Thursday, May 16, 2013

அறிவுக்கண்ணால பாருங்க...



காதல் என்பது
யார் மீதும்
எந்நேரமும் வரலாம்
அந்நேரம்
மணமானவர்கள்
கணவனை / மனைவியை நினைவூட்டுங்க...
மணமாகாதவர்கள்
காதலனென்றால்
நல்ல வருவாய்க்காரனாகவும்
காதலியென்றால்
பணத்தைச் சேமிப்பவளாகவும்
பார்த்துக் கொள்ளுங்க...
காதல் வந்ததும்
கண்ணை மறைக்கும் என்கிறாங்க...
அதுங்க
அறிவுக் கண்ணைத் தானுங்க...
அதுதானுங்க
காதல் வந்ததால்
வரவேண்டிய அறிவைச் சொன்னேனுங்க!
நான் சொன்னா
நீங்க கேட்க மாட்டியளே...
இப்படித்தானுங்க
நாலு பிள்ளைக்காரனுங்க
நாலாம் பிள்ளையின் அகவையிலே
நாலு பிள்ளைகளை
பொழுதுபோக்காகக் காதலித்தானுங்க...
நடுச்சந்தியிலே காதலி நாலும்
ஒன்றாய்ச் சந்திக்கையிலே
ஒன்பது பெண்களிடம்
நாலு பிள்ளைகளைக்காரன்
நல்லாய் வேண்டிக்கட்டினானுங்க...
என்னங்க - நீங்க
தலையைச் சொறியிறதைப் பார்த்தால்
கணக்குப் புரியவில்லையோ
கணக்குப் பார்க்கத் தெரியாதோ
என்றெல்லோ
நான் நினைச்சேன்...
என்றாலும் சொல்லிவிடுகிறேன்
பொழுதுபோக்காகக் காதலித்த பெண்கள்
மனைவியின் நண்பர்களாம்...
அவரின் அந்த நாலு காதலிகளும்
மனைவியோட அவரும்
அவரோட நாலு பிள்ளைகளும்
சந்திச்சபோது தான்
அவரோட காதல் அரங்கேற
ஒன்பது பெண்களுமா
அவரை உதைத்துத் தள்ளிட்டங்கண்ணே!
ஓரறிவுக்கண்ணால
பின்விளைவைப் பார்க்காததாலே
பதினெட்டுக் கண்கள் பார்த்ததும்
போட்டுத் தள்ளிய கதையைவிட
இன்னொரு
சுவையான கதையைக் கேளுங்கண்ணே...
என்னையும் ஒருவள்
தனக்குள்ளே
என் மீது காதல் அரும்ப
"என்னைத் தான் காதலிப்பதாகவும்
நீங்க விரும்பினால்
உங்க மகனைக் கட்டிட்டு
உங்களுக்கு
மருமகளாயிடுவேன்" என்று
ஒருவருக்கும் தெரியாம
என் வீட்டை வந்து
என் இல்லாளிடம் கேட்க - அவளோ
அடுப்பில ஆட்டுக் கறிக்கு மூட்டிய
வேப்பந்தடி நெருப்புக் கொள்ளியால
"கண்ணில்லையாடி
என் கணவனையே காதலிப்பதாக
என்னட்டை வந்து கேட்க..." என்று
மூஞ்சியில சுட்டுக் கலைத்த கதை
நல்லாயிருந்ததண்ணே!
என் மனைவி
என்னை விட மொத்தம் தான்
ஆனால்,
என் மனைவிக்கு
நான் பிள்ளையாக இருக்கலாமென
நம்பிய பெண்ணுக்கு
அறிவுக்கண்ணில
ஏதும் பிழையிருக்கலாமண்ணே!
உப்பிடியான
கதைகளைப் பொறுக்கித் தானண்ணே
யாழ்பாவாணனனும் பா புனையிறானுங்க...
நானும்
உந்தக் கதைகளை வைத்து
"அறிவுக்கண்ணால பாருங்க..." என்று
தலைப்பிட்டு
பா புனையப் போறேனுங்க!

என் கிறுக்கல்கள்


எத்தனையோ படிப்பிருக்க
இலக்கியப் படைப்பாக்குவதை
படித்தமையாலே தான்
பாக்கள், கதைகள், நகைச்சுவைகள், என
என்னென்னவோ கிறுக்குவதாக
எவரும்
நினைத்துப் போடாதையுங்கோ...
மூ.மேத்தாவின் பொத்தகத்தைப் படித்தால்
புதுப் பா(புதுக்கவிதை) எழுத வருமென்றார்கள்...
கண்ணதாசனின் பொத்தகத்தைப் படித்தால்
நல்ல பாட்டு எழுத வருமென்றார்கள்...
சொன்னவர் சொற்கேட்டுப் படித்தேன்
பாவோ(கவிதையோ) பாட்டோ
என்னாலே எழுத முடிந்ததில்லையே!
சின்னஞ் சிறு அகவையிலே
படிக்கிறதென்றால் புளிக்குமே - நான்
படிக்கையிலே புளிக்கையிலே
உள்ளத்தால் உணர்ந்ததை எல்லாம்
எழுதிப் பார்த்த போது தான்
என் கிறுக்கல்களும் பாக்களோ என
என்னாலே உணர முடிந்தது என்பேன்!
"சிவாஜி, சாவித்திரி இருவருமே
பள்ளிக்குப் போகமலிருக்க - நான்
நடிச்சது போல நடிக்க மாட்டார்களே...
பாரதிராஜா, பாக்கியராஜா இருவருமே
தேர்வு எழுதாமிலிருக்க - நான்
சாட்டுப் போட்டு ஒளித்தது போல
ஒரு படமும் இயக்க மாட்டார்களே..." என
என்னாலே உணர முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
"படிப்பில பிடிப்பில்லாத வரை
எப்படித்தான் படித்தாலும்
படிப்பும் புளிக்கும் தானே...
படிக்கிறது என்பது விரும்புகிற வரை
எப்படித்தான் பார்த்தாலும்
படிப்பும் இனிக்கும் தானே..." என
என்னாலே வழிகாட்ட முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
நல்ல தலைப்பைப் போட்டிட்டு
பாப்புனையக் குந்தினால்
என்னாலே பாப்புனைய முடிந்ததில்லை...
"இப்படி எழுதுகையில்
எப்படியோ பா(கவிதை) அமைகிறதே..." என
எழுதி முடிக்கையிலே தான்
தலைப்பு ஒன்றை வைத்து
பா(கவிதை) ஒன்று எழுதியதாக
நிறைவடைகிறேனே!
உண்மையைச் சொல்லப் போனால்
உள்ளம் நொந்த போதும்
மாற்றார் சுடுசொல் கேட்ட போதும்
எண்ணியதெல்லாம் எடுத்துச் சொல்ல
விரும்பிய போதெல்லாம்
தாளோடும் எழுதுகோலோடும்
விளையாடியதன் விளைவே
என் பாக்(கவிதை)கள் என்பேன்!
என் உள்ளத்தைப் புண்ணாக்கிய
என் உள்ளத்தைச் சுகப் படுத்திய
எதுவும் கூடத் தப்பாமல்
எவ்வாறு எனக்கிருந்தது என்பதை
அவ்வாறே எழுதியதால் தான்
என் கிறுக்கல்கள் கூட
பா(கவிதை) போல எனக்கிருக்கிறதே!

பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?


நிலாவில் இறங்கி
நேரில் பார்த்தது போல
தரைக்குக் கீழே
இருக்கும் நிலைமையை
படம் பிடித்தாற் போல
கருங்கல் வேலிக்கு அப்பாலே
நடப்பதைக் கூட
நேரில் கண்டது போல
மக்களாயம்(சமூகம்) என்ற
வட்டத்திற்கு உள்ளே
ஊடுருவிப் பார்த்தது போல
நேற்றைய நடப்புகளை வைத்து
நாளைய எதிர்வைக் கூறக் கூடியதாக
சூழல் மாற்றங்கள் சுட்டும்
செய்திகளைக் கூறக் கூடியதாக
மூட நம்பிக்கைகளை
தூக்கி எறியக் கூடியதாக
வருங்கால வழித்தோன்றல்களுக்கு
வழிகாட்டக் கூடியதாக
வாழைப்பழத்தில
ஊசி ஏற்றுவது போல
நல்லறிவை ஊட்டக் கூடியதாக
எந்தச் சிக்கல்களுக்கும் எளிதான தீர்வை
முன்வைக்கக் கூடியதாக
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே போரிட்ட பாரதியைப் போல
பாக்களைப் புனைபவனே
உண்மைப் பாவலன்(கவிஞன்)!
செந்தமிழில் விளையாடிய
பாரதிதாசனைப் பாரும்
பொதுவுடைமைக் கருத்துகளை முன்வைத்த
பட்டுக்கோட்டையாரைப் பாரும்
கோட்பாடுகளால்(தத்துவங்களால்) குறிவைத்து
நம்மாளுகளுக்கு வழிகாட்டிய
கண்ணதாசனைப் பாரும்
மக்கள் நினைவில் உருளும்
அவர்களது பாக்களில் உள்ள
எண்ணங்களை(கற்பனைகளை)
கணக்கிட்டுப் பாரும்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
பா(கவி) பாடுமளவுக்கு
கம்பனின் பா(கவி) புனையும் திறத்தை
பலரும் உவமிப்பதையும் பாரும்
எத்தனையோ பாவலர்களைப் போல
எத்தனையோ எண்ணங்களை(கற்பனைகளை)
வெளிப்படுத்தினால் தானே
நல்ல பாவலன்(கவிஞன்) ஆகலாம்!
தெருவால போன அழகியைக் கண்டதும்
ஆடைகளைக் களைந்து
பாவிலே அழகை விவரிப்பதோ
காதலித்துத் தோல்வி கண்டதாலோ
காதல் உணர்வு தோன்றியதாலோ
பாவிலே காதலை விவரிப்பதோ
பாவலன்(கவிஞன்) என்று
அடையாளப்படுத்த உதவாதே!
தெருவிலே வாழ்வோர் நிலையை
தெருவில் கையேந்துவோர் நிலையை
பட்டினி வயிற்றின் நிலையை
ஊருக்குள்ளே உள்ள சீர்கேட்டை
பணி செய்யும் இடங்களில்
இடம் பெறும் கையூட்டு நிகழ்வை
கல்வி ஊட்டுவோர்
படிப்போரைக் கெடுக்கும் செயலை
அரசுகளின் ஓட்டை உடைசலுகளை
எண்ணிப் பார்த்தால்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
அத்தனையையும் பொறுக்கி
உங்கள் பாவிலே எடுத்தாள முனைந்தால்
நீங்கள் பாவலன்(கவிஞன்) தான்!
ஊரைச் சீர்படுத்தவும்
அரசை ஆட்டம் காண வைப்பதும்
உலகை ஒரு கணம் உலக்கவும்
எதைத்தான் சொன்னாலும்
பாவலனால்(கவிஞனால்)
முடியாதது ஏதுமுண்டோ?
சான்றுக்கு
கவிகாளமேகம் ஒருவரே
போதுமென்பேன்!
எந்த எழுத்தில் தொடங்கி
அந்த எழுத்திலே முடிப்பதற்கும்
எந்தச் சொல்லில் தொடங்கி
அந்தச் சொல்லிலே முடிப்பதற்கும்
எந்தப் பொருளிலும் எந்த நிகழ்வையும்
தன் பாவால் எடுத்தாண்டு
பொறாமை கொண்ட பாவலர்களை அடக்கி
அரசனிடம் பரிசு பெற்றதாக
காளமேகத்தின் பா புலமையைக் கூறும்
பொத்தகமொன்றில் படித்தேனே!
பாவலர்களாக(கவிஞர்களாக)த் துடிக்கும்
புதியவர்களே...
பாடுபொருள் மட்டுமல்ல
சிறந்த எண்ண வெளிப்பாடு
(கற்பனைத் திறன்)
பா புனையும் ஆற்றல்
எல்லாவற்றையும் கண்டு
வாசகர் களிப்படைந்தாலே
உங்கள் பாக்கள் வெற்றி பெறும்!
பாவலனாகும் எண்ணத்தில்
நான் படித்ததை
உமக்குரைத்த நான் கூட
உங்களைப் போன்ற புதிய பாவலனே!

வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது


ஏதாவது
எழுத வேண்டும் என எண்ணினேன்
எழுத்துகள் வந்தன
சொல்கள் வந்து குவிந்தன
மீண்டும்
எதை எழுதலாமென எண்ணினேன்
பா புனைய உள்ளமும் உடன்பட்டது
பாவிலே
துளிப்பா, குறும்பா, புதுப்பா...
ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா...
இன்னிசைப் பா என
எத்தனையோ என்னுள் மோதின
பாவைத் தெரிவு செய்வதற்கிடையில்
எழுதுகோலுக்கு மூச்சுப் போயிடுமென
எழுதத் தொடங்கினேன்!
அடுத்த வீட்டில்
"ஆவென்று அழுதது குழந்தை"
அப்படியே எழுதினேன்
குழந்தை ஏனழுமென எண்ண
"பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி" என
இரண்டாம் அடியைத் தொடுத்தேன்
மூன்றாம் அடியைத் தேடுகையில்
"பாலென்று பருக்கிட இயலாதவள்" என
மூன்றாவது அடியும் தலை நீட்டியதே!
வேண்டி வளர்ப்பவளுக்கு
மார்பை நெரிச்சுப் பிழிந்தாலும்
முலையால் பால் வராதென எண்ணி
"தானென்று தன்னையே நோவாள்
ஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்" என
முடிக்க முனைந்த போது
"வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது" என
தலைப்பும் தானாக வந்ததே!
படித்துப் பாருங்கள்
நான் புனைந்த பாவிது!

ஆவென்று அழுதது குழந்தையுமே
பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி
பாலென்று பருக்கிட இயலாதவள்
தானென்று தன்னையே நோவாள்
ஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்!

நானே
படித்துப் பார்த்த பின்
எனக்கோ குழந்தைகளில்லை
விருப்புக்கொரு குழந்தை வேண்டி
விரும்பியே வளர்க்கையில்
என்னவளும்
இப்படித்தான் துன்புறுவாளென
எண்ணிப் பார்க்கையிலே
என் உள்ளம் நோகிறதே!

Sunday, May 12, 2013

பாபுனையப் பொத்தகங்கள் சில...


உவன் யாழ்பாவாணன்
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என
தொடங்கியவர் தான்
உருப்படியாய்
இன்னும் முடித்தபாடில்லைக் காணும்...
போதாக்குறைக்கு
"பாபுனையப் பொத்தகங்கள் சில..." என
வந்திட்டாரென்று - நீங்கள்
உங்களுக்குள்ளே எண்ணிக்கொள்ளலாம்!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற
தொடரைத் தொடர்ந்து கரை சேர்க்க
"பாபுனையப் பொத்தகங்கள் சில..." என
பொறுக்கித் தர முனைந்தது
பயிலுவோருக்கு இலகுபடுத்தவே!
மரபுப் பா(கவிதை) தொட்டு
புதுப் பா(கவிதை) வரையான
இலக்கண, இலக்கிய விளக்க நூல்கள்
அஆ, பாட்டு, உரைநடை இலக்கணங்கள்
சிறுவர் தமிழ் இலக்கியம்
நாட்டார் பாடல் இலக்கியம் என
அறுபதிற்கு மேற்பட்ட
தலைப்புகளின் கீழ்
ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்களை
தொகுத்துத் திரட்டியுள்ளேன் என்றாலும்
"படைப்பாளியாக முயல்வோருக்கு" என
யாப்பறிந்து பாபுனைய வந்தோருக்கும்
வழிகாட்டல் நூல்கள் இருக்குப் பாரும்!
தமிழ் நலம், தமிழர்(உள, உடல்) நலம் பேண
வழிகாட்டல் நூல்கள் பலவும் இருக்கு
உலகின் எட்டுத் திக்கிலும் வாழும்
நம்மாளுகள் அறிந்திட உதவுங்களேன்!
தமிழை மறந்தவர் தமிழ் பயில
ஆங்கில வழியில்
தமிழ் பயிலும் நூல்களும் இருக்கு
உண்ணான
வெள்ளைக்காரனும்
தமிழ் படிக்க உதவும் என்றே
யாழ்பாவாணனின்
மின்நூல் களஞ்சியத்தை
உலகிற்கு அறிமுகம் செய்ய
முன்வாருங்கள் உறவுகளே!

மின்நூல் களஞ்சியத்தைப் பார்வையிட கீழ் வரும் இணைப்பைச் சொடுக்குக:
http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

நீங்களும் மின்நூல் களஞ்சியம் அமைக்கலாம். முதலில "யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு!" என்ற பக்கத்தைப் பாருங்கள்.
http://yarlpavanan.wordpress.com/2013/05/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/