உற்றதாலோ
வறுமைப்பட்டதாலோ
துன்பப்பட்டதாலோ
துயரப்பட்டதாலோ
ஏன்
மகிழ்வுற்றதாலோ
கவிதை வரலாம் தானே!
அது தான் பாருங்கோ
தான் உள்வாங்கியதை
தான் உணர்ந்ததை
வெளிப்படுத்த நினைக்கும்
எவருக்கும்
கவிதை தானாகவே ஊற்றெடுக்கும்!

"பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை - அவன்
சூழலால் உருவாக்கப்படுகிறான்!" என்பதை
உள்ளத்தில் இருத்தி
உங்களுக்குள்ளும்
பா(கவிதை) எழுத வருமென
எழுதுகோல் ஏந்துங்கள்!

தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்களின் கருத்து:

"உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே..."
இது யோசிக்க வைக்கிறது.

அதற்கு
என் பதில் இப்படி இருந்தது:

முழுமையான படைப்பே
தரமானதாயின்
இரண்டு பக்கங்களையும்
பொருட்படுத்த வேண்டுமென்றேன்...
அவரவர்
பதிவுகளை ஆக்கும் போது
வந்த கற்பனையை
அப்படியே எழுதினாலும்
எழுதிய பதிவை
வாசிப்பவர் எண்ணங்களில்
என்ன தோன்றும் என்பதை
கருத்திற் கொள்கிறோமே!
பதிவை வாசித்த
மற்றைய படைப்பாளிகள்
ஆணொருவர்
பெண் குறித்துப் பாடியதைப் பார்த்து
பெண்ணொருவர்
ஆண் குறித்துப் பாடியது போல
எழுத வாய்ப்பிருக்கிறது என்பதையே
சுட்டிக் காட்டினேன்!
இதனால் பாருங்கோ
சிறந்த படைப்புகளை
படைப்பாளிகள் எழுதுவார்கள் என
நான் நம்புகின்றேன்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.