Sunday, November 17, 2013

பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாவலனுக்கு (கவிஞனுக்கு) பழிப்பும் நெழிப்பும் கேலியும் நையாண்டியும் நகைச்சுவையும் என எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்பதான் வாசகர் மகிழ்வடையத்தக்க பாபுனையலாம்.

புகழ்வது போல இகழலும் இகழ்வது போலப் புகழலும் தமிழில் பாபுனையும் போது கையாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக ஓரிரு வரிகள்:
"சிறிலங்காப் படையில் சேருவோம் வாருங்கள்!
அழகான தமிழ்ப் பெண்களைக் கெடுக்கலாம்...
ஆயிரம் தமிழர் வீடுடைத்துத் திருடலாம்...
இலட்சம் கோடி பொன்பணம் பொறுக்கலாம்...
யாழ்போய் போராடினால் அத்தனையும் ஈட்டலாம்...
வாருங்கள் சிறிலங்காப் படையில் சேருவோம்!" என்றவாறு அமைய

ஈழத்து யாழ்பாணத்துப் பாவலர் பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் 1990களில் கவியரங்கொன்றில் பாடிய கவிதையை நான் மறந்தாலும் எனது வரிகளில் அவரது பாபுனை திறனைச் சொல்ல முனைகிறேன்; தவறிருந்தால் என்னை அடித்து நொருக்குங்கள் (ஒறுப்புத் தரலாம்).

ஈழத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் சிங்களத் தலைவர்கள் எனது வரிகளில் குறிப்பிட்டவாறே ஆள்திரட்டினர். அப்படியாயின் சிங்களவருக்குப் புகழ் சேர்க்கும் வரிகள். அப்படிப் புகழ்ந்து பாடித் தமிழர் படும் துயரை வெளிப்படுத்தல்; சிங்களப் படையை இகழ்வதாகவே முடியும். இவ்வாறு சிங்களப் படையைப் புகழ்வதாகப் பாடி இகழ்ந்து, தமிழர் துயரை வெளிப்படுத்திய சா.வே.பஞ்சாட்சரம் அவர்களின் பா (கவிதை) கிடைத்தால் பிறிதொரு பதிவில் தருவேன்.

இனி "பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?" என்ற கதைக்கு வருவோம். பாரதியைப் பற்றிய கதை ஒன்றைச் செய்தி ஏடு ஒன்றில் படித்தேன். அதனைச் சுருக்கிச் சொல்கிறேன்.

எட்டையபுர அரசவையில் புலவர்கள் எல்லோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து நிகழ்வில், அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் (அவரது அகவை 16 - 17 தானாம்) பாரதியை இகழ (அவமானப்படுத்த) எண்ணியிருந்தார். அதற்கு அவர் "பாரதி சின்னப் பயல்!” என்று ஈற்றடி அமையும் வண்ணம் ஐந்து மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 அகவைக்குள். அப்படியாயின் புலவர் காந்திமதி நாதருக்கு பாரதி இளையவர் தான். புலைமையை அரங்கேற்றும் அந்நிகழ்வில் பாரதி கையாண்ட நுட்பத்தைப் பாருங்களேன்.

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

"தான் இளையவன் என்ற இறுமாப்பில், தன்னை இகழ்ந்து கேலி செய்ய முறையற்ற இருண்ட உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்" என மேற்படி பாரதி கேலி பண்ணிப் பாடினார். அதைக் கேட்ட புலவர் காந்திமதி நாதரோ தலையைக் கீழே போட்டார். எப்படியோ புலவர் காந்திமதி நாதரின் தலைக்குனிவைப் போக்க பாரதி இன்னொரு பாடலையும் பாடினாராம்.

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

அகவையில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதரின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்துப் புகழ்ந்து பாடினார்.

முடிவாக முதற் பாடலில் தன்னை ஒரு சிறந்த பாவலன் (கவிஞன்) என்றும் இரண்டாம் பாடலில் தன்னை ஒரு சிறந்த மனிதன் என்றும் பாரதி நிருபித்துக் காட்டியுமுள்ளான். இப்படி நம்மாளுகளில் எத்தனை பேருள்ளனர்.

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?  பார் + அதி = (ர் + அ = ர) பாரதி என்ற சொல்லாட்சியைப் பார்த்தீரா? மேலும் பாவலனுக்குக் (கவிஞனுக்குக்) கேலி பண்ணத் தெரிந்தால் போதாது, தமிழில் இலக்கண திறமையும் வேண்டும். பாபுனைய விரும்புங்கள்; அதேவேளை பாபுனையத் தேவையான தமிழிலிலக்கணத் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

Friday, November 8, 2013

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

உவர் யாழ்பாவாணன் "நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?" என்று கேட்க வந்திட்டார் என்று... நீங்கள் துள்ளுவது எனக்குத் தெரியும். பெரும்பாலானோருக்குப் பா (கவிதை) என்றால் முழு நெல்லிப் புளி போல... உண்மையிலே, எனது வாழ்க்கைத் துணைகூட ரமணிச்சந்திரனின் பொத்தகமென்றால் சமைக்கவும் மாட்டாள்; தூங்கவும் மாட்டாள்; கதையிலே மூழ்கி விடுவாள். வாசகரிடையே பாவைப் (கவிதையைப்) பிடிக்காதவர்களும் (அதாவது, கதை விரும்பிகளும்) இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்றைய இளசுகளுக்கு மூ.மேத்தாவின் புதுப்பா (புதுக்கவிதை) நூல்கள் ஏற்படுத்திய மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு புதுப்பாவையே (புதுக்கவிதையையே) விரும்புகின்றனர். இத்தனைக்கும் மூ.மேத்தா ஒரு தமிழ் பேராசிரியர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதத் தெரிந்த மூ.மேத்தா இளசுகளின் உள்ளத்தைக் கொள்ளையிட புதுப்பா (புதுக்கவிதை) எழுதினாரோ எனக்குத் தெரியாது.

புதுப்பா (புதுக்கவிதை) எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சட்டுப் புட்டென்று படிக்கச் (வாசிக்கச்) சுகமளிக்கும். இலக்கண வேலிகள் இதற்கில்லை. ஆயினும் உணர்வு வீச்சு, மூச்சான அடி எனச் சில இலக்கண எல்லைகள் இருக்கும். புதுப்பா (புதுக்கவிதை) இலகுவானது என்றாற் போல, உவன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் கிறுக்குவது போல சிலர் கிறுக்கலாம். பாடலாசிரியர் வைரமுத்து போன்று இறுக்கமான புதுப்பா (புதுக்கவிதை) புனைவோர் பலருண்டு. வாசகரிடையே மூ.மேத்தா, வைரமுத்து போன்று எழுதுவோரின் தரமான புதுப்பாவை (புதுக்கவிதையை) விரும்புவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கோட்பாட்டுப் (தத்துவப்) பாட்டென்றால் பாவரசர் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். அவருடையை பாட்டு இலக்கணப் பா (மரபுக்கவிதை) சார்ந்தது. அவர் இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதினால் தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருமந்திரம், திருப்புகள் மட்டுமல்ல ஔவை, வள்ளுவர், கம்பர் போன்றோர் பாடிய பாக்களில் இருந்து பொறுக்கிய முத்துக்களையும் சேர்த்துப் புனைந்த பாவலர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்றால்; இலக்கண வேலிக்குள்ளேயே நின்று எழுதினால் சுவையிருக்காது என்பதனை உணர்ந்தே பாவரசர் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ எனக்குத் தெரியாது.

இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்பது பலாப்பழம் போல... பலாப்பழத் தோலை அகற்றி; நாரை அகற்றிச் சுளையெடுத்துச் சுவைப்பது போல; இலக்கணப் போர்வையிலிருந்து இலக்கணப் பாவின் (மரபுக்கவிதையின்) பொருளறிந்தால் சுவையிருக்கும். இலக்கணப் பா (மரபுக்கவிதை) வைரம் போல... வைரம் பட்டை தீட்டப் பளிச்சிடுவது போல... இலக்கணப் பாவில் (மரபுக்கவிதையில்) உள்ள இலக்கணப் போர்வையை உரிக்க உரிக்க சுவையிருக்குமாம். இந்த நுட்பத்தை அறிந்தவர்கள் இலக்கணப் பா (மரபுக்கவிதை) மீது தான் நாட்டம் கொள்கின்றனர்.

இலக்கிய விரும்பிகள் (வாசகர்கள்), இலக்கியப் படைப்பாளிகள் இலக்கியத்துறையில் பல பிரிவுகளில் நாட்டம் கொண்டாலும் சிறப்பாக ஒன்றையே விரும்புவர். நீங்கள் புதுப்பாவையா (புதுக்கவிதையையா) அல்லது இலக்கணப் பாவையா (மரபுக் கவிதையையா) அல்லது பாக்களில் (கவிதைகளில்) விருப்பமில்லையா என்பதனை கீழ்வரும் கருத்துக்கணிப்பூடாகத் தெரிவியுங்கள் பார்ப்போம். இக்கருத்துக் கணிப்புப் பாபுனைய விரும்புவோருக்கு ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன்.

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

வாக்குப் போட்டாச்சா? உங்கள் விருப்புக்கான விளக்கத்தையும் சொல்லுங்க... அப்ப தான், உங்கட பேச்சை நம்பி; நம்மாளுகள் எழுதுகோல் ஏந்தி உலகெங்கும் தமிழ் பரப்ப முன்வருவாங்க!