Wednesday, January 9, 2013

எதைப் பா(கவிதை) என்பது?


 எழுதுவோர்
எழுதியதெல்லாம்
பாவாக மாட்டாதே!
பாவிற்கு
உணர்ச்சி, உவமை, இசை எல்லாம்
ஓரணியில் திரண்டு வர வேண்டுமே!
எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!
ஓரிரு வரிகளிலோ
நான்கைந்து வரிகளிலோ
உணர்ச்சி பொங்க எழுதினாலும்
பா(கவிதை) ஆகாதே...
பா(கவிதை) எதுவென அறிந்தே
பா(கவிதை) புனையவும் வேண்டுமே!
இலக்கணமில்லா பா(கவிதை) என்று
ஏதுமில்லையே...
எளிய பா(கவிதை) என்றே
வரிப் பா(வசன கவிதை), புதுப் பா(புதுக் கவிதை)
இருப்பதை அறிந்தே
பா(கவிதை) புனைய முன்வாருங்களேன்!
எடுத்துக்காட்டாகச் சில வரிகள்
சொல்ல வேண்டிய செய்தியாக
"ஒற்றுமை" என்பதை வைத்தே
பா(கவிதை) புனைந்து காட்டுகிறேன்...
புதிதாகப் பா புனைவோரே
கொஞ்சம் பொறுப்போடு பாருங்களேன்!
"கல் தேயுமளவுக்கு எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன.
எறும்புகள் ஒரே வழியில் ஒற்றுமையாகச் செல்வதால் தானே!
ஆறறிவு நம்மாளுகளுக்கு இப்படியொரு ஒற்றுமையே கிடையாதே!" என
மூன்று நீண்ட வரிகளில் எழுதியது
வரிப் பா(வசன கவிதையே)வே!
வரிப் பாவில்
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!
"ஒரே வழியில்
ஒன்றன் பின் ஒன்றாக
ஊர்ந்து செல்லும் எறும்புகளால்
கல்கூடத் தேயுமென்றால்
ஒற்றுமையின் பெறுமதி எவ்வளவு?
அட நம்மாளுகளே
ஆறறிவு நமக்கிருந்தும்
எங்களுக்குள்ளே
ஒற்றுமையைக் காணோமே!" என
முறிந்த வரிகளால் புனைந்தது
புதுப் பா(புதுக் கவிதையே)வே!
புதுப் பாவில்
வரிகள் முறிந்து இருந்தாலும்
உணர்வோ எண்ணமோ
அவ்வவ் வரியில் அப்படியே தெரிய
இசையோடு வாசிக்க இலகுவாக
புதுப் பா புனையுங்களேன்!
பா புனைவதில் நானோ சிறியன்
எப்படியிருப்பினும்
புதுமுகங்கள் பா புனைவதில்
விடுகின்ற பிழைகளை
சுட்டிக் காட்டும் நோக்கில்
கட்டியமைத்த பா இது!
முடிந்தால் மூ.மேத்தாவின்
கண்ணீர் பூக்களை
வேண்டிப் படித்துப் பாருங்களேன்...
கண்ணதாசனையும்
பட்டுக்கோட்டையாரையும்
முந்திக்கொண்டே பெரும் பாவலராவீரே!

8 comments:

  1. "ஒரே வழியில்
    ஒன்றன் பின் ஒன்றாக
    ஊர்ந்து செல்லும் எறும்புகளால்
    கல்கூடத் தேயுமென்றால்
    ஒற்றுமையின் பெறுமதி எவ்வளவு?

    அழகாகக் கேட்டீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மதிப்பீட்டுக்கு நன்றி.

      Delete
  2. தங்கள் இடுகையோடு தொடர்புடைய இடுகை.

    கவிதை ஊர்தி

    http://www.gunathamizh.com/2011/08/blog-post_03.html

    காண அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  3. "கவிதை ஊர்தி" என்ற பா பார்க்க வந்தேன்...
    அழகான பாவரிகள்
    அன்போடு என்னை ஈர்க்க
    பார்த்த மாத்திரத்தில்
    தங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே.
      மறுமொழியிடு்ம்போது வேர்டு வெரிபிகேசன் தடையாக உள்ளது அதை எடுத்துவிட்டால் இன்னும் எளிமையாகப் பலரும் வந்து மறுமொழியிடுவார்கள் நண்பரே.

      (தங்கள் வலைக்கு தமிழ்மணம் திரட்டிவழியாக வந்துசேர்ந்தேன்.)

      Delete
    2. தங்கள் வழிகாட்டலின் படியே செய்து கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.