முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே! மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடியும் சீரும் அடுத்து வரும் பாவின் முதலடியில் தொடங்கிய சீரும் ஒன்றாக அமைதலையே முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்கிறார்கள். அதாவது, முடிகின்ற சீராலேயே அடுத்துத் தொடங்குதல் எனலாம். மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல, அதிலும் இவ்வகைப் பாக்களைப் புனைவது இலகுவாக அமைய வாய்ப்பில்லை.
புதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், அந்த வகையில் புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! வழமை போன்று புதுக்கவிதை புனையும் வேளை முதற் பகுதியின் ஈற்றுச் சீர்(சொல்) அடுத்த பகுதியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமையும் வண்ணம் (அதாவது முடித்த சொல்லாலே தொடக்குதல்) முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனைய முயன்று பாருங்களேன்.
எப்போதும் எதுகை, மோனை கையாண்டால், எளிதாகப் பாக்களைப் படிக்க உதவுமே! ஆயினும் பாபுனையும் போது; முடிவுத்தொடங்கி(அந்தாதி)யாகப் பாபுனைந்தால் நினைவில் நிறுத்தவோ நினைவூட்டவோ முடியுமாமே! உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.
எடுத்துக்காட்டு:
படிக்க நினைத்து
நினைத்துப் படித்தபின் மறந்து
மறந்தும் படித்ததை மீட்டு
மீட்டுப் பார்க்கையில் படித்ததன் பயன்
பயன் ஈட்டும் போதே புரியும்
புரியும் ஐயா படிப்பின் அருமையும்!
என்னங்க, முதற் பகுதியின் ஈற்றுச் சீர்(சொல்) அடுத்த பகுதியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமைய வேண்டுமென்றவர்; ஆறு வரியில படிப்பின் அருமையைச் சொல்லுறாரே என்கிறீர்களா?
இரு பகுதிகளைக் கொண்ட ஒரு புதுப் பா(கவிதை) புனையாமலே, ஒரே புதுப் பாவி(கவிதையி)லே ஒவ்வொரு அடி(வரி)யின் ஈற்றுச் சீரு(சொல்லு)ம் அடுத்து வரும் அடியின் தொடக்கச் சீர்(சொல்) ஆக அமையப் புனைந்து விட்டேன். இதனை மரபுப் பாவி(கவிதையி)லே சீரந்தாதி என்பர்.
என்னடா இவரு முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்றார்; பின்னர் சீரந்தாதி என்று புனைந்து காட்டுகிறார்; ஒன்றுமே புரியலே என்கிறீர்களா? இதற்குத் தானண்ணே, அறிஞர்களின் கருத்தைக் கீழே தருகின்றேன் படிக்கவும்.
"ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் தொடக்கச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்." என்பதற்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF என்னும் விக்கிப்பீடியா தமிழ்ப் பதிப்பில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.
அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:
ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி என விக்கிப்பீடியா தெரிவிக்கின்றது.
இதைவிட இன்னும் அழகாக, முடிவுத்தொடங்கி(அந்தாதி)யின் வகைகளை அலசுகிறார் அறிஞர் இளம்பூரணர். அறிஞர் இளம்பூரணர் கூறுவதை http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88 என்னும் விக்கிப்பீடியா தளத்தில் பார்க்கலாம். அதனைக் கீழே தருகின்றேன். அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே
மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி
மேற்படி விக்கிப்பீடியா தளத்தில் பொறுக்கித் தந்த எடுத்துக் காட்டுகளுடன் மரபுக்கவிதையில் பேணப்படும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய தெளிவைப் பெற்ற உங்களுக்கு அதிகம் பேசப்படும் பக்திப் பாடல்களில் 'அபிராமி அந்தாதி' ஐ மறந்திருக்க மாட்டியள். அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக அதில் முதல் மூன்று பாடல்களைத் தருகின்றேன்.
1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.
3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
பிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
http://www.thamizhisai.com/devotional-songs/seerkazhi-govindarajan/sg01_abirami-andhathi.php
http://www.thamizhisai.com/devotional-songs/seerkazhi-govindarajan/sg02_abirami-andhathi.php
புதுக்கவிதை விரும்பிகளே! புதுக்கவிதையிலும் இப்படி முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! என இன்னோர் எடுத்துக்காட்டைத் தருகிறேன். புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) எழுத முயற்சி செய்யும் போது சற்று இறுக்கமாகப் புனைவீர்கள் என நம்புகின்றேன்.
அழகி ஒருத்தியை அணுகி
அணுகிய உடனே கேட்டேன் காதலை...
காதலாவது கத்தரிக்காயாவது என அறைந்தாள்
அறைந்தாளே குதிக்கால் பாதணியாலே!
பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!
பிள்ளைகளாலே என்ன பயன்
பயன் என்னவோ பாதணி அடி வேண்டி
அடி வேண்டித் தானண்ணே காதலாம்
காதலாம் வந்ததாம் படிப்புப் பாழாப் போச்சாம்
படிப்புப் பாழாப் போச்சு என எண்ணி
எண்ணிப் பார்த்தால் அறிவீர்
அறிவீர் உழைப்புப் பிழைப்பும் போச்சே!
பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)