Thursday, April 18, 2013

தனி எழுத்தால் பா புனைவீரா?


எழுதுவோரெல்லோரும் எழுத்தில் பெரியோரா? இல்லை என்றாலும் எழுத்தாலே பெரியோரானனோரும் இருந்தும் உள்ளனரே! அப்படி ஒரு பெரியவர் தான் காளமேகப் புலவர் என்பேன். "கவி காளமேகத்தின் நாவில் கலைமகள் (சரஸ்வதி) குடியிருப்பதால் தான், எடுத்த எடுப்பிலே அடுத்த மணித்துளிக்குள் கொடுத்த தலைப்பிலே பா புனையும் திறன் அவருக்கிருந்தது." என்று நம்மூர் பெரியவர்கள் கூறுவர். அவர் சக்தியின் அருளைப் பெறப் பல பாக்களைப் பாடியும் உள்ளார்; சக்தியின் அருளைப் பெற்றுமுள்ளார். அது பற்றிப் பிற பதிவில் விளக்குகிறேன்.

காளமேகப் புலவர் பல போர்க்களங்களைக் கண்ட பா புனையும் போராளி என்பேன். அதாவது, அவரிடம் பல வேண்டுதல்களை முன்வைத்து அதற்கேற்பப் பா புனைய வலியுறுத்தியும் முடியாவிட்டால் ஒறுப்புத்(தண்டனை) தருவதாகவும் அவருக்கெதிராகப் பலர் போராடியுமிருந்தனர். காளமேகமோ எதற்கும் தயாரெனப் பா புனைந்து வெற்றியும் கண்ட போராளி என்பேன். அவரது வெற்றிக்குச் சக்தியின் அருள் காரணமல்ல, அவரது தமிழ்ப் புலமை தான் காரணம்.

காளமேகப் புலவர் தமிழெனும் கடலை நீந்திக் கடந்தவரென்று சொல்லுமளவுக்கு தமிழில் புலமை மிக்கவர் எனலாம். எந்தச் சொல்லையும் எப்படியும் அமையும் (போற்றுவதாய், தூற்றுவதாய், நன்மையாய், தீமையாய், உயர்வாய், இழிவாய்) வண்ணம் பா புனைவதில் வல்லவர். நகைச்சுவையாகவும் குத்தலாகவும் நையாண்டி செய்து பாப்புனையக் கூடியவர். அவரது சொல்லாட்சிக்கு நிகர் வேறு யாருமில்லை என்றே சொல்லலாம்.

நான்கு சீர் கொண்ட மூன்றடியும் மூன்று சீர் கொண்ட ஈற்றடியுமாகப் பன்னிரண்டு இராசிகளின் பெயரை வைத்து வெண்பா ஒன்று உங்களால் பாட முடியுமா? இதோ காளமேகப் புலவரின் வெண்பா ஒன்று. பன்னிரண்டு இராசிகளின் பெயரும் முறையும் தொகையும் அடைமொழி இல்லாமல் ஒரே வெண்பாவில் அமைத்துப் பாடிய பாவிது.

பகருங்கால் மேடம்இட பம்துனம் காக்க
டகம்சிங்கம், கன்னி, துலாம்,விர்ச் - சிகம்,த
நுசுமகரம், கும்பம்மீ னம்பன்னி ரண்டும்
வசையறும்இ ராசி வளம்.

காளமேகப் புலவரின் சொல்லாட்சிக்கு மேற்காணும் பாடலென்றால்; அவரின் எழுத்தாட்சிக்குக் கீழ்க் காணும் பாடல்களைப் பாரும். காளமேகப் புலவரைக் கண்ட எவரோ 'க' என்ற எழுத்து மட்டுமே கொண்டிருக்கப் பாடல் ஒன்று புனையுமாறு கேட்கக் கீழ்வரும் பாடலைப் புனைந்துள்ளார் என்றால் பாருங்களேன்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

"(கூகை – ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும்.
எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்." என்று அறிஞர் ஒருவர் இப்பாடலுக்கு அளித்த விளக்கத்தை இணையத் தளமொன்றில் பொறுக்கித் தங்களுடன் பகிருகிறேன்.

"என்ன காணும், காளமேகம் 'க' என்றதோட விட்டுவிட்டாரா?" என்று நீங்களும் கேட்கலாம். அது தான் அவரிடம் நடக்காதே! இப்படித்தான்  'த' என்ற எழுத்து மட்டுமே கொண்டிருக்கப் பாடல் ஒன்று புனையுமாறு கேட்கக் கீழ்வரும் பாடலைப் புனைந்துள்ளார் என்றால் பாருங்களேன்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

"தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)" என்று அறிஞர் ஒருவர் இப்பாடலுக்கு அளித்த விளக்கத்தை இணையத் தளமொன்றில் பொறுக்கித் தங்களுடன் பகிருகிறேன்.

புதிதாகப் பாபுனைய விரும்புவோருக்குக் காளமேகப் புலவரின் பா புனைதலுடனான போராட்ட நிகழ்வுகள் நல்லறிவைப் புகட்டுமென நம்புகிறேன். குறைந்த சொல் பாவனை அதாவது சிறந்த சொல்லாட்சி மற்றும் சுவை கொப்பளிக்கப் பாபுனையும் ஆற்றல் போன்றன காளமேகப் புலவரில் கண்டால் போதாது; ஒவ்வொரு புதிதாகப் பாபுனைய விரும்புவோரும் அவற்றைக் கையாள முற்பட்டால் பெரிய பாவலராக முடியுமே!

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)


4 comments:

  1. காளமேகப்புலவர் கவிச் சுரக்க பாடியமைக்கு தமிழ்ப் புலமை தான் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. அறிஞர் கவியாழி கண்ணதாசனின் கருத்தே; என் கருத்துமாகும்.

      Delete
  2. இது போல் மேலும் மேலும் தொடருங்கள் ஐயா... அறிந்து கொள்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அறிஞனும் ஒவ்வொரு வழியைக் கையாளுகிறான். நாமும் அவர்களைப் படித்தால் தானே முன்னேறலாம். எனவே, இவ்வாறான பதிவுகள் தொடரும்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.