Thursday, April 30, 2015

உங்கள் பாத்/கவிதைத் திறன் பற்றி எண்ணியதுண்டா?

இலக்கியங்களிலே கதையும் பாட்டும்
இரு கண்களாகத் தானிருக்கும் - அவ்
இரு கண்களாலே தான் - எந்த
மொழியிலுள்ள இலக்கியங்களையும்
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
கதையும் பாட்டும் புனைவதென்பது
கரும்பைப் பிழிந்து
சாறெடுப்பது போலத் தானிருக்கும்!
கதை என்றால் கதைச் சூழல்
கதைச் சூழலில் பங்கெடுக்கும் ஆள்கள்
(கதாபாத்திரங்கள்)
எல்லாம் கட்டியமைத்து
பக்கங்கள் நீண்டாலும் பக்குவமாக
இயல்பு வாழ்வைக் கண்டது போல
விருப்போடு வாசிக்கக் கூடியதாக
எளிமையான நடையில் எழுதவேண்டுமே!
பா/கவிதை, பாட்டு என்றால்
கதையை, உண்மையை, கருத்தை என
குறுக்கி, நறுக்கி நல்லிசை வரிகளில்
என்றும் அசைபோடத் தக்கதாக
சொல்களால் அடுக்கி ஆக்க வேண்டுமே!
கதையைப் படித்தால் எளிமை - ஆனால்
கதை என்றால் எளிதுமல்ல
பா/கவிதை, பாட்டு படித்தால் இனிமை - ஆனால்
பா/கவிதை, பாட்டு என்றால் இறுக்கமுமல்ல
அவரவர் ஆற்றலும் கைவண்ணமுமே!

"பதாகை" என்னும் வலைப்பூவில் "கம்பன் காதலன்" என்ற பதிவை அறிஞர் நாஞ்சில் நாடன் அவர்களின் "கம்பனின் அம்பறாத்தூணி" என்ற நூலிற்கான அறிமுகக் கட்டுரையாக அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கியிருந்தார். அவரது பதிவில் எடுத்துக்காட்டிற்காக கீழ்வரும் பா/கவிதை விளக்கம் இருந்தது.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே
(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

"பதாகை" என்னும் வலைப்பூவில் அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கிய "கம்பன் காதலன்" என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/

பாபுனைய விரும்பும் உறவுகளே!
நாஞ்சில் நாடன் அவர்களின்
பாத்/கவிதைத் திறன் எப்படி என
அறிஞர் செந்தில்நாதன் அவர்கள்
வெளிப்படுத்தியிருப்பதைப் படித்ததும்
உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியது?
ஐந்தடியில் ஒரு தனிப்பாடல் - அதில்
வில், கல், நெல், சொல் என வரும்
குறிலடுத்து வரும் எதுகை உடன்
அடிக்கொரு கதை அளக்கும் அழகு - அதை
வெளிக்கொணர எடுத்த சொல் குறைப்பு
கம்பனின் பாத்திறம் பகிர வந்த
நாஞ்சில் நாடன் பாவிலே பாரும்
பாபுனைய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய
பாத்/கவிதைத் திறன் பற்றியே - நீ
எண்ணிப்பார் நல்ல பாவலராகலாம்!
பாவலன்/கவிஞன் என்றால்
கரும்பைப் பிழிந்து சாறெடுப்பது போல
கம்பரின் இராமாயணத்தைப் பிழிந்து சாறாக்கி
நாஞ்சில் நாடன் தந்த பாப்போல
பாப்புனைவோர் என்று என்றும் மறவாதீர்!
"கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்தியது
கிட்டத்தட்ட மூன்று இலட்சம் சொல்களாம்
10368 பாடல்கள், ஒவ்வொன்றும் நான்கடிகள்,
அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால்
ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள்,
சில ஓரசைச் சீர்கள்,
சில ஈரசைச் சீர்கள் - அவற்றில்
திரும்பத் திரும்பப் பயன்படுத்திய
சொல்களைக் கழித்துப் பார்த்தால்
ஒன்றரை இலட்சம் சொல்கள்
இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு" என
அறிஞர் செந்தில்நாதன் சுட்டிக் காட்டியதை
கணக்கில் எடுத்து எண்ணிப் பார்த்தால்
நெடுங்கதையும் பெருங்கதையும் வந்தாலும்
பாவிலே சொல் எண்ணிக்கை குறைந்தாலும்
குறுகிய சொல்கள் எடுத்துச் சொல்லும்
பொருள் விரிப்பும் இசைக்கும் பாவழகும்
பாப்புனைவோர் காட்டும் பாத்திறம் என்பேன்!

8 comments:

  1. அறிஞர் செந்தில்நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான பதிவு ...

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. சிறந்த கருத்தாக்கம் நன்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.