Saturday, May 23, 2015

இலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து


"நான் என்ன
என்னைக் காதலி என்று தானே கேட்டேன்!
அதற்கு - நீ
என் கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடிப்பாயா?" என்று ஆணெழுத
"நானாவது
கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடித்தேன்! - என்
கணவன் அருகில் இருந்திருந்தால்
என்னைக் காதலி என்று கேட்டதுமே
என் மனைவியிடமா கேட்கின்றாய் என்று - உன்
கழுத்தையே அறுத்திருப்பாரே!" என்று பெண் பதிலிறுக்க
அழகான பா/கவிதை என்று படித்தவர் புகழ
மிச்சம் சொல்லவும் வேண்டுமா? - தன்னை
பாவலரென்றே முழங்கித் திரிவர் சிறியர்!
இலக்கியம் தோன்றிய பின்னரே
இலக்கணம் தோன்றியது என்பதை
கணக்கில் வைத்துக்கொண்டு - எவரும்
கதை, கட்டுரை, நாடகம் எழுதினாலும்
பா/கவிதை, இசைப்பாட்டு, திரைப்பாடல் எழுத
இயலாதென்பதை எள்ளளவேனும் அறிந்தீரா?
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்! - இங்கே
தமிழில் 30 + 1 எழுத்துகளா
தமிழில் 247 எழுத்துகளா
என்றெல்லோ மோதுகினம்!
"உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;" என்பது
காதல் கவிதையா? குழந்தைக் கவிதையா?
என்றெல்லோ மோதுகினம்!
பாரதி பாடலும் நன்னூல் அறிவும்
எள்ளளவேனும் அறிந்திருந்தால் கூட
பா/கவிதை புனையலாம் காண் - நீ
பாப்புனைய விரும்பும் ஒருவரா - அப்ப
பா/கவிதை ஒன்றைக் கண்டால்
படித்துப் பாடுபொருள் கண்டுபிடி - மேலும்
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில்
தமிழில் 369 எழுத்துகள் உண்டாம் - நான்
கண்டேன் ஊமைக்கனவுகள் தளத்தில் - பாரும்
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் ஏற்ற
இலக்கண ஆய்வுப்பாடம் ஆங்கே இருக்கே!
இழுத்தடிப்பு வேண்டாம் இப்பவே செல்லங்கே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே படித்தங்கே
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_24.html
இலக்கணம் அறிந்து தெளிந்த பின்
எழுதுகோல் ஏந்து இலகுவாய்ப் பாப்புனையலாம்!


Tuesday, May 5, 2015

இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்

இசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/01/blog-post_11.html
மேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/09/blog-post_27.html

ஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா? திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

நீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா? இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


மேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள்? 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே! அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா? இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.

மேலும், பாடல் எழுதப் பயிற்சியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.

பாடல்: நினைவிலே மனைவி என்று
படம்: ச ரி க ம ப
பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
எழுதியவர்: உதயனன்.
இசை: ஸ்ரீகுமார்


இந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா? இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.

இதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் "மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015" இற்கான அறிவிப்பின் இணைப்பு.
http://valvaiyooraan.blogspot.com/2015/04/blog-post.html

Thursday, April 30, 2015

உங்கள் பாத்/கவிதைத் திறன் பற்றி எண்ணியதுண்டா?

இலக்கியங்களிலே கதையும் பாட்டும்
இரு கண்களாகத் தானிருக்கும் - அவ்
இரு கண்களாலே தான் - எந்த
மொழியிலுள்ள இலக்கியங்களையும்
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
கதையும் பாட்டும் புனைவதென்பது
கரும்பைப் பிழிந்து
சாறெடுப்பது போலத் தானிருக்கும்!
கதை என்றால் கதைச் சூழல்
கதைச் சூழலில் பங்கெடுக்கும் ஆள்கள்
(கதாபாத்திரங்கள்)
எல்லாம் கட்டியமைத்து
பக்கங்கள் நீண்டாலும் பக்குவமாக
இயல்பு வாழ்வைக் கண்டது போல
விருப்போடு வாசிக்கக் கூடியதாக
எளிமையான நடையில் எழுதவேண்டுமே!
பா/கவிதை, பாட்டு என்றால்
கதையை, உண்மையை, கருத்தை என
குறுக்கி, நறுக்கி நல்லிசை வரிகளில்
என்றும் அசைபோடத் தக்கதாக
சொல்களால் அடுக்கி ஆக்க வேண்டுமே!
கதையைப் படித்தால் எளிமை - ஆனால்
கதை என்றால் எளிதுமல்ல
பா/கவிதை, பாட்டு படித்தால் இனிமை - ஆனால்
பா/கவிதை, பாட்டு என்றால் இறுக்கமுமல்ல
அவரவர் ஆற்றலும் கைவண்ணமுமே!

"பதாகை" என்னும் வலைப்பூவில் "கம்பன் காதலன்" என்ற பதிவை அறிஞர் நாஞ்சில் நாடன் அவர்களின் "கம்பனின் அம்பறாத்தூணி" என்ற நூலிற்கான அறிமுகக் கட்டுரையாக அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கியிருந்தார். அவரது பதிவில் எடுத்துக்காட்டிற்காக கீழ்வரும் பா/கவிதை விளக்கம் இருந்தது.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே
(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

"பதாகை" என்னும் வலைப்பூவில் அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கிய "கம்பன் காதலன்" என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/

பாபுனைய விரும்பும் உறவுகளே!
நாஞ்சில் நாடன் அவர்களின்
பாத்/கவிதைத் திறன் எப்படி என
அறிஞர் செந்தில்நாதன் அவர்கள்
வெளிப்படுத்தியிருப்பதைப் படித்ததும்
உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியது?
ஐந்தடியில் ஒரு தனிப்பாடல் - அதில்
வில், கல், நெல், சொல் என வரும்
குறிலடுத்து வரும் எதுகை உடன்
அடிக்கொரு கதை அளக்கும் அழகு - அதை
வெளிக்கொணர எடுத்த சொல் குறைப்பு
கம்பனின் பாத்திறம் பகிர வந்த
நாஞ்சில் நாடன் பாவிலே பாரும்
பாபுனைய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய
பாத்/கவிதைத் திறன் பற்றியே - நீ
எண்ணிப்பார் நல்ல பாவலராகலாம்!
பாவலன்/கவிஞன் என்றால்
கரும்பைப் பிழிந்து சாறெடுப்பது போல
கம்பரின் இராமாயணத்தைப் பிழிந்து சாறாக்கி
நாஞ்சில் நாடன் தந்த பாப்போல
பாப்புனைவோர் என்று என்றும் மறவாதீர்!
"கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்தியது
கிட்டத்தட்ட மூன்று இலட்சம் சொல்களாம்
10368 பாடல்கள், ஒவ்வொன்றும் நான்கடிகள்,
அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால்
ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள்,
சில ஓரசைச் சீர்கள்,
சில ஈரசைச் சீர்கள் - அவற்றில்
திரும்பத் திரும்பப் பயன்படுத்திய
சொல்களைக் கழித்துப் பார்த்தால்
ஒன்றரை இலட்சம் சொல்கள்
இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு" என
அறிஞர் செந்தில்நாதன் சுட்டிக் காட்டியதை
கணக்கில் எடுத்து எண்ணிப் பார்த்தால்
நெடுங்கதையும் பெருங்கதையும் வந்தாலும்
பாவிலே சொல் எண்ணிக்கை குறைந்தாலும்
குறுகிய சொல்கள் எடுத்துச் சொல்லும்
பொருள் விரிப்பும் இசைக்கும் பாவழகும்
பாப்புனைவோர் காட்டும் பாத்திறம் என்பேன்!

Tuesday, April 14, 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Tuesday, March 31, 2015

பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

யாழ்பாவாணன் எழுதுவதெல்லாம்
பா (கவிதை) அல்ல - வெறும்
பா (கவிதை) நடையே - அதை
படியெடுத்தால் பாவாக்க (கவிதையாக்க) முடியாதே!
புதிதாய்ப் பாப்புனைய (கவிதையாக்க) விரும்புவோர்
புதுப்பா (புதுக்கவிதை) புனைய (ஆக்க) விரும்புவோர்
பாவலர் மூ.மேத்தா அவர்களின்
கண்ணீர்ப் பூக்களைப் படிக்கலாம்...
பாவலர் வைரமுத்து அவர்களின்
கவிராஜன் கதை படிக்கலாம்...
படித்துச் சுவைத்ததைப் பகிராமலே
படித்துச் சுவைத்ததைப் போலவே
பாப்புனையத் (கவிதையாக்கத்) தான் முயன்றாலும்
பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

கால்களை மேயும் கண்களால் கண்டதை
மீளவும் உள்ளக் கண்ணால் பார்த்தே
எண்ணமிட்டுப் (கற்பனை செய்து) பாரும்...
"வாலை ஒருவள் வந்த வழியைப் பாரேன்
காலைத் தூக்கி வைத்து நடப்பதைப் பாரேன்
வைத்த கால்ப் பெருவிரலின் போக்கைப் பாரேன்
நேர்கோடு ஒன்றில் பயணிப்பதைப் பாரேன்
நடைபயிலும் வாலையின் சுடும்காலைப் பாரேன்
சித்திரை வெயிற்றரை வாட்டுவதைப் பாரேன்" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"கால்நடைகள் நடக்கும் வீச்சுநடை போல
வீசும்காற்றுக்குத் தள்ளாடும் கமுகு போல
கண்முன்னே மண்விழுவான் நெழிவார் போல
வழியெதிரே ஆடியாடி விழுவார் போல
விழிமங்கக் குடித்தவர் வழியிலே வீழவே
வந்தகாற்று உடைபிடுங்க ஆளோ அம்மணம்!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

முகம் பார்க்கும் கண்ணாடியிலே கொஞ்சம் - தங்கள்
மூஞ்சியைப் பார்த்தால் பாப்புனைய முடியாதாம்
தெருவால போறவங்க மூஞ்சியைப் பார்த்தே
எத்தனை எத்தனை பாப்புனையலாம் பாரும்...
"செக்கச் சிவந்த பொட்டு இட்டவளே
கழுத்திலே மின்னும் கொடி போட்டவளே
கிட்ட வந்தவேளை கண்டுகொண்டேன் - உன்னை
எட்ட விலத்தி நடக்கிறேன் என்னவளைத் தேடி" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"திறந்த சட்டைக்குள்ளே தெரிவது தங்கச்சங்கிலி
தலையை வாரிவிடும் கையிலே மின்னுவது மோதிரம்
எல்லாமே தங்கப்பூச்சோ வாடகையோ - உன்
நடிப்பைக் கண்டு நானும் விலகினேனே - என்
தங்கமான என்னவனைத் தேடியே" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

"நெஞ்சிலே தெரிவது எலும்பும் தோலுமே" என்று
கண்ணுக்கு எட்டிய ஆணைப் பார்த்தும்
"நெஞ்சிலே தெரிவது நீர்வீழும் வீழ்ச்சியோ" என்று
கண்ணுக்கு எட்டிய பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்கு மேலேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!
"நெடுநாள் அடக்கம் எவளை முடக்குமோ" என்று
எட்டி நடைபோடும் ஆணைப் பார்த்தும்
"நெடுநாள் முடக்கம் என்றோ அம்மாவாக்கவே" என்று
எட்டி நடைபோடும் பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்குக் கீழேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!

வழியிலே கண்டவர் வயிற்றைப் பார்த்து
வழியிலே நின்றவர் பேச்சைக் கேட்டு
பாப்புனைதல் (கவிதையாக்கல்) என்ற மலையின்
அடியில் ஊரும் எறும்பாகிய நாமும்
துளிப்பா (கைக்கூ) ஆயினும் புனைய முடியாதோ?
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
தப்பாமல் நீண்டு மின்னும் வயிறானவள்
நமக்கு ஆகாதவள் ஆச்சே!" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
நீண்டு மின்னும் குடிகாரன் வயிறாச்சே
நமக்கு ஆகாதவன் ஆனானே!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

கல்லெறியோ சொல்லடியோ விழுந்தாலும் - நீ
மேலேமேய்வதையோ கீழேமேய்வதையோ விட்டிட்டு
நாட்டுக்கு நல்ல செய்தி சொல்ல - உன்
பாட்டுக்குச் சொல்லெடுத்து அடியமைத்து
பாப்புனைய (கவிதையாக்க) விரும்புங்கள் உறவுகளே!
பேச்சளவில் பாவலர் என்றெவர் சொன்னாலும்
எழுத்தளவில் எண்ணமிடலை (கற்பனையை) வைத்தே உணரலாம்
பாப்புனைய விரும்பும் உறவுகளே! - கொஞ்சம்
எண்ணமிடலை (கற்பனையை) வளப்படுத்தினால் பாரும்
பாவலராக வேறென்ன தகுதிவேண்டும் உமக்கு!