Tuesday, June 10, 2014

பாவலர்களுக்கு ஒளிக்கலாமா?

நிலவைப் பெண்ணாக
உருவகித்தது அந்தக் காலம்
உலவும் பெண்ணை
ஒப்பிடுவது இந்தக் காலம்
பாவலனின் கண்ணில் பட்டதெல்லாம்
உருவகமுமாகலாம் ஒப்பீடுமாகலாம்!

"பாவலர்களின் கண்களில் பட்டுவிடாதே
உன்னை
எப்படியும் ஆக்கி எழுதிவிடுவார்கள்" என்று
சிலர் எச்சரிக்கலாம் - ஆனால்
எண்ணிப் பார்க்க முடியாதளவு
எழுதக்கூடியவர்கள் பாவலர்களே!

எதை, எவனை, எவளை
நாம் எப்படியும் ஒளிக்கலாம்
ஆனால்
அதை, அவனை, அவளை
பாவலன் அப்படியே ஒளிக்காமல்
பாப்புனைந்து வெளிக்காட்ட வல்லான்!

எதையும் உண்டு களிக்காமல்
உண்டு சுவைத்தது போல
பாப்புனைந்து நாவூற வைப்பான்
தன் கண்ணில் படாததையும்
கண்ணில் பட்டதுபோல் எழுதுவான்
தேடலுள்ள பாவலனின் ஆற்றலை
பாப்புனையும் திறனில் பார்ப்பேன்!

தன் கற்பனைப் பார்வையால்
கருங்கல் வேலிக்கப்பால் நடப்பதை
இப்பால் இருந்தே சொல்வான்
எப்பாலும் நடக்கும் என்றாலும்
இக்கணமே எடுத்துச் சொல்வான்
எக்கணமும் அஞ்சாது எழுதும்
பாவலனுக்கு ஒளிப்பதில் பயனேது!

கற்பனை வானில் பறப்பான்
கனிந்த எண்ணங்களைத் தொடுத்து
சொற்சுவை பொருட்சுவை மின்ன
பற்பல பாக்களை ஆக்குவான்
ஆக்கிய பாக்களில் ஒளிந்துள்ள
உண்மையை மெல்லக் கண்டுகளி!


எல்லா வலைப்பூக்களிலும் நானிட்ட புதிய பதிவுகளை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.0hna.com/

6 comments:

  1. ரசமான சிந்தனை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. என்னமா எழுதறீங்க நீங்க எல்லாம் சான்சே இல்லை கத்துக் கொடுங்கப்பா இந்த கத்துக் குட்டிக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. தளத்தில் இருப்பதைப் படியுங்கள்.
      தேவையான நூல்களை http://wp.me/PTOfc-58 இங்கு பதிவிறக்கலாம்.
      எந்தக் கத்துக் குட்டிக்கும் கத்துக் கொடுக்கவே நாம் பிறந்தோம்.
      வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  3. பாவலருக்கான கவி வரிகள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.